விண்கல் மோதலா, ஏலியன்ஸா? கேரளாவை அதிரவைத்த 'இரத்த மழை' பின்னணியில் இருக்கும் அறிவியல் உண்மை!

Algal Spores Rain - இரத்த மழை
Algal Spores Rain - இரத்த மழை
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

லகத்தில் நடக்கும் விசித்திரங்களுக்கும் ஆச்சரியங் களுக்கும் பஞ்சமே கிடையாது என்றுதான் சொல்ல வேண்டும். மனிதன் எவ்வளவுதான் கண்டுபிடிப்புகளை நிகழ்த்திக்கொண்டே இருந்தாலும், இயற்கை வெளியிடும் விஷயங்களுக்கு எல்லை இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஆலங்கட்டி மழை, பேய் மழை, புயல் மழை, பனி மழை என நிறைய கேள்விப்பட்டிருப்போம். ஆனால் இந்த குருதி மழைப் பற்றி அவ்வளவாக கேள்விப் பட்டிருக்க மாட்டோம்.

இது இயற்கை நிகழ்த்தும் ஒரு விந்தை என்றே சொல்லலாம். இதனை பல வகைப்பட்ட இலக்கியங்களில் ஒரு துக்க சம்பவத்தின் அறிகுறியாகவோ அல்லது தொடர்ச்சியாகவோ குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் இது ஒரு சாதாரண இயற்கை நிகழ்வாகும்.

குருதி மழை (Blood Rain) அல்லது சிவப்பு மழை (Red Rain) என்பது வானத்திலிருந்து ரத்தம் போல சிவப்பு நிறத்தில் மழை பெய்யும் ஒரு வானியல் மற்றும் இயற்பியல் நிகழ்வாகும். இது இயற்கையான அறிவியல் செயல் முறைகளின் விளைவே தவிர, எந்த ஒரு அமானுஷ்யமான நிகழ்வும் அல்ல. இது வளிமண்டலத்தில் காற்றுடன் கலக்கும் நுண்துகள்கள் அல்லது நுண்ணுயிரிகள் மழையோடு சேர்ந்து பூமியில் பொழியும் பொழுது நிகழ்கிறது.

சிவப்பு மழைக்கான முக்கிய காரணங்கள்:

பாசி வித்துக்கள் (Algal Spores):

அறிவியல் ரீதியாக இந்த மழைக்குக் காரணம் காற்றுடன் அடித்துவரப்படும் ஒருவகை நுண்ணிய பாசி வித்துக்கள் தான். பொதுவாக மரங்களின் பட்டைகளில் வளரும் ட்ரென்டெபோலியா (Trentepohlia) போன்ற பச்சை நுண்ணுயிரிகளில் கரோட்டினாய்டு (carotenoids) எனப்படும் சிவப்பு நிறமி அதிக அளவில் இருக்கும். பலத்த காற்று அல்லது புயலின் போது இந்த பாசிகள் வளிமண்டலத்தில் உறிஞ்சப்பட்டு, மழை மேகங்களுடன் கலந்து சிவப்பு நிற மழையாகப் பொழிகின்றன.

வளிமண்டல தூசிகள் மற்றும் கனிமங்கள்:

புயல், சூறாவளி அல்லது வறண்ட பகுதிகளிலிருந்து எழும் பலத்த காற்று, வளிமண்டலத்தின் மேல் அடுக்கு வரை தூசிகளை எடுத்துச் செல்லும். அந்த தூசிகளில் இரும்பு ஆக்சைடு அதிகமாக இருந்தால், மழைத்துளிகள் சிவப்பு அல்லது பழுப்பு நிறமாக மாறுகின்றன. இரும்பு துருப்பிடிக்கும்போது ஏற்படும் அதே வேதியியல் மாற்றம் தான் இதிலும் நிகழ்கிறது.

Blood Rain Kerala
Blood Rain KeralaAI Image

வரலாற்றை உலுக்கிய இரத்த மழை: கேரளா மற்றும் இலங்கையில் நடந்தது என்ன?

வரலாற்றில் பல இடங்களில் இந்த சிவப்பு மழை பதிவாகியுள்ளது. முக்கியமாக இந்தியாவில் கேரளா மாநிலத்தில் 2001ஆம் ஆண்டு செம்ம மழை பொழிந்தது. இலங்கையில் 2012 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மொனராகலை மாவட்டத்தில் இந்த செம்மழை பொழிந்துள்ளது.

கேரளாவில் ஜூலை 2001ஆம் ஆண்டு, மாநிலத்தின் தென் பகுதியில் உள்ள கோட்டயம் மற்றும் இடுக்கி மாவட்டங்களில் பெய்யத் தொடங்கிய வண்ணமழை மஞ்சள், பச்சை மற்றும் கருப்பு நிறத்தில் பதிவானது. பின்னர் செப்டம்பர் பிற்பகுதி வரை குறைந்த அதிர்வெண்ணுடன் சிவப்பு மழையின் மேலும் பல நிகழ்வுகள் அடுத்த 10 நாட்களில் பதிவாகின. இந்த சிவப்பு மழை பொதுவாக 20 நிமிடங்களுக்கும் குறைவாகவே நீடித்தது.

இயற்கையின் விசித்திரம்: இரத்த மழை உருவாவதற்கான உண்மையான அறிவியல் காரணம்.

2001 இல் ஒரு ஒளி நுண்ணோக்கியால் செய்யப்பட்ட பரிசோதனையைத் தொடர்ந்து, மழையானது ஒரு கற்பனையான விண்கல் வெடிப்பின் வீழ்ச்சியால் வண்ணமயமானது என்று முதலில் கருதப்பட்டது. இந்நிகழ்வுகள் குறித்து பல்வேறு ஆய்வு நிறுவனங்கள் ஆய்வு செய்தன. இலங்கை மற்றும் கேரளாவில் பெய்த சிவப்பு மழை உலகளவில் பெரும் கவனத்தைப் பெற்றது. ஆரம்பத்தில் இது ஏலியன் (வேற்றுக்கிரக) விண்கல் துகள்களால் ஏற்பட்டது என ஊகங்கள் கிளம்பினாலும், பின்னர் இந்திய தாவரவியலாளர்கள் மற்றும் அறிவியலாளர்கள் மேற்கொண்ட ஆய்வில், இது காற்று மூலம் பரவிய பாசி வித்துக்களால் உருவானது என்று நிரூபிக்கப்பட்டது.

இதையும் படியுங்கள்:
நள்ளிரவில் நாய் குரைப்பது கெட்ட சகுனமா? அறிவியல் கூறும் உண்மை என்ன?
Algal Spores Rain - இரத்த மழை

இந்திய அரசால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், டிரென்டெபோலியா பேரினத்தைச் சேர்ந்த உள்நாட்டில் செழிப்பான நிலப்பச்சை பாசியிலிருந்து காற்றில் பரவும் வித்துக்களால் மழைக்கு வண்ணமயம் ஏற்பட்டது என்று முடிவு செய்யப்பட்டது.

இந்தக் கட்டுரையை வாசிப்பதன் மூலம், காலம் காலமாகப் பரப்பப்பட்டு வரும் அமானுஷ்ய வதந்திகளைத் தாண்டி, இயற்கையின் விசித்திரமான நிகழ்வுகளுக்குப் பின்னால் இருக்கும் துல்லியமான தாவரவியல் மற்றும் வளிமண்டல அறிவியல் காரணங்களை உங்களால் மிக எளிதாகப் புரிந்துகொள்ள முடியும்.

logo
Kalki Online
kalkionline.com