ஒரு குறிப்பிட்ட வயதிற்குப் பிறகு சில பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படுவது இன்றைய காலகட்டத்தில் இயல்பான ஒன்றாகி விட்டது. இதனைத் தெரிந்து கொள்வதற்குள், நமது உடலில் இதன் தாக்கம் அதிகரித்து விடுகிறது. இனி அந்தக் கவலையே நமக்குத் தேவையில்லை. 5 ஆண்டுகளுக்கு முன்னரே மார்பக புற்றுநோயைக் கண்டறியும் செயற்கை நுண்ணறிவு வசதி தற்போது வந்து விட்டது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இப்போது காண்போம்.
வளர்ந்து வரும் அறிவியல் தொழில்நுட்ப உலகில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் அபரிமிதமான வளர்ச்சியைக் கண்டுள்ளது. இதன் மூலம் அனைத்து வேலைகளையும் மிக எளிதாக வெகு விரைவில் செய்ய முடியும் என்பதால், எதிர்காலத்தில் மனிதர்களின் வேலைக்கு பாதிப்பை ஏற்படுத்துமோ என்ற அச்சம் நிலவுகிறது. இருப்பினும், செயற்கை நுண்ணறிவின் வருகையை பலரும் வரவேற்கின்றனர். சமீபத்திய செய்திகளில் தினந்தோறும் ஏஐ தொடர்பான ஒரு செய்தியாவது வெளியாகிறது. ஏஐ மூலம் அது சாத்தியம், இது சாத்தியம் என அறிவியல் அறிஞர்கள் இதன் வளர்ச்சியை பறைசாற்றி வருகின்றனர்.
அமெரிக்காவில் இருக்கும் மாசாசூசெட்ஸ் பல்கலைக்கழகம் மற்றும் ஜமீல் கிளினிக் ஆகியவை ஒன்றிணைந்து மார்பக புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிய 'மிராய்' எனப்படும் செயற்கை தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்துள்ளனர். கடந்த 2021 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட இந்தத் தொழில்நுட்பம், பல மருத்துவமனைகளில் சோதனை முயற்சியாக அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த சோதனையில் மிராய் தொழில்நுட்பம் மிகச் சிறந்த அளவில் உதவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிராய் குறித்து அமெரிக்காவின் இலினாய்ஸ் மாகாணம், ஓக் புரூக் நகரில் அமைந்துள்ள 'ரேடியோலாஜிக்கல் சொசைட்டி ஆப் நார்த் அமெரிக்கா' என்ற நிறுவனம் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில், அமெரிக்காவில் 8 பெண்களில் ஒருவர் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். இதனைக் கண்டறிய மேமோகிராம் உதவினாலும், கால தாமதம் ஏற்படுகிறது. ஆனால் இப்போது அறிமுகமான மிராய் தொழில்நுட்பம் 5 ஆண்டுகளுக்கு முன்பே மார்பக புற்றுநோயை கண்டுபிடிக்க உதவுகிறது. இதன்மூலம், நோய்த்தொற்றை தொடக்கத்திலேயே கண்டறிந்து மிக எளிதாக நிவாரணம் அளிக்க முடியும் என்று இந்த ஆய்வறிக்கை கூறுகிறது.
மிராய் தொழில்நுட்பம் பெண்களுக்காகவே கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய வரப்பிரசாதம் என்றும் கூறலாம். இந்தியாவின் முன்னணி தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திராவும், இந்தத் தொழில்நுட்பத்தை பாராட்டி இருக்கிறார். அவர் கூறுகையில், "நாம் நினைத்ததை விடவும் பலமடங்கு நன்மைகளை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அளிக்கிறது. இதன் பயன்பாடுகள் மேலும் தொடரும்" என்றும் அவர் கூறியுள்ளார்.
தொழில்நுட்ப வளர்ச்சியின் அடுத்த கட்டத்தில் நாம் இருக்கிறோம். இந்த வசதி அமெரிக்கா மட்டுமின்றி, அனைத்து உலக நாடுகளிலும் விரிவுபடுத்தப்பட்டால் மார்பக புற்றுநோயால் அவதிப்படும் பல பெண்களின் வாழ்வைக் காக்க இயலும். ஏஐ வளர்ச்சி இதோடு நிற்கப் போவதில்லை; மேலும் பல நன்மைகளை இந்த உலகிற்கு அளிக்க காத்துக் கிடக்கிறது.