

ஏ ஐ பயன்பாடு தற்போது வேகமாக வளர்ந்து ஐடி துறைக்கு மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தி வருகிறது. பல நிறுவனங்கள் தங்களுடைய தொழிலாளர்களை lay off செய்து வருகின்றனர். இதனால் ஐடி துறையில் வேலை பார்ப்பவர்கள் மத்தியில் கடும் அச்சம் ஏற்பட்டுள்ளது. ஆனால் விப்ரோவின் தலைமை திட்ட மற்றும் தொழில்நுட்ப அதிகாரி ஹரி ஷெட்டி ஏஐ பயன்பாடு, நன்மைகள், ஐடி துறையின் அடுத்தகட்ட நிலை குறித்துக் கூறிய தகவல்களை இக்கட்டுரையில் காண்போம்.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மனிதர்கள விட வேகமாக கோடிங் எழுதி, டேட்டா பிராசஸிங், டெஸ்டிங் என அனைத்திலும் வேகத்தை காட்டி வளர்ந்து இத்தனை லட்சம் ஐடி ஊழியர்கள் தேவையா என்ற கேள்வியை முன் வைக்கிறது.
விப்ரோ தலைவர்
ஐடி துறை இந்தியாவில் மிகப்பெரிய வேலைவாய்ப்பு தரும் துறைகளில் ஒன்றாகும். ஏஐ யின் வளர்ச்சி ஐடி துறைக்கு பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது. பெரிய ஐடி நிறுவனங்கள் ஆட்டம் கண்டு வரும் நிலையில் ஏஐ வளர்ச்சி தொடர்பாக விப்ரோவின் தலைமை திட்ட மற்றும் தொழில்நுட்ப அதிகாரி ஹரி ஷெட்டி (Chief Strategist and Technology Officer), சில முக்கிய கருத்துகளைக் கூறியுள்ளார்.
தொழில்நுட்ப உலகில் அடுத்த 20 ஆண்டுகளுக்கு ஏஐ தொழில்நுட்பம் பேசு பொருளாக இருக்கும். அதேவேளையில் இந்தியாவின் ஐடி துறைக்கு இது பெரிய அச்சுறுத்தலாக இருக்காது என உறுதியளித்துள்ளார். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் காரணமாக வேலைவாய்ப்பு பெருமளவு குறையும் என பலரும் அஞ்சுகையில், ஐடி நிறுவனங்கள் வேலை வாய்ப்புகளை அதிகரிக்கவே செய்யும் என்பது ஹரி ஷெட்டியின் கருத்தாக உள்ளது.
புதிய வேலைகள் உருவாகும்
இது தொடர்பான விரிவான செய்தியை ராய்ட்டர்ஸ் வெளியிட்டுள்ளதால் ஹரி ஷெட்டி இத்தகைய அச்சம் தேவையற்றது எனக் கருதுகிறார். இது தொடர்பாக அவர் கூறும் போது, ஏஐ மூலம் நமக்கு கிடைக்கும் வாய்ப்புகளை பார்க்கும்போது, செயற்கை நுண்ணறிவு தற்போது இருக்கும் சில வேலைகளை நீக்கினாலும், அதைவிட அதிக எண்ணிக்கையில் புதிய வேலைகளை உருவாக்கும். தற்போது ஏஐ யின் தொடக்கம் அதாவது ஆடோமேஷன் மட்டுமே ஏஐ மூலம் நடக்கிறது. ஆனால் ஏஐ யின் அடுத்த கட்டம் முற்றிலும் மாறுபட்டதாக இருந்து ஒட்டுமொத்த ஐடி பிசினஸை மாற்றி அமைக்கும்.
வெறும் ப்ராஜெக்ட் முடிப்பது மட்டுமே வேலையாக இல்லாமல், ஐடி நிறுவன பிசினஸ்கள் இயங்குவதை புரிந்துகொண்டு நிபுணத்துவத்துடன் நெருக்கமாக செயல்பட வேண்டிய காலகட்டமாக அடுத்து வரும் காலம் இருக்கும்.
புரட்சி
தொழில்நுட்பத்துறை பார்க்காத மிகப்பெரிய ஒற்றை வாய்ப்பான ஏஐ, மின்சாரம் மற்றும் இணையம் போன்ற முக்கியமான புரட்சிகளுடன் ஒப்பிடும்படி உள்ளது. உலக பொருளாதார மன்றத்தின் ரிப்போர்ட்டை மேற்கோள் காட்டி ஏஐ என்றாலே வேலை இழப்பு என்பதை தாண்டி பல விஷயங்கள் இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
ஏஐ சுமார் 92 மில்லியன் வேலைகளை அழித்தாலும் உலக அளவில் சுமார் 170 மில்லியன் புதிய வேலைகளை உருவாக்கும் என்பதே அந்த ரிப்போர்ட்டில் கூறப்பட்டுள்ள செய்தி.
இது முக்கியம்
வரும் காலங்களில் ஏஐ பயன்படுத்தத் தெரிந்தவர்கள் மற்றும் ஏஐ பயன்படுத்தத் தெரியாதவர்கள் இடையே மட்டும் வேறுபாடு இருக்கும் என்பது அவரின் கணிப்பாக உள்ளது. எந்த ஒரு புதிய தொழில்நுட்பமும் ஐ.டி நிறுவனங்களின் வேலை வாய்ப்புகளை விரிவுபடுத்துமே தவிர குறைக்காது என்பதால் அடுத்து வரும் 20 ஆண்டுகளில் நாம் ஐடி துறையில் நிலைத்து நிற்க வேண்டுமானால் ஏஐ தொழில்நுட்பத்தை தெரிந்து கொள்வது மிகவும் முக்கியமாகும் என்கிறார் விப்ரோவின் தலைமை திட்ட மற்றும் தொழில்நுட்ப அதிகாரி ஹரி ஷெட்டி.