

சீன விஞ்ஞானிகளின் இந்த கண்டுபிடிப்பு 'பார்வை தொழில்நுட்பத்தில்' ஒரு புதிய கண்ணோட்டத்தை ஏற்படுத்தி உள்ளது. இனி இருட்டு என்பதெல்லாம் ஒரு பிரச்னையாக இருக்கப் போவதில்லை. இருட்டிலும், ஏன் கண்களை மூடிய நிலையிலும் கூட இனி நம்மால் பார்க்க முடியும் என்ற அதிசயத்தை நிகழ்த்தி உள்ளது.
இனி யாராவது கண்களை மூடிக்கொண்டே என்னால் பார்க்க முடியும் என்று சொன்னால் ஏதாவது மாய சக்தியாக இருக்குமோ என்று பயப்பட வேண்டாம். இனி முழு இருட்டிலும் கண்களை மூடிய நிலையிலும் கூட நம்மால் பார்க்க முடியும். அப்படிப்பட்ட இன்ஃப்ரா ரெட் காண்டாக்ட் லென்ஸை (Infrared Contact Lenses) சீன அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளார்கள்.
ராணுவத்தினர் பயன்படுத்தும் 'நைட் விஷன்' கண்ணாடிகளுக்கு பேட்டரி, சார்ஜர் எல்லாம் தேவை. ஆனால் சீன அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ள இந்த மேஜிக் லென்ஸ்களுக்கு பேட்டரி அல்லது மின்சாரம் எதுவும் தேவைப்படுவதில்லை.
இதை அணிந்தாலே போதும் இருட்டிலும் காட்சிகள் தெள்ளத் தெளிவாகத் தெரியும்.
நாம் அணியக்கூடிய சாதாரண காண்டாக்ட் லென்ஸ்களில் பயன்படுத்தப்படும் பாலிமர்களுடன் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட நானோ துகள்களை (Nano particles) இணைத்து இந்த லென்ஸை உருவாக்கியுள்ளார்கள். இந்த நானோ துகள்கள் கண்ணுக்குத் தெரியாத அகச்சிவப்பு ஒளியை (Infrared Light) உறிஞ்சி, அதனை மனித கண்களுக்கு தெரியும் ஒளியாக மாற்றிக் கொடுக்கிறது. இதற்கு எந்த வெளிப்புற மின்சக்தியும் தேவையில்லை. இதை அணிந்தால் இருட்டிலும் காட்சிகள் மிகத் தெளிவாகத் தெரியும்.
கண்ணை மூடிக்கொண்டு இருந்தாலும் எதிரே நடக்கும் அசைவுகளையோ, மினுமினுக்கும் இன்ஃப்ரா ரெட் ஒளியையோ நம்மால் உணர முடியும். இந்த கண்டுபிடிப்பின் சுவாரசியமான விஷயமே இதுதான். சாதாரண ஒளியை விட இன்ஃப்ரா ரெட் ஒளிக்கு கண் இமைகளை ஊடுருவிச் செல்லும் திறன் அதிகம் உண்டு. எனவே இந்த லென்ஸை அணியும் பொழுது கண்ணை மூடிக்கொண்டு இருந்தாலும் எதிரே நடக்கும் அசைவுகளை நம்மால் உணர முடியும்.
டாக்டர் தியான் சூ (Dr. Tian Due) தலைமையிலான குழு முதலில் எலிகளிடம் சோதனை நடத்தியது. இதில் சாதாரண எலிகளை விட லென்ஸ் அணிந்த எலிகளால் இருட்டில் தெளிவாக பார்க்க முடிந்தது. பின்பு மனிதர்களிடமும் நடத்தப்பட்ட சோதனையில் கண்களை மூடிய நிலையில் கூட ஒளியை உணரும் திறன் அதிகரித்திருப்பது உறுதி செய்யப்பட்டது.
இது எதிர்காலத்தில் 'பார்வை தொழில்நுட்பத்தில்' மிகப்பெரிய வளர்ச்சியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.