

இன்றைய நவீன உலகில், ஸ்மார்ட்போன் என்பது வங்கி, அலுவலகம், கேமரா மற்றும் அந்தரங்க டைரி என அனைத்துமாகி விட்டது. ஆனால், நாம் கையில் வைத்திருக்கும் இதே ஸ்மார்ட்போன் நமக்கே ஒரு எதிரியாக மாறக்கூடும் என்பது உங்களுக்குத் தெரியுமா?
நீங்கள் செய்யும் ஒரு சிறு கவனக்குறைவு அல்லது வேடிக்கைக்காக சேமித்து வைக்கும் ஒரு புகைப்படம் உங்களை கம்பி எண்ண வைக்கலாம். உங்கள் போனில் எதெல்லாம் இருக்கக்கூடாது? எதெல்லாம் உங்களைச் சிக்கலில் தள்ளும்? (Mobile safety tips) என இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.
1. ஆபத்தான மற்றும் சட்டவிரோத வீடியோக்கள்:
இந்திய சட்டப்படி, குழந்தைகள் சம்பந்தப்பட்ட ஆபாச வீடியோக்களை பார்ப்பது, சேமிப்பது அல்லது பிறருக்குப் பரப்புவது ஜாமீனில் வெளிவர முடியாத, மிகக் கடுமையான குற்றமாகும். "யாரோ எனக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பினார்கள், நான் பார்க்கவில்லை" என்று நீங்கள் கூறினாலும் சட்டம் அதை ஏற்காது. உங்கள் போனில் அத்தகைய கோப்புகள் கண்டறியப்பட்டால், வாரண்ட் இல்லாமலேயே காவல்துறை உங்களைக் கைது செய்ய முடியும்.
2. போலி ஆவணங்கள் மற்றும் ஹேக்கிங் கருவிகள்:
அங்கீகரிக்கப்படாத ஐடி கார்டுகள், போலி ஆதார் அட்டைகள் அல்லது மற்றவர்களின் கணக்குகளை ஹேக் செய்ய உதவும் சாப்ட்வேர்களை உங்கள் போனில் வைத்திருப்பது சட்டப்படி குற்றம். ஆன்லைனில் பணம் சம்பாதிக்கலாம் என நினைத்து தரவிறக்கம் செய்யப்படும் சில 'Hacking Tools' உங்களை ஒரு குற்றவாளியாகச் சித்தரிக்கப் போதுமானவை.
3. வதந்திகள் மற்றும் வெறுப்புப் பேச்சுக்கள்:
சமூக வலைதளங்களில் மதக் கலவரத்தைத் தூண்டும் விதமாகவோ அல்லது குறிப்பிட்ட சமூகத்தைப் புண்படுத்தும் விதமாகவோ வரும் மெசேஜ்களை பார்வேர்ட் (Forward) செய்வதைத் தவிருங்கள். வதந்திகளைப் பரப்புவது 'சைபர் டெரரிசம்' கீழ் வரக்கூடும். குறிப்பாக, நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் தகவல்கள் உங்கள் போனில் இருந்தால் அது தேசத்துரோக வழக்காக மாற வாய்ப்புள்ளது.
4. தடை செய்யப்பட்ட மற்றும் 'ஸ்பை' ஆப்ஸ்:
அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட செயலிகள் அல்லது பிறரின் போனை உளவு பார்க்க உதவும் 'Spyware' செயலிகளை வைத்திருப்பது உங்களைச் சட்டச் சிக்கலில் மாட்டிவிடும். பல லோன் ஆப்ஸ் உங்கள் தகவல்களைத் திருடி பிளாக்மெயில் செய்யப் பயன்படுத்தப்படுகின்றன. தெரியாத நபர்களிடமிருந்து வரும் லிங்குகளைக் கிளிக் செய்து ஆப்ஸை இன்ஸ்டால் செய்யாதீர்கள்.
காவல்துறையிடம் அகப்படாமல் இருக்க நீங்கள் செய்ய வேண்டியவை:
உங்கள் போனில் ஒரு சட்டவிரோத வீடியோ அல்லது மெசேஜ் வந்தால், அதை உடனடியாக டெலிட் செய்யுங்கள். அதேசமயம், அவை கூகுள் டிரைவ் அல்லது கிளவுட் (Cloud) பேக்கப்பில் சேமிக்கப்படாமல் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
அறிமுகமில்லாத எண்களிலிருந்து வரும் போட்டோ, வீடியோக்களை டவுன்லோட் செய்யாதீர்கள். வாட்ஸ்அப்பில் 'Media Auto-download' வசதியை ஆஃப் செய்து வைப்பது சிறந்தது.
வாட்ஸ்அப்பில் "Disappearing Messages" வசதியை ஆன் செய்து வைப்பதும், 2-Step Verification பயன்படுத்துவதும் உங்கள் பாதுகாப்பை அதிகரிக்கும்.
வேடிக்கைக்காகவோ, ஆர்வத்திற்காகவோ எதையும் பகிராதீர்கள். சைபர் போலீஸ் உங்கள் போன் கேலரி மட்டுமல்லாமல், நீங்கள் அழித்த தரவுகளையும் மீட்கும் தொழில்நுட்பம் கொண்டவர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
உங்கள் ஸ்மார்ட்போன் உங்கள் பாதுகாப்பிற்கு உதவியாக இருக்க வேண்டுமே தவிர, அது உங்களுக்கே எதிராக மாறும் ஆயுதமாக இருக்கக்கூடாது. டிஜிட்டல் உலகில் விழிப்புணர்வுடன் இருப்பதே உங்களையும் உங்கள் குடும்பத்தையும் சட்டச் சிக்கல்களில் இருந்து காப்பாற்றும்.