
உலகம் எண்ணற்ற மாற்றங்களைக் கண்டுள்ளது, பல பொருட்கள் உருவாகி மறைந்தும் உள்ளன. ஆனால், மனிதன் உருவாக்கிய ஒரு பொருள் மட்டும் இன்று வரை அழியாமல், பூமிக்கு பெரும் அச்சுறுத்தலாக நீடிக்கிறது - அதுதான் பிளாஸ்டிக். அதன் பலதரப்பட்ட பயன்பாடுகள் இருந்தாலும், பிளாஸ்டிக்கினால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசுபாடு சொல்லி மாளாது. இந்த நிலையில், அதிர்ச்சியூட்டும் புதிய ஆய்வு ஒன்று மனித குலத்தை உலுக்கியுள்ளது. ஆம், மனித மூளையிலும் பிளாஸ்டிக் துகள்கள் ஊடுருவி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய ஆய்வுகள், மனித உடலின் பிற பாகங்களை விட, மூளையில் மைக்ரோபிளாஸ்டிக்ஸின் செறிவு பன்மடங்கு அதிகம் எனக் கண்டறிந்துள்ளது. குறிப்பாக, மூளை திசுக்களில் கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களை விட சுமார் 12 மடங்கு அதிக பிளாஸ்டிக் துகள்கள் இருப்பது விஞ்ஞானிகளை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
பாலித்தீன் போன்ற பிளாஸ்டிக் வகைகள், அன்றாட பயன்பாட்டு பொருட்களான பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் உணவுப் பொட்டலங்களில் இருந்து வருகின்றன. இவை மூளை திசுக்களில் கணிசமான அளவில் படிந்து காணப்படுவது கவலை அளிக்கிறது. மேலும், டிமென்ஷியா எனப்படும் மறதி நோய் உள்ளவர்களின் மூளை மாதிரிகளில், இந்த நோய் இல்லாதவர்களை விட பத்து மடங்கு அதிக பிளாஸ்டிக் இருப்பது கூடுதல் வேதனை அளிக்கிறது.
எப்படி இந்த பிளாஸ்டிக் துகள்கள் மூளைக்குள் செல்கின்றன? மூளையின் நரம்பு செல்களைச் சூழ்ந்து பாதுகாக்கும் மெய்லின் உறை போன்ற கொழுப்பு நிறைந்த பகுதிகளில் மைக்ரோபிளாஸ்டிக் துகள்கள் எளிதில் குவியக்கூடும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். மூளையின் தனித்துவமான அமைப்பு மற்றும் நெகிழ்வுத்தன்மை காரணமாகவே, பிளாஸ்டிக் துகள்கள் மற்ற உறுப்புகளை விட மூளையில் அதிகம் தங்குவதாக நம்பப்படுகிறது.
டிமென்ஷியா நோயாளிகளின் மூளையில், இரத்த நாளங்கள் மற்றும் நோய் எதிர்ப்பு செல்களின் கொத்துக்களைச் சுற்றி பிளாஸ்டிக் துகள்களின் அடர்த்தி மிகவும் அதிகமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது மூளையின் இயல்பான செயல்பாட்டிற்கு இடையூறு விளைவிக்கலாம் என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது.
2024 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், சராசரியாக ஒரு கிராம் மூளை திசுவில் சுமார் 4,917 மைக்ரோகிராம் மைக்ரோபிளாஸ்டிக் இருப்பது கண்டறியப்பட்டது. இது ஒரு கிலோ மூளை திசுவில், நான்கு முதல் ஐந்து பேப்பர் கிளிப்புகள் அளவுக்கு பிளாஸ்டிக் சேர்ந்திருப்பதற்கு சமம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். 2016 முதல் 2024 வரையிலான எட்டு ஆண்டுகளில், மூளையில் சேரும் பிளாஸ்டிக் அளவானது கிட்டத்தட்ட 50 சதவீதம் அதிகரித்துள்ளது என நேச்சர் மெடிசின் இதழில் வெளியான ஆய்வு தெரிவிக்கிறது.
நாம் உண்ணும் இறைச்சி கூட உடலில் மைக்ரோபிளாஸ்டிக் சேர்வதற்கு ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். மாசுபட்ட நீர், பிளாஸ்டிக் கலந்த கால்நடை தீவனம் மற்றும் விலங்குகளின் கழிவுகளில் இருந்து வரும் உரம் போன்றவை பிளாஸ்டிக் வெளிப்பாட்டை அதிகரிக்கும் காரணிகளாக இருக்கலாம். அமெரிக்காவின் மேற்கு கடற்கரை பகுதிகளில் இருந்து கிடைக்கும் கடல் உணவுகளிலும் அதிக அளவு மைக்ரோபிளாஸ்டிக் இருப்பது மற்றொரு ஆய்வில் தெரியவந்துள்ளது.