
"ஆக்ஸில் கவுன்டர் பெட்டி" என்பது, ஒரு உயிர் காக்கும் பெட்டியாகும். இது எங்கே வைக்கப்பட்டுள்ளது ? எவ்வாறு செயல்படுகிறது ? என்பது குறித்து தெரிந்து கொள்ளலாமா?
உலகத்தில் நான்காவது பெரிய ரெயில்வே நெட்வொர்க் மற்றும் அதிக பணியாளர்களைக் கொண்ட ஒரு அமைப்பாக விளங்குகிறது இந்திய ரெயில்வே. இந்தியாவில் ஒரு நாளில், சுமார் ஐந்து கோடி மக்கள் ரெயிலில் பயணம் செய்கின்றனர். இந்தியாவிலேயே சொகுசான, அதே நேரத்தில் விலை குறைவான ஒரு போக்குவரத்து வாகனம் எதுவென்றால், அது ரெயில் தான். பயணிகளின் பாதுகாப்பிற்காக, "ஆக்ஸில் கவுன்டர் பெட்டிகள்" வைக்கப் பட்டுள்ளன. எங்கே?
ஆக்ஸில் கவுன்டர் பெட்டி
ரெயில் ஊரைவிட்டு வெளியே ஓட ஆரம்பிக்கையில், ஆங்காங்கே ரெயில்வே பாதைக்கருகே நமது வீட்டில் வைத்திருக்கும் குட்டி பீரோ மாதிரி அலுமினிய நிறத்தில் பெட்டிகள் வைக்கப் பட்டிருக்கும். இது எதற்காக? என்று அநேகம் பேர்களுக்குத் தெரியாது. ஏதோ தண்டவாளத்திற்காக வைத்திருக்கிறார்கள் என்று எண்ணுவார்கள். ஆனால், இது பயணிகளின் உயிர் காக்கும் பெட்டிகளாகும். ரெயில் பெட்டிகளை எண்ணுவதுதான் இப்பெட்டியின் முக்கிய வேலை.
பயணிகளின் உயிர் காக்கும் இப்பெட்டி "ஆக்ஸில் கவுன்டர் பெட்டி" என கூறப்படுகிறது. ரெயில் பாதுகாப்பாக செல்வதை உறுதிப்படுத்த உதவுகிறது. ஒரு ரெயில் குறிப்பிட்ட பாதையில் செல்லும்போது, அப்பாதையில் உள்ள "ஆக்ஸில் கவுன்டர் பெட்டி", ரெயிலின் சக்கரங்களை எண்ணி சரி பார்க்கும். ரெயில் பெட்டி எங்காவது கழன்று விட்டால், அப்பெட்டியிலுள்ள சக்கரங்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும். ஆக்ஸில் கவுன்டர் பெட்டி மூலம், கழன்று போன பெட்டியைக் கண்டு பிடித்து விடலாம். மேலும், ரெயிலின் வேகம் மற்றும் திசை ஆகியவைகளை அறியலாம்.
எவ்வாறு கண்டு பிடிக்கும்?
ரெயில் பாதையில் ஒவ்வொரு 3 அல்லது 5 கி.மீ. தூரத்தில், சென்ஸார் பொருத்தப்பட்ட "ஆக்ஸில் கவுன்டர் பெட்டி" வைக்க பட்டிருக்கும். இந்த பெட்டியிலிருந்து ஒரு கம்பி ரெயில் தண்டவாளத்தில் பொருத்தப்பட்டிருக்கும் கருவியுடன் இணைக்கப்பட்டிருக்கும். ரெயில் கடந்து செல்கையில், அதன் சக்கரங்கள், தண்டவாளக் கருவியை அழுத்துகையில், கம்பி மூலம் "ஆக்ஸில் கவுன்டர் பெட்டி" க்கு தகவல் செல்ல, ஃபைபர் ஆக்டிவ் முறைப்படி கண்டறிந்து சக்கரங்களின் எண்ணிக்கை அதில் பதிவாகிவிடும்.
"ஆக்ஸில் கவுன்டர் பெட்டி", பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த மையமாக அமைந்துள்ள கணினிகளால் மேற்கொள்ளப்படுகிறது. அவை "மதிப்பீட்டாளர்கள்" என்று அழைக்கப்படுகின்றன. இதில் ஆக்ஸில் கவுன்டர் சென்சார்கள் புலத்தில் தேவையான இடங்களில் அமைந்துள்ளன. "ஆக்ஸில் கவுன்டர்" சென்சார்கள் மதிப்பீட்டார்களுடன் பிரத்யேக காப்பர் கேபிள் அல்லது தொலைத்தொடர்பு பரிமாற்ற அமைப்பு வழி மூலம் இணைக்கப்பட்டுள்ளன.
"கருமமே கண்ணாயினார்" என்பது போல, "எண்ணுவதே என் வேலை" என செயல்படும் "ஆக்ஸில் கவுன்டர் பெட்டி", ரெயில் பயணிகளுக்கு ஒரு வரப் பிரசாதம் எனலாம். சரிதானே!