அமெரிக்காவின் கால்டெக் (Caltech) பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மூளை நோய்களுக்கு மருந்து செலுத்தும் புதிய நானோ ரோபோக்கள் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளனர்.
மருத்துவப் பொறியியல் பேராசிரியர் வெய் காவோ (Wei Gao) தலைமையிலான குழு வடிவமைத்துள்ள இந்த 'பிரெய்ன்பாட்ஸ்' (BrainBots), மூளையின் மிகக் கடினமான பாதுகாப்புத் தடையைத் தாண்டிச் செல்லும் திறன் கொண்டவை. இந்த ஆய்வின்படி, ஒளியால் தூண்டப்படும் இந்த ரோபோக்கள் வழக்கத்தை விட 5 மடங்கு அதிக மருந்தை மூளைக்குக் கொண்டு செல்கின்றன.
மூளை சிகிச்சையில் இருக்கும் பெரிய சவால்!
மனித மூளையை ஆபத்தான கிருமிகளிடம் இருந்து பாதுகாக்க ரத்த-மூளைத் தடை (Blood-brain Barrier) என்ற நுண்ணிய வடிகட்டி உள்ளது. ஆனால், மூளைக் கட்டிகள் மற்றும் நரம்பியல் நோய்களுக்கு ரத்த நாளம் வழியாகச் செலுத்தப்படும் மருந்துகள் மூளைக்குள் செல்வதையும் இந்தத் தடை தடுத்துவிடுகிறது.
இந்தச் சிக்கலைத் தீர்க்கவே, உடலுக்குப் பாதுகாப்பான, எளிதில் சிதையக்கூடிய பொருட்களைக் கொண்டு சுயமாக நகரும் மிக நுண்ணிய ரோபோக்களை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
ஒளி மூலம் இயங்கும் செயல்முறை!
சிறிய பலூன் போன்ற வடிவம் கொண்ட இந்த பிரெய்ன்பாட்ஸ் வெறும் 250 நானோமீட்டர் அளவே இருக்கும். இது மனித தலைமுடியின் அகலத்தை விடப் பல நூறு மடங்கு சிறியது. இதன் உள்ளே வாயுவை உருவாக்கும் அம்மோனியம் பைகார்பனேட் எரிபொருள் நிரப்பப்பட்டு, வெப்பத்தால் உருகும் கதவு மற்றும் மருந்து இணைக்கப்பட்டிருக்கும்.
இவை ரத்தத்தில் செலுத்தப்பட்ட பிறகு, மண்டையோடு வழியாக அகச்சிவப்பு ஒளி பாய்ச்சப்படும். அந்த ஒளி உருவாக்கும் வெப்பத்தால் கதவு உருகி வாயு வெளியேறி, ரோபோக்கள் மூளைத் தடையின் செல்களை நோக்கி வேகமாக நகரும்.
இவற்றில் பொருத்தப்பட்டுள்ள ஆப்டாமர்கள் (Aptamers) என்ற சிறப்பு டிஎன்ஏ மூலக்கூறுகள், மூளைத் தடையின் செல்களை அடையாளம் கண்டு அவற்றோடு ஒட்டிக்கொள்ள உதவுகின்றன. பின்னர் அந்தச் செல்கள் வழியாகவே ரோபோக்கள் மூளைக்குள் நுழைந்து, முழுமையாகச் சிதைந்து மருந்தை வெளியிடும். மூளைக்குள் செல்லாமல் உடலின் மற்ற பாகங்களில் தங்கும் ரோபோக்கள் கல்லீரல் மற்றும் மண்ணீரலால் உறிஞ்சப்பட்டு இயல்பாகவே சிதைந்துவிடும்.
எலிகளிடம் நடத்தப்பட்ட பரிசோதனையின் முடிவு!
கிளியோபிளாஸ்டோமா (Glioblastoma) எனப்படும் மூளைப் புற்றுநோய் பாதித்த எலிகளிடம் இந்தத் தொழில்நுட்பம் பரிசோதிக்கப்பட்டது. இதன் மூலம் கீமோதெரபி மருந்தை இந்த ரோபோக்கள் மூளைக்குள் துல்லியமாகக் கொண்டு சென்றன. இதனால் புற்றுநோய்க் கட்டியின் வளர்ச்சி குறைந்து, எலிகளின் வாழ்நாள் அதிகரித்தது. மூளையின் பாதுகாப்புத் தடைக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என்பதோடு, வழக்கமான கீமோதெரபியால் உடலில் ஏற்படும் பக்கவிளைவுகளும் கணிசமாகக் குறைந்தன.
அடுத்தகட்ட ஆய்வுகள்!
ரத்த ஓட்டம் மிக வேகமாக இருப்பதால் இந்த நுண்ணிய இயக்கம் எந்த அளவுக்குப் பலன் தரும் என்பதில் முதலில் சந்தேகம் இருந்ததாகவும், எதிர்பார்த்ததை விடச் சிறப்பாகச் செயல்பட்டதாகவும் வெய் காவோ குறிப்பிட்டுள்ளார். மூளைப் புற்றுநோய் மட்டுமல்லாமல், பார்கின்சன் போன்ற பிற நரம்பியல் நோய்களுக்கும் இது உதவக்கூடும் என ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். இருப்பினும், மனிதர்களிடம் பரிசோதிப்பதற்கு முன்பு ஒளி செலுத்தும் முறையை மேம்படுத்துவதும், உடலில் இதன் நீண்ட காலப் பாதுகாப்பை உறுதி செய்வதும் அவசியம்.
இன்னும் பலகட்ட மருத்துவ ஆய்வுகள் தேவைப்பட்டாலும், மூளை நோய்களுக்கான சிகிச்சையில் புதிய நம்பிக்கையை விதைத்துள்ள இந்த நானோ ரோபோக்கள், வருங்கால மருத்துவ உலகில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.