
தபால் நிலையங்களில், APT 2.0 (Advanced Postal Technology) சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், போஸ்டல் சேவையை டிஜிட்டல் மயமாக்கவும், மேம்பட்ட தொழில் நுட்பத்தை அறிமுகப்படுத்தவும், வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பான மற்றும் திறமையான சேவையை அளிக்கவும் முடியுமெனக் கூறப்பட்டுள்ளது. அஞ்சல் துறையில், டிஜிட்டல் மாற்றத்திற்கான ஒரு முக்கிய படி APT 2.0 ஆகும்.
APT 2.0 - முக்கிய அம்சங்கள்
1. டிஜிட்டல் மயமாக்கல்
APT 2.0 டிஜிட்டல் மயமாக்கல் முறையில், காகிதப் பயன்பாடு குறையும். அஞ்சல் சேவைகள் வேகப்படுத்தப்படும்.
2. மேம்பட்ட தொழில் நுட்பம்
அஞ்சல் நிலையங்களில் APT 2.0, மேம்பட்ட மென்பொருள் மற்றும் வன்பொருள் கருவிகளைப் பயன்படுத்துகிறது.
3. பாதுகாப்பான சேவைகள் மற்றும் திறமையான செயல்பாடுகள்
APT 2.0 வாடிக்கையாளர்களின் பரிவர்த்தனைகளுக்குரிய பாதுகாப்பை உறுதிப் படுத்துவதோடு, விரைவான சேவையையும் அளிக்கும். வாடிக்கையாளர்கள் எளிதில் பயன்படுத்தக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அஞ்சல் துறை ஊழியர்களுக்கு APT 2.0 தொழில் நுட்பத்தைப் பயன்படுத்த பயிற்சி அளிக்கப்படும்.
வேகமான, வெளிப்படையான மற்றும் வாடிக்கையாளர்களின் வீட்டு வாசலில் சேவைகளை வழங்க டிஜிட்டல் கருவிகளை ஒருங்கிணைக்கும் இந்த APT 2.0.
இந்தியாவின் முக்கியமான நகரங்களில் உள்ள சில அஞ்சல் அலுவலகங்களில், ஜூலை 22 அன்று APT 2.0 தொழில்நுட்பம் முதல் கட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டது. நிறைய Bookings வந்த காரணம், APT 2.0 சேவையை குறிப்பிட்ட மும்பை அஞ்சல் அலுவலகத்தில் சரியாக கையாள முடியவில்லை.
இரண்டாவது Phase ஆக, ஆகஸ்ட் 4 ஆந்தேதி மும்பையில் மற்றுமொரு அஞ்சல் அலுவலகத்தில் APT 2.0 அறிமுகமாகையில், வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைந்தார்கள். ஸர்வரில் பிரச்சினை ஏற்பட, மக்களின் Bookings ஐ எடுத்துக் கொள்ள முடியவில்லை. அதிக நேரம் வாடிக்கையாளர்கள் காத்திருந்தும் பயனில்லாமல் ஆனது.
ரக்ஷாபந்தன் சமயத்தில் காலை வாரிவிட்டு விட்டது APT 2.0 என வாடிக்கையாளர்கள் ஒரே புலம்பல். தற்சமயம், மும்பை ஜெனரல் போஸ்ட் ஆபீஸ் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, "APT 2.0 -வில் சில டெக்னிக்கல் குறைபாடுகள் உள்ளன. இவை ஆகஸ்ட் மாத இறுதிக்குள் APT 2.0 டிஜிட்டல் முறை சரியாக்கப்படும்."
முதன் முறையாக அறிமுகமாகியுள்ள APT 2.0, புதிய டெக்னாலஜி என்பதால், இதைக் கையாள டெக்னிக்கல் குழுவிற்கு சற்று அவகாசம் தேவைப்படும் என்று கூறப்படுகிறது. புதிய டெக்னாலஜியான APT 2.0 அஞ்சல் துறைக்கும், வாடிக்கையாளர்களுக்கும் அட்வாண்டேஜ் அளிக்குமென நம்புவோம்.