செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பமானது வெளிவந்த கொஞ்ச காலத்திலேயே பெரும்பாலான மனிதர்களின் முக்கிய வேலைகளை தன்வசம் ஆக்கிக் கொண்டது. எதிர்காலத்தில் இது பெரும்பாலான மனிதர்களின் வேலையை பறித்துவிடும் என அனைவரும் அச்சத்தில் இருக்கும் வேளையில், இதற்கு நம்முடைய மரணத்தை கணிக்கும் ஆற்றல் உள்ளது என்ற விஷயம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டென்மார்க்கை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மரணத்தை முன்கூட்டியே கணிக்கும் ஏஐ அடிப்படையிலான கால்குலேட்டரை கண்டுபிடித்துள்ளனர். இது ஒரு தனிநபரின் ஆயுட்காலத்தை முன்கூட்டியே துல்லியமாக கணிக்கும் திறனைக் கொண்டிருக்கிறது. மேலும் எதிர்காலத்தில் நமக்கு என்னவெல்லாம் நடக்கப் போகிறது என்ற விவரங்களையும் சரியாக கணிக்கும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
இது எப்படி சாத்தியம்?
Life2vec என பெயரிடப்பட்டுள்ள இந்த இறப்பு கால்குலேட்டர், மனிதர்களின் வாழ்க்கை நிகழ்வுகளை வரிசைப்படுத்தி அவர்களின் இறப்பை கணிக்கும் நோக்கத்திற்காக உருவாக்கியுள்ளனர். அதன்படி இந்த தொழில்நுட்பம் மற்ற ஏஐ சாதனங்களைப் போலல்லாமல், ஒருவரின் இறப்பை 78% துல்லியமாகக் கணிக்கிறதாம். மேலும் இதை எதிர்காலத்தில் என்ன நடக்கப்போகிறது என்பதை கண்டுபிடிப்பதற்காகவும் பயன்படுத்த உள்ளனர். இது நம்முடைய மரணத்தை கணிக்க, நம்முடைய தொழில், இருப்பிடம், வருமானம், உடல் ரீதியான பிரச்சினைகள் போன்ற விவரத்தை இதில் உள்ளீடு செய்தால், மரணம் எப்போது ஏற்படும் என்பதை கணக்கிட்டு சொல்கிறது.
இந்த ஆய்வை உறுதிப்படுத்த கடந்த 2008 முதல் 2020க்குள் ஆறு மில்லியன் டேனிஷ் மக்களின் மக்கள் தொகையை துல்லியமாக கணிக்க Life2vec சோதிக்கப்பட்டுள்ளது. ஒருவரின் வயது, பாலினம் அடிப்படையில் யாரெல்லாம் அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு மட்டுமே உயிர் வாழ்வார்கள் என்பதை இந்த தொழில்நுட்பம் துல்லியமாக கணித்துள்ளது என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். மேலும் இதைப் பயன்படுத்த பயனர்கள் அவர்களுடைய வாழ்க்கை நிகழ்வுகளை எளிய மொழியிலேயே விவரிக்கலாம்.
இத்தகைய டேட்டாக்களை இந்த தொழில்நுட்பம் முழுவதுமாக ஆய்வு செய்து, அதிலிருந்து அவர்கள் எத்தனை ஆண்டுகள் உயிருடன் இருப்பார்கள் என்ற தகவலை 78% துல்லியமாக கணித்துள்ளது. இதில் பங்கேற்ற பங்கேற்பாளர்களுக்கு அவர்கள் எப்போது இறப்பார்கள் என்ற விவரங்கள் எதுவும் வழங்கப்படவில்லை. அதே நேரம் இது மக்களுடைய பயன்பாட்டுக்கும் இன்னும் வெளிவரவில்லை என்பதையும் விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தினர்.