அருங்காட்சியகத்தில் ஐன்ஸ்டீன் மூளையின் 46 சிறிய பகுதிகள்! மூளையைப் பாதுகாத்த மருத்துவர்!

Albert Einstein Brain
Albert Einstein Brain

இருபதாம் நூற்றாண்டின் மிகச்சிறந்த விஞ்ஞானிகளுள் ஒருவராக வாழ்ந்தவர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். இயற்பியல் துறையில் நோபல் பரிசைப் பெற்ற இவர் தன்னிகரில்லா அறிவியல் மேதையாகத் திகழ்ந்தார். இவரது இறப்புக்குப் பின் இவரின் மூளையைப் ஒரு மருத்துவர் பாதுகாத்து வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்த கூடுதல் தகவல்களை இப்போது காண்போம்.

1955 ஆம் ஆண்டில் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் மறைவால், விஞ்ஞான உலகம் பெரும் இழப்பைச் சந்தித்தது. அந்த அளவிற்கு அவரின் கண்டுபிடிப்புகள் நமக்கு உதவியாக இன்றளவும் இருக்கின்றன. இவர் இறந்து சுமார் 7 மணி நேரத்திற்கு பிறகு உடற்கூறாய்வு செய்த போது, அவரது மூளையை மட்டும் தனியாக எடுத்து வைத்தார் மருத்துவர் தாமஸ் ஸ்டோல்ட்ஸ் ஹார்வி. பல்வேறு ஆய்வுகளை நடத்திய ஹார்வி, ஐன்ஸ்டீனின் மூளையை சுமார் 240 சிறு சிறு துண்டுகளாக வெட்டினார். இதற்கெல்லாம் காரணம் ஐன்ஸ்டீனின் அதிகப்படியான அறிவுத் திறன் தான்.

பொதுவாக ஒருவரது அறிவுத் திறன் அவர்களின் ஐக்யூ லெவலை வைத்து தான் தீர்மானிக்கப்படும். ஐன்ஸ்டீனின் ஐக்யூ லெவல் சாதாரண மனிதர்களை விடவும் அதிகமாக இருந்தது. இவரின் ஐக்யூ லெவல் 160 முதல் 190 வரை இருக்கலாம் என கூறப்படுகிறது. ஐன்ஸ்டீனின் மூளையை ஆராய்ச்சி செய்த போது எண் மற்றும் வெளி சார்ந்த பகுதிகள் பெரியதாகவும், மொழி மற்றும் பேச்சு சார்ந்த பகுதிகள் சிறியதாகவும் இருந்ததாக கூறப்படுகிறது.

ஐன்ஸ்டீனின் மூளை எங்கு இருக்கிறது என்பதைக் கண்டறிய பிரபல பத்திரிகை நிருபர் ஸ்டீவன் லெவி தொடர்ந்து பல்வேறு கட்டப் பணிகளை மேற்கொண்டார். இதன் விளைவாக மருத்துவர் ஹார்வியிடம் ஐன்ஸ்டீனின் மூளை இருப்பதை அறிந்து கொண்டு அவரைச் சந்தித்தார். அப்போது அவர் கண்ட காட்சி உண்மையில் திடுக்கிடும் வகையில் இருந்திருக்க வேண்டும். ஏனெனில், மூளையின் சிறு சிறு பகுதிகள் ஆல்கஹாலின் மூலம் குளிரூட்டியில் வைத்து பாதுகாக்கப்பட்டது என்பதை அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐன்ஸ்டீனின் மூளை அமெரிக்காவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் மருத்துவர் ஹார்வியுடன் கொண்டு செல்லப்பட்டதாக பத்திரிகையாளர் மைக்கேல் பேட்டர்நிதி எழுதியிருக்கிறார். மருத்துவர் ஹார்வியின் வாரிசுகள், அவருடைய சொத்துகளை கடந்த 2010 ஆம் ஆண்டு தேசிய சுகாதார மற்றும் மருத்துவ அருங்காட்சியகத்திற்கு கொடுத்தனர். இதில் ஐன்ஸ்டீன் மூளையின் சிறுசிறு பகுதிகளும், முழு மூளையை அடையாளம் காட்டும் 14 புகைப்படங்களும் அடங்கும்.

இதையும் படியுங்கள்:
நம் மூளை நம் கையில்!
Albert Einstein Brain

மாபெரும் அறிவியல் மேதையான ஐன்ஸ்டீனின் மூளை இன்றளவும் பாதுகாக்கப்பட்டு வருவது ஆச்சரியத்தை அளிக்கிறது. கடந்த 2013 ஆம் ஆண்டு அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் இருக்கும் பிலடெல்பியா அருகே உள்ள முட்டர் அருங்காட்சியகத்தால் ஐன்ஸ்டீன் மூளையின் 46 சிறிய பகுதிகள் வாங்கப்பட்டது. இவை அங்குள்ள நிரந்தர காட்சியகங்களில் வைக்கப்பட்டிருப்பது மேலும் சிறப்பான செயல். இது தவிர்த்து, நுண்ணோக்கி ஸ்லைடுகளில் மூளையின் மெல்லிய துண்டுகளைப் பொருத்தி கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

இறப்புக்கு பின் ஒருவரது மூளை இத்தனை ஆண்டு காலமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது என்றால் அறிவியல் தொழில்நுட்பம் எந்த அளவிற்கு வளர்ச்சியை சந்தித்துள்ளது என்பதை நாம் உணர வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com