
இன்றைய நவீன உலகில், ஸ்மார்ட்வாட்ச்கள் மற்றும் ஃபிட்னஸ் டிராக்கர்கள் நமது அன்றாட வாழ்க்கையின் ஒரு அங்கமாக மாறிவிட்டன. ஆனால், நாள் முழுவதும் நமது தோலுடன் ஒட்டியிருக்கும் இந்த சாதனங்களின் பட்டைகள், உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் ரசாயனங்களை வெளிப்படுத்துவதாக அதிர்ச்சியளிக்கும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
அமெரிக்கன் கெமிக்கல் சொசைட்டியின் (ACS) சுற்றுச்சூழல் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் வெளியிட்ட ஆய்வின்படி, குறிப்பாக அதிக விலையுள்ள ஸ்மார்ட்வாட்ச்களின் பட்டைகள் பெர்ஃப்ளூரோஹெக்ஸானோயிக் அமிலம் (PFHxA) போன்ற தீங்கு விளைவிக்கும் பெர்- மற்றும் பாலிஃப்ளூரோஅல்கைல் பொருட்கள் (PFAS) எனப்படும் ரசாயனக் குழுவை வெளிப்படுத்துகின்றன. PFAS ரசாயனங்கள் நீர், வியர்வை மற்றும் எண்ணெயை விரட்டும் தன்மைக்காக அறியப்படுகின்றன. இவை கறை-எதிர்ப்புப் படுக்கைகள், மாதவிடாய் சுகாதாரப் பொருட்கள் மற்றும் ஸ்மார்ட்வாட்ச் பட்டைகள் உட்பட பல நுகர்வோர் பொருட்களில் பயன்படுத்தப்படுகின்றன.
ஸ்மார்ட்வாட்ச் பட்டைகள் நிறம் மாறாமல் இருக்கவும், அழுக்கு படியாமல் இருக்கவும் PFAS அடிப்படையிலான செயற்கை ரப்பர்கள் பயன்படுத்தப்படுகின்றன. நீடித்த உழைப்பு மற்றும் வியர்வையைத் தாங்கும் திறன் போன்ற காரணங்களுக்காக இவை சிறந்த தேர்வாக இருந்தாலும், இந்த ரசாயனங்கள் தோலின் மூலம் உடலுக்குள் சென்று பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும்.
இந்த ஆய்வை மேற்கொண்ட ஆராய்ச்சியாளர்கள், பல்வேறு பிராண்டுகளைச் சேர்ந்த 22 ஸ்மார்ட்வாட்ச் பட்டைகளை ஆய்வு செய்தனர். புதிய மற்றும் பயன்படுத்தப்பட்ட பட்டைகள் உட்பட, இந்த ஆய்வில் அதிக விலையுள்ள பட்டைகளில் அதிக அளவு புளோரின் இருப்பது கண்டறியப்பட்டது. குறிப்பாக, ஃப்ளோரோலாஸ்டோமர்களில் இருந்து தயாரிக்கப்பட்டதாக விளம்பரப்படுத்தப்பட்ட 13 பட்டைகளிலும் ஃவுளூரின் இருந்தது உறுதி செய்யப்பட்டது.
ஆய்வின் முடிவுகளின்படி, ரூ.2500க்கு மேல் விலையுள்ள ஸ்மார்ட்வாட்ச் பட்டைகள் அதிக அளவு ஃவுளூரைனைக் கொண்டுள்ளன. ரசாயனப் பிரித்தெடுத்தலுக்குப் பிறகு, 20 வகையான PFAS ரசாயனங்களுக்காக பட்டைகள் சோதிக்கப்பட்டன. அதில் 22 பட்டைகளில் ஒன்பதில் PFAS இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. முந்தைய ஆய்வுகளில் ஒப்பீட்டளவில் குறைந்த அளவே PFAS காணப்பட்ட நிலையில், இந்த ஆய்வில் அதிக அளவு PFHxA காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆய்வின் முக்கிய கண்டுபிடிப்புகளின் அடிப்படையில், ஆராய்ச்சியாளர்கள் சிலிகான் பட்டைகள் போன்ற குறைந்த விலையிலான மாற்றுகளைத் தேர்வு செய்ய பரிந்துரைக்கின்றனர். ஸ்மார்ட்வாட்ச் வாங்கும்போது, தயாரிப்பு விளக்கங்களை கவனமாகப் படித்து, ஃப்ளோரோஎலாஸ்டோமர்கள் உள்ள பட்டைகளைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இந்த ஆய்வு ஸ்மார்ட்வாட்ச் பயன்பாட்டில் புதிய கேள்விகளை எழுப்பியுள்ளது. நாம் தொழில்நுட்பத்தை வசதிக்காகப் பயன்படுத்தும் அதே வேளையில் உடல்நலத்தையும் கருத்தில் கொள்வது அவசியம் என்பதை இது உணர்த்துகிறது. எனவே, ஸ்மார்ட்வாட்ச் தயாரிப்பாளர்கள் மற்றும் நுகர்வோர் இந்த ஆய்வின் முடிவுகளை கவனத்தில் கொண்டு, பாதுகாப்பான மாற்றுகளை நோக்கி நகர வேண்டியது அவசியமாகிறது.