இணையத்தைப் பயன்படுத்தும் அனைவருக்கும் மால்வேர் (Malware) பற்றி நிச்சயம் தெரிந்திருக்கும். ஹேக்கர்கள் இந்த மால்வேரை பயன்படுத்தி உங்கள் முக்கிய தகவல்களை திருடுவது முதல் வங்கி கணக்கில் உள்ள பணத்தை காலியாக்குவது வரை அனைத்து விதமான மோசடிகளையும் செய்வார்கள். சமீப காலங்களில் ஸ்மார்ட்போன்களில் மால்வேர் நுழைந்தால், அதை பயனர்களால் கண்டறியவே முடிவதில்லை. ஆனால், சில அறிகுறிகள் மூலம் உங்கள் மொபைலில் மால்வேர் இருக்கிறதா என்பதை எளிதாகக் கண்டறிய முடியும்.
1. தொடர்ந்து வரும் பாப்-அப் விளம்பரங்கள்:
உங்கள் போனில் மால்வேர் இருக்கும்பட்சத்தில், பாப்-அப் (pop-up) விளம்பரங்கள் வரும். இந்த விளம்பரங்கள் பயனர்கள் கிளிக் செய்யும்போது பணம் சம்பாதிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டவை. 2023-ஆம் ஆண்டில் மட்டும் கூகிள் பிளே ஸ்டோரில் 60,000-க்கும் மேற்பட்ட ஆட்வேர் (Adware) எனப்படும் விளம்பர மால்வேர்கள் இருந்தன. இது உங்கள் போனின் வேகத்தை குறைப்பதோடு, பயன்படுத்தும் அனுபவத்தையும் கெடுத்துவிடும்.
2. வேகமாக குறையும் பேட்டரி:
உங்கள் போனின் பேட்டரி வழக்கத்தை விட வேகமாக தீர்ந்துபோனால், உங்கள் போனில் மால்வேர் இருப்பதற்கான வாய்ப்பு அதிகம். இந்த மால்வேர்கள் பின்னணியில் (background) செயல்படுவதால், போனின் பேட்டரி வேகமாக குறைகிறது. சில மால்வேர்கள் ரகசியமாக வீடியோக்களை ஓடவிட்டு, பேட்டரியை காலியாக்கும்.
3. போனின் வேகம் குறைதல்:
சில நேரங்களில் மால்வேர்கள் போனின் உள் பாகங்களை ஆக்கிரமித்துக்கொள்வதால், போனின் வேகம் குறைந்துவிடும். இதனால், எளிய வேலைகளை செய்யக்கூட அதிக நேரம் எடுக்கும். சில செயலிகள் திடீரென செயல்படாமல் போவது (crash) கூட மால்வேர் காரணமாக இருக்கலாம்.
4. போன் அதிக சூடாகுதல் (Overheating):
பொதுவாக போன் அதிக நேரம் பயன்படுத்தும்போது சூடாகும். ஆனால், மால்வேர்கள் போனின் சிபியு-வில் அதிக சுமையை ஏற்படுத்துவதால், போன் தானாகவே சூடாகத் தொடங்கும். Loapi என்ற மால்வேர் போனை அதிக சூடாக்கும் திறன் கொண்டது. எனவே, எந்த வேலையும் செய்யாமல் போன் சூடானால், சிறிது நேரம் அதை அணைத்து வைப்பது நல்லது.
மால்வேரை எப்படி அகற்றுவது?
Safe Mode:
ஆண்ட்ராய்டு போன்களில் Safe Mode-ஐ செயல்படுத்தினால், மூன்றாம் தரப்பு செயலிகள் (Third-party apps) முடக்கப்படும். இதனால், மால்வேரை கண்டறிந்து நீக்குவது எளிதாகும்.
Anti-virus scan:
உங்கள் போனை நல்ல ஆன்டி-வைரஸ் செயலியை கொண்டு ஸ்கேன் செய்யலாம். இது மால்வேரை கண்டறிந்து நீக்க உதவும்.
Factory Reset:
மேற்கண்ட வழிகள் எதுவும் வேலை செய்யவில்லை என்றால், போனை ஃபாக்டரி ரீசெட் செய்யலாம். ஆனால், அதற்கு முன் உங்கள் முக்கியமான டேட்டாக்களை பேக்அப் எடுத்துக்கொள்ள மறக்காதீர்கள்.
இந்த எளிய வழிகளைப் பின்பற்றி உங்கள் போனை மால்வேரிடம் இருந்து பாதுகாத்துக்கொள்ளலாம். இணையத்தில் தெரியாத லிங்குகளை கிளிக் செய்யாமல் இருப்பதும், நம்பகத்தன்மையற்ற செயலிகளை பதிவிறக்காமல் இருப்பதும் மிகவும் முக்கியம்.