
இன்றைய நவீன காலகட்டத்தில் எதிர்வரும் அனைத்து ஆபத்துகளையும் கண்டறிய பல தொழில்நுட்பங்கள் வந்து விட்டன. அந்த வகையில் காலநிலை மாற்றங்களைக் கண்டறியவும் தொழில்நுட்ப கருவிகள் உள்ளன. மழையின் அளவை அளவிட மழைமானி உதவுவது போல், காற்றின் வேகத்தை அளவிட உதவும் கருவி தான் அனிமோ மீட்டர். பழங்காலத்தில் இருந்து பயன்படுத்தப்பட்டு வரும் பண்டைய சாதனம் இது. அனிமோ மீட்டர் எங்கெல்லாம் எப்படி பயன்படுகிறது என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
அனிமோஸ் (Anemos) என்றால் கிரேக்க மொழியில் காற்று என்று அர்த்தம். 1450 ஆம் ஆண்டில் லியோன் பாட்டிஸ்டா ஆல்பர்டி எனும் இத்தாலிய நாட்டு கலைஞரால் அனிமோ மீட்டர் கண்டுபிடிக்கப்பட்டது எனக் கூறப்படுகிறது. அடுத்தடுத்த நூற்றாண்டுகளில் இதன் வடிவங்கள் மாற்றப்பட்டு காற்றின் வேகத்தோடு, திசையையும் அறிந்து கொள்ளும் அளவிற்கு அனிமோ மீட்டர் மேம்படுத்தப்பட்டது. இன்றைய காலகட்டத்தில் வானிலை ஆய்வு மையங்கள், விமான நிலையங்கள் மற்றும் இரயில் நிலையங்களில் அனிமோ மீட்டர் இன்றியமையாத சாதனமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
வானிலை முன்னறிவிப்பைத் தெரிவிப்பதில் அனிமோ மீட்டர் முக்கியப் பங்காற்றுகிறது. இது காற்றின் வேகம், அழுத்தம் மற்றும் திசையையும் கண்டறிய உதவுகிறது. நவீன காலத்தில் புதிதாய் வடிவமைக்கப்பட்ட அனிமோ மீட்டரில், சுழலும் தண்டுடன் அலுமினிய கிண்ணங்கள் அரைக்கோள வடிவில் பொருத்தப்பட்டிருக்கும். காற்றின் வேகம் அதிகமாக இருந்தால், கிண்ணத்தில் சுழற்சி அதிவேகமாக இருக்கும். இதனை அடிப்படையாகக் கொண்டு தான் விமானங்கள் தரையிறக்கப்படுகின்றன. புயல், சூறாவளி காலத்தில் காற்றின் வேகத்தை அனிமோ மீட்டரின் உதவியால் கணக்கிட்டு தான், பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.
சென்னையில் ஆலந்தூர் மற்றும் கோயம்புடு இரயில் நிலையங்களில் அனிமோ மீட்டர் பொருத்தப்பட்டுள்ளது. காற்றின் வேகம் 70.கி.மீட்டருக்கு அதிகமாக இருந்தால், இரயிலின் வேகம் குறைக்கப்படும். அதுவே 90 கி.மீட்டருக்கு மேல் காற்று வீசினால், இரயில்களின் இயக்கமானது நிறுத்தப்படும்.
கனமழை மற்றும் உறைபனி பொழியும் காலங்களிலும் அனிமோ மீட்டர் துல்லியமாக செயல்பட வேண்டியது அவசியமாகும். குளிர்ந்த சூழலானது, அனிமோ மீட்டரின் செயல்பாட்டைத் தடுக்கிறது மற்றும் காற்று இயக்கவியலை மாற்றுகிறது. இதன் காரணமாக அதிக குளிர் நிலவும் இடங்களில் பொருத்தப்படும் அனிமோ மீட்டர்களின் உள்புறம் சூடாக்கப்பட வேண்டும். அவ்வகையில் சோனிக் மற்றும் கோப்பை அனிமோ மீட்டர்கள் சூடான பதிப்புகளுடன் தயாரிக்கப்படுகின்றன.
இடத்திற்கு இடம் காற்றின் வேகம் மாறுபடும் என்பதால், அனிமோ மீட்டர்களைப் பொருத்துவதில் மரங்களின் இருப்பு, இயற்கைப் பள்ளத்தாக்குகள் மற்றும் கட்டங்கள் ஆகியவற்றைக் கவனத்தில் கொள்ள வேண்டும். திறந்தவெளி நிலப்பரப்பாக இருந்தால் 10மீ உயரத்தில் அனிமோ மீட்டரைப் பொருத்தலாம்.
கால மாற்றத்திற்கு ஏற்ப அனிமோ மீட்டரிலும் சில மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டன. அவ்வகையில் அனிமோ மீட்டரின் சில வகைகள் கீழே வரிசைப்படுத்தப்பட்டு உள்ளன.
கோப்பை அனிமோ மீட்டர்
லேசர் டாப்ளர் அனிமோ மீட்டர்
காற்றாலை அனிமோ மீட்டர்
ஹாட்வைர் அனிமோ மீட்டர்
மீயொலி அனிமோ மீட்டர்
சோனிக் அனிமோ மீட்டர்