வெறும் ஒரு புல் மூலம் முழு நகரத்திற்கே மின்சாரம்... விஞ்ஞானிகளின் அதிரடி கண்டுபிடிப்பு!

blechnum orientale plant
blechnum orientale plantImg credit: reddit
Published on

இயற்கை மனிதர்களை அடிக்கடி ஆச்சரியப்படுத்திக் கொண்டே இருக்கிறது. சில நேரங்களில் விஞ்ஞானிகள் கண்டுபிடிக்கும் விஷயங்கள் எதிர்கால தொழில் நுட்பத்தையே மாற்றக்கூடிய அளவுக்கு முக்கியமானதாக உள்ளது.

சமீபத்தில் ஆசியாவில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆராய்ச்சி இதற்கு சிறந்த உதாரணம். ஒரு அரிய தாவரம் அதன் உடலில் கிரிஸ்டல்களை உருவாக்கும் திறன் கொண்டது என்று விஞ்ஞானிகள் செய்த ஆய்வில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இந்த கண்டுபிடிப்பு மூலம் எதிர்காலத்தில் முழு நகரங்களுக்கே மின்சாரம் வழங்கும் புதிய வழிகளை உருவாக்க இயலும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

இந்த ஆச்சரியமான தாவரம் ஆசியாவின் பல பகுதிகளில் காணப்படுகிறது. இதன் பெயர் Blechnum orientale. இது ஒரு வகை பச்சை நிற புல்வகை. இது தென் சீனா உள்ளிட்ட ஆசியாவின் ஈரப்பதமான பகுதிகளில் வளரக்கூடிய ஒரு சாதாரண காட்டுச் செடி.

விஞ்ஞானிகள் இந்த செடியை ஆய்வு செய்தபோது, இந்த தாவரம் மண்ணில் உள்ள 'Rare Earth Elements' எனப்படும் அரிய உலோகங்களை அதன் வேர் மூலம் உறிஞ்சும் திறன் கொண்டது என்பதை கண்டுபிடித்தனர். இந்த தன்மை கொண்ட செடிகளை 'Hyperaccumulator plants' என்று அழைக்கின்றனர். அதாவது மண்ணில் உள்ள உலோகங்களை சாதாரண தாவரங்களைவிட அதிக அளவில் உறிஞ்சி சேமிக்கும் திறன் கொண்டவை. இந்த திறன் காரணமாகவே விஞ்ஞானிகள் இந்த தாவரத்தை ஆராய்ந்து வந்தனர்.

ஆய்வில், இந்த தாவரம் அதன் திசுக்களில் வேர் மூலம் உறிஞ்சிய உலோகங்களை மிகச் சிறிய அளவிலான மோனசைட் என்ற கனிம கிரிஸ்டல்களாக மாறுகின்றன என்பது தெரியவந்துள்ளது. இந்த கிரிஸ்டல்கள் நானோ அளவில் இருக்கும். அதாவது, மனிதக் கண்களுக்கு தெரியாத அளவு சிறியவை.

மோனசைட் என்பது நியோடிமியம், லாந்தனம், செரியம் போன்ற அரிய உலோகங்களை கொண்ட முக்கியமான கனிமமாகும். இவை மின்சார வாகனங்கள், ஸ்மார்ட் ஃபோன்கள், காற்றாலை டர்பைன்கள் மற்றும் பல உயர் தொழில்நுட்ப சாதனங்களில் பயன்படுத்தப் படுகின்றன. இந்த Rare Earth Elements இல்லாமல் நவீன தொழில்நுட்ப உலகமே இயங்காது.

இதையும் படியுங்கள்:
பெட்ரோல், டீசல் எல்லாம் ஓரம்போ... உலகையே அதிர வைத்த புதிய லேசர் டெக்னாலஜி!
blechnum orientale plant

ஆனால், இந்த வகை கனிமங்கள் பெரும்பாலும் பூமியின் ஆழத்தில் அதிக வெப்பம் மற்றும் அழுத்தத்தில் உருவாகும். இவற்றை பெறுவதற்கு பெரிய அளவில் சுரங்கம் தோண்ட வேண்டியிருக்கும். இது சுற்றுச்சூழலுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்துகிறது.

ஆனால், இந்த கண்டுபிடிப்பு 'Phytomining' என்ற புதிய கருத்துக்கு வழி வகுக்கிறது. Phytomining என்றால், உலோகங்கள் நிறைந்த மண்ணில் இந்த மாதிரியான செடிகளை வளர்த்து, அவை மண்ணிலிருந்து உலோகங்களை உறிஞ்சும் வரை காத்திருந்து பின்னர் செடியை அறுவடை செய்து, அதன் பிறகு அந்த செடியிலிருந்து கிரிஸ்டல்கள் அல்லது உலோகங்களை எளிதாகப் பெறும் செயல்முறை. இந்த முறை சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் சேதத்தைக் குறைக்க உதவுகிறது.

Rare Earth Elements பல்வேறு பசுமை ஆற்றல் தொழில்நுட்பங்களின் முக்கிய அங்கமாக உள்ளன. காற்றாலை மின் உற்பத்தி, மின்சார வாகனங்கள், சோலார் தொழில்நுட்பங்கள் போன்றவற்றில் இந்த உலோகங்கள் பயன்படுத்தப்படுகின்றன. எனவே, இந்த மாதிரியான செடிகள் மூலம் அதிக அளவில் இந்த கனிமங்களை பெற முடிந்தால், எதிர்காலத்தில் பசுமை ஆற்றல் உற்பத்தி மிகவும் எளிதாகவும் மலிவாகவும் மாறலாம். அதனால் ஒரு நாள் முழு நகரங்களுக்கே இந்த தொழில்நுட்பம் மறைமுகமாக ஆற்றல் வழங்க உதவலாம் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

தற்போது, இந்த கண்டுபிடிப்பு ஆரம்ப கட்டத்தில் உள்ளது. இந்த செடி எப்படி இந்த கிரிஸ்டல்களை உருவாக்குகிறது? இதை பெரிய அளவில் வளர்க்க முடியுமா? மற்ற செடிகளுக்கும் இதே திறன் இருக்கிறதா? என இன்னும் பல கேள்விகளுக்கு விஞ்ஞானிகள் பதில் தேடிக்கொண்டிருக்கின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com