

நம்மூரில் வீதி வழியே செல்பவர்களுக்கு ஏதாவது ஒரு கஷ்டம் என்றால் உடனே ஓடிப்போய் உதவி செய்யும் பழக்கம் பலருக்கும் இயல்பாகவே இருக்கிறது. ஆனால், நமது அந்த நல்ல குணத்தையே தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தி ஒரு கும்பல் நூதன முறையில் மோசடி செய்து வருகிறது. ஹைதராபாத் மாநகர சைபர் கிரைம் காவல்துறை சமீபத்தில் இது குறித்து ஒரு மிகப்பெரிய எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
பணத்தை மட்டும் திருடி வந்த காலம் மாறி, தற்போது ஒரு மனிதனின் டிஜிட்டல் அடையாளத்தையே திருடும் புதிய AI பயோமெட்ரிக் மோசடி சத்தமில்லாமல் அரங்கேறி வருகிறது. இந்த அதிர்ச்சியான மோசடி குறித்தும், அதிலிருந்து தப்பிக்கும் வழிகள் குறித்தும் இந்தப் பதிவில் பார்க்கலாம்.
மோசடி நடக்கும் விதம்!
ரயில் நிலையங்கள், பஸ் ஸ்டாண்ட், ஷாப்பிங் மால்கள் போன்ற மக்கள் நெரிசல் மிகுந்த இடங்களில்தான் இந்த சைபர் திருடர்கள் தங்கள் வலையை விரிப்பார்கள். இவர்களில் பெரும்பாலானோர் நடுத்தர வயதுடையவர் களாகவோ அல்லது முதியவர்களாகவோ இருப்பார்கள். ஸ்மார்ட்போன் பயன்படுத்தத் தெரியாத மிக அப்பாவி மனிதர்கள்போல உங்களிடம் வந்து நிற்பார்கள்.
பென்ஷன் பணத்தை செக் செய்ய வேண்டும், மொபைலில் ஏதோ ஒரு ஆப் வேலை செய்யவில்லை என்பது போல ரொம்பவே பரிதாபமாக உதவி கேட்பார்கள். நாமும் வயதானவர்கள் கேட்கிறார்களே என்று பச்சாதாபப்பட்டு அந்த மொபைலை வாங்கிப் பார்ப்போம். சரியாக அந்த இடத்தில்தான் நிஜமான ஆபத்து தொடங்குகிறது.
தொழில்நுட்ப சதி!
அந்த நபரின் மொபைல் போனை நீங்கள் வாங்கிப் பார்க்கும்போது, அதில் ஏற்கனவே கேமரா ஆன் செய்யப்பட்டு ஸ்கிரீன் ரெக்கார்டிங் மோடில் இருக்கும். அல்லது யாருக்காவது லைவ் வீடியோ கால் சென்று கொண்டிருக்கும். போனை உற்றுப் பார்க்கும் உங்களுடைய முகம், நீங்கள் பேசும் குரல் என அனைத்து பயோமெட்ரிக் தரவுகளும் வெறும் சில வினாடிகளில் திருடப்பட்டுவிடும். இந்த தகவல்களை மறுமுனையில் இருக்கும் அவர்களின் கூட்டாளிகள் சேகரித்து வைத்துக்கொள்வார்கள்.
தரவுகளால் வரும் விபரீதம்!
இப்படித் திருடப்படும் உங்களுடைய முகத்தையும் குரலையும் வைத்து செயற்கை AI தொழில்நுட்பம் மூலம் உங்களைப் போலவே ஒரு போலி பிம்பத்தை உருவாக்குவார்கள். இப்போது பெரும்பாலான வங்கிச் சேவைகள் மற்றும் ஆன்லைன் பணப் பரிவர்த்தனைகளுக்கு முக அங்கீகாரம், குரல் பதிவு பாஸ்வேர்டாகப் பயன்படுத்தப்படுகிறது.
இந்த போலி பிம்பத்தை வைத்து உங்கள் வங்கி கணக்கில் உள்ள பணத்தை எளிதாக சுருட்டிவிடுவார்கள். மேலும், உங்களைப் போலவே வீடியோ காலில் பேசி உங்கள் உறவினர்கள், நண்பர்களிடம் பணம் கேட்டு ஏமாற்றும் வாய்ப்புகளும் மிக அதிகம்.
தற்காத்துக்கொள்ளும் வழிகள்:
இந்த மோசடியில் இருந்து தப்பிக்க ஹைதராபாத் போலீசார் சில முக்கிய அறிவுரைகளை வழங்கியுள்ளனர்.
பொது இடங்களில் முன் பின் தெரியாத நபர்கள் உதவி கேட்டால், அவர்களின் செல்போனை வாங்கி இயக்குவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
முகம் தெரியாத நபர்களின் வீடியோ கால்களில் பேசுவதோ அல்லது அவர்கள் சொல்வதைக் கேட்பதோ கூடாது.
இதுகுறித்த விழிப்புணர்வை உங்கள் குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் மற்றும் குழந்தைகளுக்குக் கட்டாயம் கற்றுக் கொடுங்கள்.
ஒருவேளை நீங்கள் ஏதேனும் சைபர் மோசடியில் சிக்கிக்கொண்டதாக சந்தேகம் எழுந்தால், சற்றும் தாமதிக்காமல் 1930 என்ற தேசிய உதவி எண்ணைத் தொடர்புகொள்ளலாம். அல்லது அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ சைபர் கிரைம் இணையதளத்தில் புகார் அளிக்கலாம்.
உதவி செய்வது நல்ல மனிதப் பண்பு என்றாலும், இன்றைய டிஜிட்டல் உலகில் கொஞ்சம் சுயநலமாக இருப்பதில் எந்தத் தவறும் இல்லை.