
தொழில்நுட்பம் நம் வாழ்வில் அவசியமாகிவிட்ட ஒன்றாகும். அது இல்லாத உலகத்தை நம்மால் கற்பனை கூட செய்து பார்க்க முடியாது. தொழில்நுட்ப வளர்ச்சி என்பது உழைப்பை எளிதாக்குவதற்கும், உற்பத்தி திறனை அதிகரிப்பதற்கும், புதிய கருவிகளையும், மேம்படுத்தப்பட்ட முறைகளையும், திறமையான செயல்முறைகளையும் கண்டறிந்து பயன்படுத்துவதாகும். இந்த தொழில்நுட்ப வளர்ச்சி புதிய கருவிகளை கண்டுபிடிப்பதன் மூலம் உடல் உழைப்பை குறைத்து, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், மனிதவள மேம்பாட்டிற்கும் உதவுகிறது. இது பல நன்மைகளையும் சவால்களையும் கொண்டுள்ளது. இருப்பினும் இவை பல தீமைகளையும் கொண்டுள்ளது என்பதை மறுக்க முடியாது.
வேலையிழப்பு மற்றும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள்:
தொழில்நுட்பம் வணிக உலகில் உள்ள அனைத்தையும் மாற்றிவிட்டது. இது நிறைய விஷயங்களை எளிதாகவும், வேகமாகவும் ஆக்கியுள்ளது. தொழில்நுட்பம் நம் அன்றாட வாழ்க்கையை மாற்ற தொடங்கியது.
தொழில்நுட்ப வளர்ச்சி பல தானியங்கு இயந்திரங்கள் மற்றும் கணினி அமைப்புகள் மூலம் மனித உழைப்பை குறைப்பதால், வேலை இழப்புகள் மற்றும் பணிநீக்கங்கள் ஏற்படுகின்றன. இது சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகளையும், சிலருக்கு அதிக லாபத்தையும், சிலருக்கு நஷ்டத்தையும் ஏற்பட வழிவகுக்கிறது.
மனித மூலதனத்தின் வீழ்ச்சி:
தொழில்நுட்பம் நம்மை அதிகளவில் சார்ந்திருக்கச் செய்வதால், மனிதர்கள் சிந்திக்கும் திறனையும், மனக்கணக்கீடுகளை செய்யும் திறனையும் இழக்க நேரிடுகிறது. இதனால் மனிதனின் நினைவாற்றல் மற்றும் நுண்ணறிவு போன்றவை பெருமளவில் குறைய வாய்ப்புகள் அதிகமுள்ளது. டிஜிட்டல் தகவல் தொடர்புகள் அதிகரிப்பது உண்மையான மனிதத் தொடர்புகளின் முக்கியத்துவத்தை குறைப்பதால் சமூகத் தனிமைப்படுத்தல் அதிகரிக்கலாம் என்ற அச்ச உணர்வும் எழுந்துள்ளது.
சமூக மற்றும் மனநல பாதிப்புகள்:
சமூக ஊடகங்கள் மற்றும் டிஜிட்டல் தொடர்பு, நேரடி மனித தொடர்புகளைக் குறைத்து விடுவதால் தனிமைப்படுத்தலை ஏற்படுத்துகிறது. தொடர்ச்சியான தொழில்நுட்ப பயன்பாடு மன அழுத்தம், பதட்டம் மற்றும் தனிமைப்படுத்தல் போன்ற மனநலப் பிரச்சனைகளுக்கும் வழிவகுக்கிறது. கல்வி மற்றும் வேலைச் சுழல்களில் தொழில்நுட்பம் மாணவர்களிடையேயும், பணியாளர்களிடையேயும் கவனச் சிதறலை ஏற்படுத்தும் வாய்ப்புகள் அதிகம். தொழில்நுட்பத்தை அணுக முடியாதவர்கள் பின்தங்கி, சமூகத்தில் சமத்துவமின்மையை அதிகரிக்கும்.
பாதுகாப்பு சிக்கல்கள்:
ஆன்லைன் மோசடிகள், தரவு திருட்டு மற்றும் சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் தங்கள் தரவுகளைப் பாதுகாப்பது ஒரு பெரிய சவாலாக அமைகின்றது. அங்கீகாரம் இல்லாமல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது பாதுகாப்பு சிக்கல்களுக்கு வழிவகுக்கும். தொழில்நுட்பம் ஒரு வரமாக இருந்தாலும், அதன் மீது அதிக அளவில் சார்ந்திருப்பது நமது அன்றாட வாழ்க்கை செயல்பாடுகளையும், முடிவெடுக்கும் திறன்களையும் பாதிக்கக்கூடும். வணிக நடவடிக்கைகள் ஆன்லைனில் அதிகமாக நகரும்பொழுது சைபர் தாக்குதல்களுக்கான ஆபத்து அதிகரிக்கிறது. வணிகங்கள் தங்கள் அமைப்புகள் மற்றும் தரவை பாதுகாக்க சிறப்பு மென்பொருள் மற்றும் பணியாளர் பயிற்சி உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளில் முதலீடு செய்ய வேண்டும். இல்லையெனில் அது நிறுவனத்தின் நற்பெயருக்கு சேதம் விளைவிக்கும்.
உடல் மற்றும் மனநல பிரச்சனைகள்:
தொடர்ந்து கணினி மற்றும் செல்போன் திரைகளை பார்ப்பதன் மூலம் சோர்வு, தலைவலி, கண் எரிச்சல், மோசமான தோரணை, குறைவான உடல் செயல்பாடு போன்ற உடல்நல குறைபாடுகள் ஏற்படுகின்றன. நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வதால் உடல் பருமன், இருதய நோய்கள் மற்றும் நீரிழிவு போன்ற உடல்நலப் பிரச்சனைகளும் ஏற்படுகிறது. திரைகளில் இருந்து வரும் நீல நிற ஒளி தூக்க சுழற்சிகளை சீர்குலைத்து, தூக்க கோளாறுகளை ஏற்படுத்தும்.
சைபர்புல்லிங், அடிமையாதல் மற்றும் சமூக ஒப்பீடு ஆகியவை பதட்டம், மனச்சோர்வு மற்றும் சுய மதிப்பு குறைவதற்கு பெருமளவில் பங்களிக்கின்றன. டிஜிட்டல் சாதனங்களின் அடிமையாக்கும் தன்மை நேருக்கு நேர் தொடர்புகளை குறைக்கிறது. சமூக உறவுகளை பலவீனப்படுத்துகிறது.
சூழலியல் பாதிப்பு:
தொழில்நுட்பம் ஏராளமான நன்மைகளை வழங்கினாலும் அதன் உற்பத்தி மற்றும் அகற்றல் செயல்முறைகள் சுற்றுச்சூழலில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். மின்னணு கழிவுகளை முறையற்ற முறையில் அகற்றுவது மாசுபாட்டிற்கு வழிவகுக்கிறது. அதிக தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக மின்னணு கழிவுகள் அதிகரிப்பதால் சுற்றுச்சூழல் மாசுபாடு ஏற்படக் காரணமாகிறது. ஸ்மார்ட் போன்கள் மற்றும் கணினிகள் போன்ற மின்னணு சாதனங்களில் ஈயம், பாதரசம் மற்றும் காட்மியம் போன்ற அபாயகரமான பொருட்கள் உள்ளன. இவை முறையாக அப்புறப்படுத்தப்படாவிட்டால் சுற்றுச்சூழலில் கசிந்து கடுமையான உடல்நலம் மற்றும் சுற்றுச்சூழல் அபாயங்களுக்கு வழி வகுக்கும்.
தகவல் தவறாக பயன்படுத்துதல்:
தகவல் தொழில்நுட்பத்தின் அபார வளர்ச்சி காரணமாக தவறான மற்றும் ஆபத்தான தகவல்கள் பரவுவதற்கான சாத்தியக்கூறுகளும் அதிகமாகின்றன. சமூகங்கள் தவறான தகவல்கள் மற்றும் போலி செய்திகளால் அதிகம் பாதிக்கக்கூடும். இது பொதுமக்களின் கருத்துக்களை சிதைத்து, தவறான தகவல்களைத் தூண்டி, ஜனநாயக செயல்முறைகள் மற்றும் பாதுகாப்பை கடுமையாக பாதிக்கும்.
எனவே இவற்றின் தீமைகளை அறிந்து, தொழில்நுட்பத்தை மிகவும் கவனமாகவும், பொறுப்புடனும் கையாள்வது அவசியம்.