
அடிக்கடி விண்கற்கள் பூமிக்கு அருகில் வர இருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. பெரும்பாலும் விண்கற்கள் அல்லது சிறு கோள்கள் பூமிக்கு அருகில் வரும் முன்னரே முழுமையாக எரிந்து விடுகின்றன. சில சமயம் பூமியின் மீது சில சிறு கோள்களும் தாக்கியுள்ளது. 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் மெக்சிகோவின் கடற்கரை பகுதியில் 10-15 கிமீ பரப்பளவு கொண்ட மிகவும் சிறிய கோள் ஒன்று மோதியது. அந்த மோதலில் அப்போது இருந்த மிகப்பெரிய உயிரினங்கள் முற்றிலும் அழிந்தன. பூமியின் பெரும்பகுதிகள் தீக்கிரையானது. இந்த பெரும் அழிவு காலத்தில்தான் டைனோசர்கள் இனமே முற்றிலும் அழிந்தது.
கடந்த ஜனவரி மாத முடிவில் வெளிவந்த ஆய்வு அறிக்கையில் 2182 ஆம் ஆண்டில் பென்னு என்ற சிறுகோள் பூமியைத் தாக்கி பேரழிவை ஏற்படுத்தக் கூடும் என்று விஞ்ஞானிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். பென்னு சிறுகோள் சுமார் 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு சூரிய மண்டல வெடிப்பில் சிதறிய ஒரு பெரிய பாறை ஆகும். பென்னு சிறுகோள், ஒவ்வொரு ஆறு வருடங்களுக்கும் சுமார் 299,000 கிமீ தொலைவில் பூமிக்கு மிக அருகில் வருகிறது. 2182 ஆம் ஆண்டு செப்டம்பரில் இந்த கோள் பூமியுடன் மோதுவதற்கான பெரிய வாய்ப்பு ஒன்று உள்ளது. அதில் ஒரு வேளை தவறினால் 2700 ஆம் ஆண்டில் மோத ஒரு வாய்ப்பு உள்ளதாக விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.
"பென்னு சிறுகோள் பூமியைத் தாக்கும் வாய்ப்பு 0.037% என்ற அளவில் குறைவாக இருந்தாலும், ஒருவேளை வேகமாக மோதி விட்டால் பல நூறு அணுகுண்டு தாக்குதல்களை விட இதன் தாக்கம் பல ஆயிரம் மடங்கு அதிகமாக இருக்கும். கண்டங்கள் தீப்பிடித்து எரியும். பென்னு சிறுகோள் ஒரு பக்கமே மோதினாலும் அதன் விளைவில் மொத்த பூமியும் பாதிக்கும். உடனடி பேரழிவைத் தவிர, பூமியின் வளிமண்டலத்தில் 100-400 மில்லியன் டன் தூசி இந்த மோதலினால் பரவும். இதனால் காலநிலை மற்றும் உலகளாவிய ஒளிச்சேர்க்கை ஆகியவற்றில் நான்கு ஆண்டுகள் வரை பாதிப்பு ஏற்படும். சூரிய ஒளி குறைதல், குளிர் வெப்பநிலை மற்றும் மழைப்பொழிவு குறைதல் போன்ற விளைவுகளை ஏற்படுத்தும். திடீர் குளிர்காலம் சுற்றுச்சூழலில் ஏற்படும்" என்று தென் கொரியாவில் உள்ள பூசன் தேசிய பல்கலைக்கழகத்தில் உள்ள ஐபிஎஸ் காலநிலை இயற்பியல் மையத்தின் முதுகலை ஆராய்ச்சியாளர் லான் டாய் கூறியுள்ளார்.
இந்த சூழ்நிலையில், பூமியின் வெப்பநிலை சுமார் 4 டிகிரி செல்சியஸ் வரை குறையும். சராசரி மழைப்பொழிவு 15% குறையும்; தாவர ஒளிச் சேர்க்கையில் 20-30% வரை குறையும்; இதனால் உணவு பற்றாக்குறை அனைத்து உயிரினங்களுக்கும் ஏற்படும். ஓசோன் மண்டலத்திலும் 32% வரை பாதிப்பை ஏற்படுத்தும். இவை எல்லாவற்றையும் தாண்டி சிறுகோள் பூமியில் மிகப்பெரிய பள்ளத்தினை உருவாக்கும். மிகப்பெரிய பள்ளத்தில் பெருமளவில் கடல்நீர் உட்புகும், இதனால் பாரம்பரிய கடல் பகுதியில் உள்ள தண்ணீரின் அளவும் பெருமளவு குறையக் கூடும். சிறுகோள் மோதலில் மிகப்பெரிய அளவில் கடல்வாழ் உயிரினங்களின் அழிவு இருக்கும்.
2020 ஆம் ஆண்டு நாசாவின் ரோபோடிக் OSIRIS-REX விண்கலம் பென்னுவுக்குப் பயணித்து அதன் பாறை மற்றும் தூசியின் மாதிரிகளை சேகரித்தது. 2022 ஆம் ஆண்டில், நாசா ரோபோடிக் டார்ட் விண்கலத்தைப் பயன்படுத்தி, டைமார்போஸ் என்ற சிறுகோளின் பாதையை மாற்ற முயற்சி செய்து வருகிறது. இதன் மூலம் எதிர்காலத்தில் பூமியுடன் சிறுகோள் மோதும் பாதையில் மாற்றம் செய்து , பூமியின் பாதுகாப்பை உறுதி செய்ய விஞ்ஞானிகள் முயற்சி செய்து வருகின்றனர்.