தற்போது பல பணிகளை அலுவலகத்திற்கு செல்லாமலேயே வீட்டிலேயே செய்து முடிக்கலாம். பெரும்பாலான அரசு சேவைகள் கூட இப்போது ஆன்லைனிலே கிடைக்கிறது . அந்த வகையில் மக்களின் வசதிக்காக ஒவ்வொரு இந்தியரின் மொபைலிலும் இருக்க வேண்டிய 5 ஆப்ஸ் குறித்து இப்பதிவில் காண்போம் .
வாகனம் தொடர்பான சேவைகளுக்கான செயலியாக இருக்கும் M-Parivahan மூலம் பயனர்கள் தங்கள் பதிவுச் சான்றிதழ் (RC) மற்றும் ஓட்டுநர் உரிமத்தின் (DL) டிஜிட்டல் பதிப்புகளை அணுகி, RC மற்றும் DL தேடல்களை நடத்தலாம், மேலும் நகல் RCகளுக்கு விண்ணப்பித்து உரிமையை மாற்றலாம், ஹைப்போதெக்கேஷன் நீக்குவதோடு, பல்வேறு வாகனம் தொடர்பான பணிகளை இந்த ஆப் மூலம் எளிதாகச் செய்யலாம்.
ஆதார் அட்டையைப் பதிவிறக்குதல், முகவரி விவரங்களைப் புதுப்பித்தல், ஆதார் தகவலைச் சரிபார்த்தல் மற்றும் மின்னஞ்சல் அல்லது மொபைல் எண்களை இணைத்தல் உள்ளிட்ட ஆதார் தொடர்பான சேவைகளுக்கு தடையற்ற அணுகலை mAadhaar செயலி வழங்குகிறது.
மத்திய , மாநில அரசுகளின் சேவைகளை ஒருங்கிணைக்கும் பல்துறை மொபைல் ஆப்பாக உமாங் ஆப் இருக்கிறது . இந்த ஆப் மூலம், பயனர்கள் பான் கார்டுக்கு விண்ணப்பித்தல், எரிவாயு சிலிண்டர்களை முன்பதிவு செய்தல், பாஸ்போர்ட் சந்திப்புகளை திட்டமிடுதல், ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தல் மற்றும் ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பித்தல் போன்ற பல்வேறு பணிகளை தங்கள் ஸ்மார்ட்போன்களிலிருந்தே செய்து கொள்ள முடியும்.
பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிப்பது, பாஸ்போர்ட் சந்திப்புகளை திட்டமிடுவது, விண்ணப்பங்களின் நிலையை ஆன்லைனில் சரி பார்ப்பது போன்ற டிஜிட்டல் சேவை மூலம் பாஸ்போர்ட் வழங்கும் முறையை எளிமையாக்குகிறது mPassport சேவை செயலி.
அத்தியாவசிய மின்னணு ஆவணங்களை டிஜி லாக்கரில் சேமிக்க முடியும் . இந்த ஆப் தனிநபர்கள் வாக்காளர் ஐடி, பான் கார்டு, ஓட்டுநர் உரிமம் மற்றும் கல்வி மதிப்பெண் பட்டியல்கள் போன்ற முக்கியமான ஆவணங்களை ஒரே இடத்தில் பாதுகாப்பாக வைத்திருக்க உதவுவதோடு நகல்களை எடுத்துச் செல்ல வேண்டிய அவசியத்தை நீக்குகிறது.
அன்றாட மற்றும் அவசிய சேவைகளுக்கு உதவும் இத்தகைய டிஜிட்டல் ஆப்களை கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோர் இரண்டிலும் பதிவிறக்கம் செய்து பலன் பெறுங்கள்.