தகவல் தொடர்பு சாதனங்கள் உலகை இணைத்து, தகவல்களை விரைவாகப் பகிர உதவுகின்றன. கல்வி, வணிக வளர்ச்சி, உறவுகளைப் பேணுதல் போன்ற நன்மைகள் இருந்தாலும் பல தீமைகளும் உள்ளன. எனவே சரியான பயன்பாடு என்பது மிகவும் அவசியம்.
தகவல் தொடர்பு சாதனங்களின் நன்மைகள்:
* நவீன உலகின் அத்தியாவசிய அங்கமாக மாறியுள்ள தகவல் தொடர்பு சாதனங்கள் தொலைவில் உள்ளவர்களுடன் நொடிகளில் பேசவும், பார்க்கவும் உதவுகிறது. இந்த உலகளாவிய இணைப்பு சிறந்த நன்மைகளில் ஒன்றாகும்.
* மின்னஞ்சல், குறுஞ்செய்தி, சமூக வலைதளங்கள் மூலம் தகவல்கள் உடனடியாக பரவுகின்றன. இந்த விரைவான தகவல் பரிமாற்றம் இன்றைய அவசர உலகில் மிகவும் அவசியம்.
* இணையம் மூலம் பல்வேறு துறைகளைப் பற்றிய தகவல்களைப் பெறலாம். புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்ளலாம். இது கல்வி மற்றும் அறிவு வளர்ச்சியை பெருக்க உதவுகிறது.
* ஆன்லைன் ஷாப்பிங், விளம்பரம், வாடிக்கையாளர் கருத்துகளைப் பெறுதல், உலகளாவிய செயல்பாடுகளை நிர்வகித்தல் போன்ற வணிக வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது.
* திரைப்படங்கள், இசை, விளையாட்டுகள் மூலம் பொழுதுபோக்கிற்கான சிறந்த வாய்ப்புகளையும் வழங்குகிறது.
* வரைபடங்கள் மூலம்(GPS) எளிதாகப் புதிய இடங்களைக் கண்டறிய உதவுகிறது.
* வீடியோ கான்பரன்சிங் மூலம் தொலைவிலிருந்தே கூட்டங்களை நடத்தி திறமையான நிர்வாகம் செய்யவும் உதவுகிறது.
தகவல் தொடர்பு சாதனங்களின் தீமைகள்:
* அதிகப்படியான பயன்பாடு குறிப்பாக வீடியோ கேம்கள், தேவையற்ற விஷயங்களை பார்ப்பது போன்ற பழக்கத்திற்கு அடிமையாகி மன உளைச்சலைத் தருகிறது இந்த இணைய அடிமைத்தனம்.
* கண் எரிச்சல், பார்வை மங்குதல், தலைவலி, தூக்கமின்மை (மெலடோனின் குறைபாடு), உடல் சோர்வு போன்றவை ஏற்படுகின்றன.
* வங்கி மோசடிகள், தனிப்பட்ட தகவல்கள் திருட்டு போன்ற சைபர் குற்றங்கள் அதிகரிக்கின்றன.
* போலிச் செய்திகள், தவறான தகவல்கள், வதந்திகள், இணைய மோசடிகள் பரவ அதிகம் வாய்ப்புள்ளது.
* நவீன தகவல் தொடர்பு சாதனங்களால் நேருக்கு நேர் பேசும் பழக்கம் குறைந்து விடுவதுடன், சமூகத்திலிருந்து தனிமைப்படுத்தப்படும் அபாயம் உள்ளது.
* படிக்கும் பொழுதும், வேலை செய்யும் பொழுதும் கவனச் சிதறலை ஏற்படுத்துகிறது; சுய சிந்தனையை குறைக்கிறது.
* டிஜிட்டல் தொழில்நுட்பத்தால் பல வேலைகள் தானியங்கி மயமாக்கப்பட்டு, வேலை வாய்ப்பில் நிச்சயமற்ற நிலையை உருவாக்குகிறது.
தகவல் தொடர்பு சாதனங்கள் நவீன உலகத்தின் அத்தியாவசிய அங்கமாக மாறியுள்ளது. அவை மனித வாழ்வை எளிதாக்கி, உலகை இணைத்திருந்தாலும், அவற்றின் தீமைகளை உணர்ந்து பொறுப்புடனும், அளவோடு பயன்படுத்துவதே ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான டிஜிட்டல் உலகை உருவாக்குவதற்கான சிறந்த வழியாகும்.