

இன்று உலகம் முழுவதும் தொழில்நுட்பத் துறையில் அதிகம் உச்சரிக்கப்படும் வார்த்தை 'AI' எனப்படும் செயற்கை நுண்ணறிவு. நீராவி இன்ஜின் எப்படித் தொழில்புரட்சியை உண்டாக்கியதோ, கம்ப்யூட்டர் எப்படித் தகவல் தொழில்நுட்பத்தை மாற்றியதோ, அதேபோல இன்று AI நம் வாழ்க்கையைத் தலைகீழாகப் புரட்டிப்போட வந்திருக்கிறது.
குறிப்பாகக் கல்வித்துறையில் இது ஒரு மிகப்பெரிய பூகம்பத்தையே உருவாக்கியுள்ளது. "AI-ஐ பயன்படுத்தினால் மாணவர்களின் சிந்திக்கும் திறன் குறைந்துவிடுமா?" என்ற கேள்வி பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்தக் கேள்விக்கான விடை, கத்தியை நாம் எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பதில் தான் உள்ளது. கத்தியால் பழத்தையும் நறுக்கலாம், விரலையும் வெட்டிக்கொள்ளலாம். AI-ஐயும் அப்படித்தான்.
குறுக்குவழியல்ல... கற்றல் கருவி!
இன்றைய மாணவர்கள் தங்களுக்குத் தெரியாத கேள்விகளுக்கான பதிலை நொடிப்பொழுதில் AI மூலம் பெற்றுவிடுகிறார்கள். ஆனால், இங்கே தான் சிக்கல் ஆரம்பிக்கிறது. வீட்டுப்பாடங்களைச் செய்வதற்கோ அல்லது ஒரு கட்டுரையை எழுதுவதற்கோ AI-ஐ ஒரு குறுக்குவழியாகப் பயன்படுத்தினால், அது நிச்சயம் மாணவர்களின் மூளையை மழுங்கடித்துவிடும்.
ஆனால், ஒரு கடினமான இயற்பியல் விதியைப் புரிந்துகொள்ளவோ அல்லது சிக்கலான கணிதப் புதிருக்கு எத்தனை வழிகளில் விடை காணலாம் என்று தெரிந்துகொள்ளவோ இதைப் பயன்படுத்தினால், அது உங்கள் அறிவை பட்டை தீட்டும்.
இளைஞர்களின் கையில் எதிர்காலம்!
இந்தியா இளைஞர்கள் நிறைந்த நாடு. சுமார் 60 கோடிக்கும் அதிகமான இளைஞர்கள் நம்மிடம் உள்ளனர். இவர்களைச் சரியான AI திறன்களோடு வளர்த்தெடுத்தால், எதிர்கால உலகையே ஆளும் சக்தி இந்தியாவிடம் இருக்கும். கணினி வந்த புதிதில், "வேலைவாய்ப்புகள் பறிபோய்விடும்" என்று அனைவரும் பயந்தார்கள். ஆனால் இன்று கணினி இல்லாமல் எந்த வேலையும் இல்லை என்ற நிலை வந்துவிட்டது.
அதேபோலத்தான் AI-யும். இது பள்ளிகளிலும், அலுவலகங்களிலும் தவிர்க்க முடியாத ஒரு அங்கமாக மாறி வருகிறது. எனவே, "இதை பயன்படுத்தலாமா?" என்ற கேள்வியை விட்டுவிட்டு, "இதை எப்படிச் சாமர்த்தியமாகப் பயன்படுத்துவது?" என்று யோசிப்பதே புத்திசாலித்தனம்.
சிந்தனைத் திறன் பாதிக்கப்படுகிறதா?
தேசிய கல்விக் கொள்கையும் மனப்பாடம் செய்யும் முறையை விட்டுவிட்டு, புரிந்து படிக்கும் முறைக்கே முக்கியத்துவம் அளிக்கிறது. ஆனால், மாணவர்கள் எதற்கெடுத்தாலும் 'சாட்ஜிபிடி' (ChatGPT) போன்ற கருவிகளை நம்பியிருந்தால், அவர்களின் சொந்தக் கற்பனைத்திறன் வறண்டுவிடும். பேராசிரியர்கள் சிலர் கூறுவது போல, AI மூலம் செய்யப்படும் பணிகளின் தரம் உயர்கிறது, ஆனால் அதில் தனித்தன்மை இருப்பதில்லை.
சரியாகப் பயன்படுத்துவது எப்படி?
இதைத் தவிர்க்க ஒரு எளிய வழிமுறை உள்ளது. ஒரு பிரச்சனை அல்லது கேள்விக்கான விடையை முதலில் மாணவர் தாமாகவே சிந்தித்து எழுத வேண்டும். அதன் பிறகு, AI என்ன பதில் சொல்கிறது என்று பார்க்க வேண்டும். இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்து, எதில் என்ன பிழை உள்ளது, எதை மேம்படுத்தலாம் என்று ஆராய வேண்டும். இப்படிச் செய்தால், AI என்பது உங்கள் சிந்தனையைப் பிரதிபலிக்கும் கண்ணாடியாக மாறுமே தவிர, உங்கள் மூளைக்கு மாற்றாக இருக்காது.
வேலைவாய்ப்பின் எதிர்காலம்!
"AI வந்தால் மனிதர்களுக்கு வேலை இருக்காது" என்று பயப்படத் தேவையில்லை. ஆனால், ஒரு நிதர்சனமான உண்மையை நாம் புரிந்துகொள்ள வேண்டும். "AI மனிதர்களை மாற்றாது; ஆனால், AI-ஐ திறமையாகப் பயன்படுத்தத் தெரிந்த ஒரு மனிதர், அது தெரியாத ஒருவரை வேலையிலிருந்து மாற்றிவிடுவார்." இதுதான் எதிர்கால விதி.
எனவே, செயற்கை நுண்ணறிவுவை நம் அறிவை வளர்க்கும் தோழனாக மாற்றிக்கொள்வதும், அல்லது நம்மைச் சோம்பேறியாக்கும் எஜமானனாக மாற்றிக்கொள்வதும் நம் கையில் தான் இருக்கிறது. வெறுமனே விடைகளைத் தேடும் இயந்திரமாக இல்லாமல், புதிய விஷயங்களைப் படைக்கும் கருவியாக AI-ஐ மாணவர்கள் பயன்படுத்தத் தொடங்கினால், எதிர்காலம் நிச்சயம் வசப்படும்.