துள்ளித் குதிக்கும் "ஜம்பிங் ஜீன்கள்" - விஞ்ஞானிகள் கண்டறிந்த உண்மை!

Jumping genes and Barbara McClintock
Jumping genes
Published on

யிரினங்களின் உடல் அமைப்பும், பண்புகளும் மரபணுக்களால் (Genes) தீர்மானிக்கப்படுகின்றன. நீண்ட காலமாக மரபணுக்கள் குரோமோசோம்களில் ஒரே இடத்தில் நிலையாக இருக்கின்றன என்ற கருத்தே நிலவி வந்தது. ஆனால், இந்த எண்ணத்தை மாற்றியமைக்கும் வகையில், சில மரபணுக்கள் தங்களின் இடத்தை மாற்றிக் கொண்டு செயல்படுகின்றன என்பதை ஒரு விஞ்ஞானி கண்டறிந்தார். இந்த முக்கியமான கண்டுபிடிப்பே “ஜம்பிங் ஜீன்கள்” (Jumping Genes) அல்லது Transposable Elements என அழைக்கப்படுகிறது. இந்த கோட்பாட்டை உருவாக்கியவர் பார்பரா மெக்லின்டாக் ஆவார்.

பார்பரா மெக்லின்டாக் (Barbara McClintock) அமெரிக்காவைச் சேர்ந்த புகழ்பெற்ற மரபணு விஞ்ஞானி ஆவார். இவர் 20 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில், குறிப்பாக 1940–1950 காலப்பகுதியில், சோளம் (Maize) தாவரத்தின் மரபணுக்களை ஆய்வு செய்து வந்தார். அந்த ஆய்வின்போது, சில மரபணுக்கள் ஒரு குரோமோசோமின் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு நகர்ந்து, அருகிலுள்ள மரபணுக்களின் செயல்பாட்டை மாற்றுகின்றன என்பதை கண்டுபிடித்தார்.

இந்த நகரும் மரபணுக்களை அவர் “Transposable Elements” என்று பெயரிட்டார். இவை பொதுவாக ஜம்பிங் ஜீன்கள் என அழைக்கப்படுகின்றன. இந்த ஜம்பிங் ஜீன்கள், ஒரு உயிரினத்தின் நிறம், வடிவம், வளர்ச்சி போன்ற பண்புகளில் மாற்றங்களை ஏற்படுத்தும் திறன் கொண்டவை. சோளத்தின் விதைகளில் காணப்படும் வண்ண மாறுபாடுகள் இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

ஆரம்ப காலத்தில், பார்பரா மெக்லின்டாக் கூறிய இந்த கருத்துகளை பல விஞ்ஞானிகள் ஏற்றுக் கொள்ளவில்லை. மரபணுக்கள் நகரும் என்பது அக்கால அறிவியலுக்கு புதியதும், புரிய கடினமானதுமாக இருந்தது. ஆனால், பின்னர் மேற்கொண்ட மூலக்கூறு மரபியல் (Molecular Genetics) ஆய்வுகள், அவரது கண்டுபிடிப்புகள் முற்றிலும் சரியானவை என்பதை நிரூபித்தன.

இன்று, ஜம்பிங் ஜீன்கள் மரபணு கட்டுப்பாடு (Gene Regulation), மரபியல் மாற்றங்கள் (Mutations), பரிணாம வளர்ச்சி (Evolution) மற்றும் புற்றுநோய் போன்ற நோய்களின் ஆராய்ச்சிகளில் மிக முக்கிய பங்காற்றுகின்றன. மனித மரபணுவின் ஒரு பெரிய பகுதியே ஜம்பிங் ஜீன்களால் ஆனது என்பதும் தற்போது அறிவியல் உலகால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

ஜம்பிங் ஜீன்களின் வகைகள்

ஜம்பிங் ஜீன்கள் இரண்டு முக்கிய வகைகளாக பிரிக்கப்படுகின்றன:

Class I (Retrotransposons): RNA மூலம் நகலெடுத்து மீண்டும் DNA ஆக மாறி புதிய இடத்தில் இணைகின்றன.

Class II (DNA Transposons): நேரடியாக DNA நிலையில் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு நகர்கின்றன.

ஜம்பிங் ஜீன்கள் பரிணாம வளர்ச்சியில் பங்கு:

புதிய மரபணு இணைப்புகள் உருவாக உதவுகின்றன, உயிரினங்கள் சூழலுக்கு ஏற்ப மாற உதவுகின்றன. புதிய பண்புகள் உருவாக வழிவகுக்கின்றன.

பார்பரா மெக்லின்டாக் – தனிப்பட்ட சிறப்பு

நோபல் பரிசை தனியாக (Unshared Nobel Prize) பெற்ற சில பெண்களில் ஒருவர் அவரது கண்டுபிடிப்பு மதிப்பிடப்பட 30 ஆண்டுகளுக்கு மேல் எடுத்துக்கொண்டது. அறிவியலில் பொறுமையும், உறுதியும் முக்கியம் என்பதை உலகுக்கு உணர்த்தினார்.

இதையும் படியுங்கள்:
பேருந்தே ரயிலாக மாறும் அதிசயம்! மணிக்கு 603 கி.மீ. பறக்கும் Maglev புல்லட் ரயில்! கலக்கும் ஜப்பானின் தொழில்நுட்பம்!
Jumping genes and Barbara McClintock

மரபணுக்கள் நிலையானவை என்ற பழைய நம்பிக்கையை மாற்றி, மரபியல் அறிவியலில் புதிய புரட்சியை ஏற்படுத்தியவர் பார்பரா மெக்லின்டாக் ஆவார். அவரது ஜம்பிங் ஜீன்கள் கோட்பாடு, உயிரியல் அறிவியலின் வளர்ச்சிக்கு ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைந்தது. அவரது பெரும் அறிவியல் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில், 1983 ஆம் ஆண்டு நோபல் பரிசு அவருக்கு வழங்கப்பட்டது. இன்றைய நவீன மரபியல் ஆராய்ச்சிகளுக்கு அடித்தளமாக அமைந்த இந்த கோட்பாடு, அறிவியல் உலகில் பார்பரா மெக்லின்டாக் பெயரை என்றென்றும் நிலைநிறுத்தியுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com