இனப்பெருக்கம் குறித்து சர்வதேச அளவில் ஆய்வுகள் நடத்தப்பட்டு வரும் நிலையில், பெண்ணிடமிருந்து விந்தணுவையும் ஆணிடமிருந்து கருமுட்டையையும் உருவாக்கும் விபரீத ஆய்வை விஞ்ஞானிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
உலகில் உள்ள எல்லா உயிரினங்களின் முதல் நோக்கம் என்பது இனப்பெருக்கம் தான். ஒரு உயிரினத்தின் இனப்பெருக்கம் நின்றுபோனால் அவை மொத்தமாக அழிந்துவிடும். எனவே இனப்பெருக்கம் சார்ந்த பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் பெண்ணிடமிருந்து விந்தணுவையும், ஆணிடமிருந்து கருமுட்டையையும் உருவாக்கும் ஆய்வில் ‘இன்விட்ரோ கேமடோஜெனசிஸ்’ என்ற புதிய முறையை ஆய்வாளர்கள் சோதித்து வருகின்றனர்.
அதாவது, ஆண்களின் தோலிலிருந்து எடுக்கப்படும் செல்லை கருமுட்டையாகவும், பெண்களின் தோலிலிருந்து எடுக்கப்படும் செல்லை விந்தணுவாகவும் மாற்றும் முறைதான் இது. இதன் மூலமாக ஆணும் பெண்ணும் ஒன்றாக சேராமலேயே பல குழந்தைகளை உருவாக்க முடியும் என்கின்றனர். இது விபரீதமான ஆய்வாக இருந்தாலும் ஆரம்பகட்ட நிலையில் இருப்பதால், பல ஆண்டுகள் கழித்தே இது சாத்தியமாகும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
தற்போது இந்த தொழில்நுட்பத்தில் சில தடைகள் இருப்பதால், அதை சரி செய்வதற்காக தீவிர ஆய்வில் விஞ்ஞானிகள் இறங்கியுள்ளனர். இந்த முறையானது ஸ்டெம் செல் மூலமாகத் தொடங்குகிறது. ஸ்டெம்சல்களை விந்தணுவாகவோ அல்லது கருமுட்டையாகவோ மாற்றுவது தான் இவர்களின் நோக்கம். இதன் மூலமாக யாருடைய செல்களையும் நம்மால் கருமுட்டையாகவும் விந்தணுவாகவும் மாற்ற முடியும்.
கடந்த 2012 ஆம் ஆண்டு எலியை வைத்து இந்த முறையை சோதித்துப் பார்த்து, வெற்றிகரமாக புதிய எலிகளை ஆய்வாளர்கள் உருவாக்கினார்கள். இந்த புதிய தொழில்நுட்பம் மூலமாக தன் பால் ஈர்ப்பாளர்கள் குழந்தை பெற்றுக்கொள்ள உதவியாக இருக்கும் என சொல்லப்படுகிறது. இதுவரை மனிதர்களை வைத்து இந்த ஆய்வானது தொடங்கப்படவில்லை. இதனால் பல விபரீதங்கள் நடக்க வாய்ப்புள்ளது என்பதால், எதிர்காலத்தில் பல மேம்படுத்தல்கள் அடைந்த பிறகே மனிதர்கள் மீது சோதித்துப் பார்க்கப்படும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இதனால் எதிர்காலத்தில் குழந்தையின்மை பிரச்சனைக்கு சிகிச்சை அளிக்க இது பெருமளவில் உதவலாம். சட்டரீதியாகவும் இதில் பல பிரச்சினைகள் ஏற்படும் என சொல்லப்படும் நிலையில், அவற்றை நெறிமுறைப்படுத்தி முறையாக செயல்படுத்தினால் மனித குலத்திற்கு பேருதவியாக இருக்கும் என நம்பப்படுகிறது.