

நம்ம சூரிய குடும்பம்ங்கிறது ஒரு பெரிய வீடு மாதிரி. இதுக்குள்ள கோள்கள், விண்கற்கள்னு நம்ம சொந்தக்காரங்க சுத்தி வர்றாங்க. ஆனா, அப்பப்போ வெளியிலிருந்து சில சொந்தக்காரங்க ('Interstellar Objects') வர்றதுண்டு. அப்படி வந்த 'ஓமுவாமுவா' (Oumuamua)-ங்கிற விண்கல் ஒரு சுருட்டு மாதிரி நீளமா இருந்து நம்மள குழப்புச்சு. அடுத்து 'போரிசோவ்' (Borisov) வந்து எட்டிப் பார்த்துட்டுப் போச்சு. இப்போ, மூணாவதா ஒரு ஆள் வந்திருக்கு. பேரு 3I/Atlas. இந்த ஜூலை 2025-ல கண்டுபிடிச்ச இந்த ஆள், இப்போ செவ்வாய் கிரகத்துக்குப் பக்கத்துல வந்துடுச்சு. ஆனா, இது நம்ம விஞ்ஞானிகளை ரொம்பவே குழப்பி, "ஏதோ தப்பா நடக்குதே!"ன்னு யோசிக்க வச்சிருக்கு.
இந்த 3I/அட்லஸ் ஒரு சாதாரண விண்கல் இல்லை. இதோட வயசு சுமார் 700 கோடி வருஷமாம்! நம்ம சூரிய குடும்பத்தோட வயசே 450 கோடி வருஷம்தான். அப்படின்னா, இது நம்ம சூரியன் பிறக்குறதுக்கு முன்னாடியே உருவான ஒரு 'தாத்தா' விண்கல். இது டைனோசர்களை அழிச்ச விண்கல்லை (10 கி.மீ) விட பெருசு, சுமார் 11 கி.மீ அகலம் கொண்டது. சரி, வயசானதுதான் மர்மமான்னு கேட்டா, இல்ல. அதோட நடவடிக்கைகள்தான் ரொம்பவே விசித்திரமா இருக்கு.
விஞ்ஞானிகள் ஜேம்ஸ் வெப் டெலஸ்கோப்பை வச்சு இதை ஆராய்ச்சி செஞ்சப்போ, சில அதிர்ச்சியான விஷயங்கள் தெரிஞ்சது. முதலாவது, இதுல கரியமில வாயு (CO2) அல்லது 'டிரை ஐஸ்' அதிகமா இருக்கு, ஆனா தண்ணி ஐஸ் ரொம்பக் கம்மியா இருக்கு. இதுவே ஒரு குழப்பம்தான்.
இதைவிடப் பெரிய குழப்பம், சமீபத்துல நமீபியாவுல இருந்து பார்த்தப்போ, இந்த விண்கல் பச்சை நிறத்துல ஒளிர்ந்திருக்கு. வழக்கமா, வால்நட்சத்திரங்கள் பச்சை நிறத்துல ஒளிர்றதுக்குக் காரணம் 'டை-கார்பன்' (Dicarbon) ங்கிற ஒரு பொருள்.
ஆனா, அட்லஸ்ல அந்தப் பொருளே இல்லையாம்! இதுல இருக்கிற சயனைடு (Cyanide) ஊதா நிறத்தில்தான் ஒளிரணுமே தவிர, பச்சை நிறத்தில் இல்லை. அப்புறம் எப்படி இந்த பச்சை நிறம் வந்துச்சு? இது முதல் மர்மம்.
ரெண்டாவது மர்மம், இதோட வேகம். எந்தவொரு வால்நட்சத்திரமும் சூரியனுக்குப் பக்கத்துல வரும்போது, அதுல இருக்கிற ஐஸ் உருகி, கேஸ்ஸா வெளியேறி, ஒரு ராக்கெட் மாதிரி அதோட வேகத்தை மாத்தும். முன்ன பின்ன போகும்.
ஆனா, இந்த 3I/அட்லஸ், கார்ல 'க்ரூஸ் கண்ட்ரோல்' போட்ட மாதிரி, ஆரம்பத்துல இருந்து இப்போ வரைக்கும் ஒரே சீரான வேகத்துல வந்துக்கிட்டு இருக்கு. ஒரு துளி கூட வேகம் மாறல. இது இயற்கையான விண்கல்லுக்கு சாத்தியமே இல்லைன்னு விஞ்ஞானிகள் தலையைப் பிச்சிக்கிறாங்க.
இப்போதான் கதை ஆரம்பிக்குது:
அதிகமான CO2, நிக்கல் இதெல்லாம் ஒரு ராக்கெட் இன்ஜின் புகையில இருக்கிற மாதிரி இல்லையா?
விளக்கமே கொடுக்க முடியாத இந்த பச்சை நிறம், ஒருவேளை அந்த விண்கப்பலோட லைட்டா இருக்குமா?
சீரான வேகம்... இது ஒரு இன்ஜின் இல்லாம எப்படி சாத்தியம்?
எல்லாத்துக்கும் மேல, பல வருஷத்துக்கு முன்னாடி நம்மளைத் திக்குமுக்காட வச்ச அந்த மர்மமான "வாவ்! சிக்னல்" (Wow! Signal) எந்தத் திசையிலிருந்து வந்துச்சோ, அதே திசையிலிருந்துதான் இந்த அட்லஸும் வந்துக்கிட்டு இருக்கு.
இதையெல்லாம் வச்சுப் பார்க்கும்போது, இது ஒரு வேற்றுக்கிரக விண்கப்பலா (Alien Spaceship) இருக்கலாமோன்னு ஒரு சந்தேகம் கிளம்புது.
உண்மையிலேயே இது ஏலியன் ஷிப்பா?
விஞ்ஞானிகள் சொல்றபடி, அதுக்கு 0.001% கூட வாய்ப்பில்லை. இது ஒரு இயற்கையான பொருளாதான் இருக்கும். ஆனா, 700 கோடி வருஷம் பழமையான, வேறொரு சூரிய குடும்பத்திலிருந்து வர்றதால, அதோட குணங்கள் நமக்குத் தெரிஞ்ச அறிவியலுக்கு அப்பாற்பட்டதா இருக்கலாம்.
செவ்வாய் கிரகத்தைச் சுத்தி வர்ற நம்ம விண்கலங்கள் இதை போட்டோ எடுத்திருக்கு. அடுத்த மாசம் (நவம்பர்), வியாழனை நோக்கிப் போயிட்டு இருக்கிற 'ஜூஸ்' (JUICE) விண்கலம் இதுக்கு பக்கத்துல போய் ஒரு ஹாய் சொல்லப் போகுது.
பிப்ரவரிக்குள்ள நமக்கு இன்னும் நிறைய உண்மைகள் தெரிய வரலாம். அதுவரைக்கும், இது ஏலியன் ஷிப்பா, இல்ல அதிசய விண்கல்லான்னு நாமளும் கொஞ்சம் கற்பனை பண்ணிப் பார்க்கலாம்.