என்னதான் பணப்பரிவர்தனை டிஜிட்டல் முறைக்கு மாறினாலும், ஏடிஎம் மிஷினில் சென்று பணம் எடுத்து செலவு செய்வதன் சுகமே தனிதான். ஆனால் இன்றைய காலத்தில் ஏடிஎம் மோசடிகள் அதிகரித்து விட்டதால், நாம் சற்று கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம். ஏனெனில், நீங்கள் சற்று அஜாக்கிரதையாக இருந்தால்கூட, நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்த பணத்தை இழக்க நேரிடலாம். எனவே ஏடிஎம் போகும்போது எதுபோன்ற விஷயங்களை கவனிக்க வேண்டும் என்பது பற்றி இப்பதிவில் பார்க்கலாம்.
நீங்கள் ATM-ல் பணம் எடுக்க செல்வதற்கு முன், அந்த ஏடிஎம் பாதுகாப்பான இடத்தில் இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளவும். ஆள் நடமாட்டம் அதிகம் உள்ள இடத்தில் உள்ள ஏடிஎம் இயந்திரங்களில் பணத்தை எடுப்பது பாதுகாப்பானது. நீங்கள் பயன்படுத்தும் ஏடிஎம் வெளியே சந்தேகத்திற்கு இடமான நபர்கள் இருந்தால் அதைப் பயன்படுத்த வேண்டாம்.
பணம் எடுப்பதற்கு உங்களது கார்டை வேறு யாரிடமும் கொடுக்காதீர்கள். குறிப்பாக உங்களது பின் நம்பரை பகிர்ந்து கொள்வது முற்றிலும் பாதுகாப்பற்றது. இதன் மூலமாக நீங்கள் மோசடி செய்யப்படும் வாய்ப்புள்ளது.
ATM-ல் பின் நம்பரை போடும்போது, கீ பேடை பிறருக்கு தெரியாதவாறு உங்கள் கையை வைத்து மறைத்துக் கொள்ளவும். ஒருவேளை யாராவது உங்களது பின்-ஐ பார்க்க முயற்சித்தால், அந்த நபரை வெளியே செல்லுமாறு சொல்லுங்கள். மீறியும் அவர்கள் செல்லவில்லை என்றால் அந்த இயந்திரத்தில் பணத்தை எடுப்பதைத் தவிர்க்கவும்.
பிறர் எளிதில் யூகிக்கக்கூடிய எண்-ஐ பின் நம்பராக பயன்படுத்த வேண்டாம். குறிப்பாக உங்களது பிறந்த வருடம், தேதி போன்றவற்றை பின் நம்பராகப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். .
ஏடிஎம் இயந்திரத்தில் ஏதாவது ஸ்பை கேமரா பொருத்தப்பட்டுள்ளதா என்பதை கவனிக்கவும். இதைப் பயன்படுத்தி நீங்கள் என்டர் செய்யும் நம்பரை தெரிந்துகொண்டு, நீங்கள் போனதும் ஏடிஎம் கார்டு இல்லாத பணப் பரிவர்த்தனை செய்து உங்களை ஏமாற்றும் வாய்ப்புள்ளது.
உங்களது மொபைல் போனில் பணம் எடுத்தால் அறிவிப்பு வரும்படியான எஸ்எம்எஸ் நோட்டிபிகேஷனை ஆன் செய்து வைக்கவும். ஒவ்வொரு முறை ஏடிஎம் கார்டைப் பயன்படுத்தி பணம் எடுக்கும்போதும் உங்களுக்கு அறிவிப்பு வருவது நல்லது. நீங்கள் பணம் எடுக்காமலேயே உங்களது வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுத்தது போல மெசேஜ் வந்தால், உடனடியாக வங்கியை தொடர்பு கொண்டு புகார் அளிக்கவும்.
இறுதியாக உங்களது சொந்த விவரங்கள் மற்றும் பின் நம்பரை கேட்டு வரும் அழைப்புகள், மெசேஜ்கள் போன்றவற்றிற்கு ஒருபோதும் பதில் அளிக்காதீர்கள். இவ்வாறு யாருமே உங்களது சொந்த விவரங்களையும் பின் நம்பரையும் கேட்க மாட்டார்கள். எனவே இத்தகைய விஷயங்களைத் தவிர்ப்பது நல்லது.