
சுமார் 50 வருடங்களுக்கு முன்பு ஒரு புத்தகத்தை அச்சிடுதல் என்பது மிகப் பெரிய சவாலாக இருந்தது. அக்காலத்தில் இத்தகைய பணிகள் லெட்டர் பிரஸ் (Letter Press) மூலமாக செய்யப்பட்டன. எழுத்தாளர் கையால் எழுதித் தரும் படைப்புகளை அச்சகங்களில் எழுத்துக் கோர்ப்பவர் ஒவ்வொரு எழுத்தாக எடுத்து ஒரு அச்சில் பக்கம் பக்கமாகக் கோர்ப்பார். வேகவேகமாகச் செய்வதால் பல பிழைகள் ஏற்படும். அதை ஒரு காகிதத்தில் நகலெடுத்து பிழைகளைச் சரிபார்க்கச் செய்து (Proof Reading) திருத்திப் பின்னர் அச்சிடுவர்.
பதினாறு பக்கங்கள் ஒரு ஃபாரம் (Form) என்று அழைக்கப்பட்டது. இதனால் புத்தகங்கள் 48, 64, 80, 96, 112, 128, 144, 160 பக்கங்களைக் கொண்டதாக இருந்தன. இதற்கான பெரிய காகிதத்தில் பக்கத்திற்கு எட்டு பக்கங்கள் வீதம் பதினாறு பக்கங்களை அச்சிட்டு அதை முறைப்படி மடித்து அடுக்கி புத்தகங்களைத் தைத்து பைண்டு செய்யப்பட்டன. புத்தகத்திற்கான மேல் அட்டை தனியே அச்சிடப்பட்டு லேமினேட் செய்து பொருத்தப்படும். இத்தகைய சிரமமான தொழில்நுட்பத்தின் காரணமாக முற்காலத்தில் குறைந்தபட்சம் 1200 புத்தகங்களை அச்சிட வேண்டிய கட்டாயம் இருந்தது. லெட்டர் பிரஸ்ஸைத் தொடர்ந்து தொண்ணூறுகளில் ஆஃப்செட் அச்சகங்கள் (Offset Press) நடைமுறைக்கு வந்தன. இந்த முறையில் எழுத்துக்கள் கணினியில் டைப் செய்யப்பட்டு அதிலேயே பிழைகளை சுலபமாக சரிபார்க்கும் வசதி ஏற்பட்டது. ஆஃப்செட் அச்சக முறை சிரமமான பணிகளைக் ஓரளவிற்கு குறைத்தது என்றே சொல்லலாம். மேலும் ஆஃப்செட் தொழில்நுட்பத்தின் காரணமாக புத்தகங்கள் வண்ணமயமாக அச்சிடப்பட்டன. ஆனாலும் இதிலும் அச்சு செலவினங்களைக் குறைக்க ஆயிரம் பிரதிகள் வரை ஒரே சமயத்தில் அச்சிட வேண்டிய சூழ்நிலை இருந்தது.
தற்காலத்தில் பதிப்பகங்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் வரப்பிரசாதமாக பிரிண்ட் ஆன் டிமாண்ட் ( POD ) தொழில்நுட்பம் அறிமுகமாகியுள்ளது. “தேவைக்கேற்ப அச்சிடும் முறை” என்பதே இதன் பொருளாகும். தற்போதைய நவீன கணினித் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி புத்தகங்களை அச்சிட அதை PDF கோப்பாக சுலபமாக உருவாக்க முடிகிறது. ஓவியம், அட்டை வடிவமைப்பு, டிடிபி பணிகள் என அனைத்திற்கும் 160 பக்கங்கள் கொண்ட ஒரு நூலை PDF ஆக உருவாக்க ஐயாயிரம் ரூபாய் வரை செலவாகிறது. இந்த PDF கணினிக் கோப்பினை அச்சகத்தில் கொடுத்து “பிரிண்ட் ஆன் டிமாண்ட்” முறையில் குறைந்த எண்ணிக்கை மற்றும் குறைந்த செலவில் சுலபமாக புத்தகமாக அச்சிட முடிகிறது.
நீங்கள் PDF கணினிக் கோப்புடன் இதற்கென உள்ள அச்சகங்களை அணுகினால் அவர்கள் புத்தகத்தின் மொத்த பக்கங்கள் மற்றும் நீங்கள் விரும்பும் காகித்தின்
தரம் முதலானவைகளைக் கணக்கிட்டு ஒரு புத்தகத்திற்கு ஆகும் தொகையைத் தெரிவிப்பார்கள். இதன் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள புத்தகத்தின் PDF கோப்பினைக் கொடுத்து குறைந்தபட்சம் 12 பிரதிகளை அச்சடித்துக் கொள்ளலாம். இதற்கு மேல் எத்தனை நூறு பிரதிகள் வேண்டுமானால் எப்போது வேண்டுமானாலும் அச்சிட்டுக் கொள்ளலாம்.
புத்தகங்களை ஆயிரக்கணக்கான பிரதிகள் அச்சடித்தால் அவற்றை அடுக்கி வைக்க அதிக இடம் தேவைப்படும். இதற்கான குடோன் வாடகை செலவும் அதிகமாகும். இயற்கைச் சீற்றங்களிலிருந்து புத்தகங்களை பாதுகாப்பது பெரும் சவாலாக அமையும். தேவைக்கேற்ப குறைந்த அளவில் புத்தகங்களை அச்சிடுவதால் புத்தகங்களைப் பாதுகாக்கும் சிரமமும் இல்லை. மொத்த புத்தகங்களும் எப்போது விற்பனையாகும் என்று சொல்ல முடியாது.
பழைய தொழில் நுட்பத்தில் அச்சகம் அமைக்க பெரிய இடவசதி தேவையாக இருந்தது. ஆனால் பிரிண்ட் ஆன் டிமாண்ட் தொழில் நுட்ப முறையில் அச்சடிக்கும் இயந்திரமானது அளவில் சிறியதாக இருப்பதால் பெரிய அளவில் இடவசதி தேவையில்லை. இதனால் அச்சக அலுவலக வாடகையும் கணிசமாக குறையும்.
பிரிண்ட் ஆன் டிமாண்ட் முறையில் அச்சடிப்பதால் முதலீடு குறைவு. இந்த முறையில் ஒரு புத்தகத்தை 50 பிரதிகள் அச்சிடுகிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுவோம். இந்த ஐம்பது பிரதிகள் விற்ற பின்னர் மீண்டும் ஐம்பது பிரதிகளை ஓரிரு நாட்களில் அச்சிட்டுக் கொள்ளலாம்.
குறைந்த முதலீட்டில் பதிப்பகங்களைத் தொடங்கும் வாய்ப்பையும் குறைந்த எண்ணிக்கையில், நிறைய தலைப்புகளில் புத்தகங்களை வெளியிடும் வாய்ப்பையும் இந்த தொழில்நுட்பம் ஏற்படுத்திக் கொடுக்கிறது. எழுத்தாளர்கள் தங்கள் படைப்புகளை தாங்களே சுலபமாக அச்சிட்டு விற்பனை செய்து கொள்ள முடிகிறது. வெளியிடும் புத்தகம் வெற்றிகரமாக விற்பனை ஆகவில்லை என்றால் குறைந்த அளவு செலவோடு அச்சிடாமல் நிறுத்திக் கொள்ளலாம்.
பழைய தொழில்நுட்ப முறையில் ஆயிரத்து இருநூறு புத்தகங்களை அச்சடித்தால் அதில் நாற்பது முதல் ஐம்பது புத்தகங்கள் வரை வீணாகும். ஆனால் பிரிண்ட் ஆன் டிமாண்ட் முறையில் இந்த இழப்பு இருக்காது.
எப்படிப் பார்த்தாலும் POD என அழைக்கப்படும் பிரிண்ட் ஆன் டிமாண்ட் தொழில்நுட்பமானது பதிப்பகத்தினருக்கும் எழுத்தாளர்களுக்கும் ஒரு வரப்பிரசாதம் என்று உறுதியாகச் சொல்லலாம்.