விண்வெளி வீரங்கனை கிறிஸ்டினா குக்: நிலவை நோக்கிய வரலாற்றுச் சாதனைப் பயணம்!

விண்வெளியில் அதிக நாட்கள் தங்கி வரலாற்றுச் சாதனை படைத்த கிறிஸ்டினா குக்கின் வியக்க வைக்கும் வாழ்க்கைப் பயணம்.
கிறிஸ்டினா குக் - Christina Koch
கிறிஸ்டினா குக் - Christina Koch
ச. நாகராஜன்

மங்கையர் மலர், தினமணி, தினமணி சுடர், ஆனந்தவிகடன், குமுதம் பக்தி ஸ்பெஷல், மாலைமலர், தினபூமி, Hindu உள்ளிட்ட 46 இதழ்களில் 6000க்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியவர். இதுவரை வெளியான புத்தகங்கள்; Pustaka - 139 புத்தகங்கள் (Paper back, Digital Printed books) Nilacharal - 61 புத்தகங்கள் (Digital books) (FROM LONDON) சென்னை விநாயகா பதிப்பகம், மணிவாசகர் பதிப்பகம் உள்ளிட்ட பதிப்பகங்களின் வெளியீடு 19 புத்தகங்கள் மொத்தம் 219 புத்தகங்கள்.

Updated on: 

இதுவரை விண்வெளியில் சுமார் 780 பேர்கள் பறந்துள்ளனர். இவர்களில் 105 பேர்கள் பெண்கள். இந்தப் பெண்மணிகளுள் 337 நாட்கள் 15 மணி 30 நிமிடங்கள் விண்வெளியில் இருந்து அதிக காலம் விண்வெளியில் இருந்த பெண்மணி என்ற சாதனையைச் செய்துள்ளவர் கிறிஸ்டினா குக் (Christina Koch). அமெரிக்காவில் மிச்சிகனில் 1979ம் ஆண்டு ஜனவரி 29ம் தேதி பிறந்த இவரை ‘மிச்சிகன் டு மூன்’ (MICHIGAN TO MOON) மிச்சிகனிலிருந்து சந்திரனுக்குப் பறந்தவர் என்று செல்லமாக அழைக்கின்றனர்.

இளம் வயதிலேயே இவருக்கு அறிவியல் சாதனைகளில் ஒரு ஈர்ப்பும் ஆர்வமும் இருந்தது. இளம் பருவ மாணவியாக இருந்தபோதே இவர் அறையில் அண்டார்டிகா படங்களும் நேஷன்ல் ஜியோகிராபிக் மாகஸைனில் வந்த படங்களும் ஒட்டப்பட்டிருக்கும். இவரது அம்மா ஒரு மருத்துவ டெக்னீஷியன். அப்பாவோ ஒரு டாக்டர்.

பின்னால் எலக்ட்ரிகல் எஞ்ஜினியர் ஆன இவர் நாஸாவால் 2013 ஜூன் மாதம் விண்வெளிக்குப் பறக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கான பயிற்சியை 2015 ஜூலையில் முடித்தார். இந்தப் பயிற்சியில் விண்வெளி நடைப்பயணம் உள்ளிட்ட பல சிக்கலான பயிற்சிகள் இருந்தன.

2019ம் ஆண்டு மார்ச் மாதம் 14ம் தேதியன்று விண்ணில் உள்ள பன்னாட்டு விண்வெளி நிலையம் நோக்கி இவர் பயணமானார். அக்டோபர் 18ம் தேதி முதன் முதலாக விண்ணில் நடந்த பெண்மணி என்ற சாதனையை நிகழ்த்தினார். 2020ம் ஆண்டு பிப்ரவரி ஆறாம் தேதி பூமிக்குத் திரும்பிய இவர் விண்வெளியில் 328 நாள் தங்கி இருந்து அதிக நாட்கள் விண்வெளியில் இருந்தவர் என்ற புகழைப் பெற்றார்.

பின்னர் 2023ம் ஆண்டு ஏப்ரல் மூன்றாம் தேதி ஆர்டெமிஸ் IIல் பயணப்பட அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட செய்தி அறிவிக்கப்பட்டது. 2026, ஏப்ரல் மாதம் முதல் தேதி ஆர்டெமிஸ் II விண்ணில் ஏவப்பட்டது.

இதில் முக்கிய செய்தி என்னவெனில் இது சந்திரனைச் சுற்றிப் பறந்தது.

கிறிஸ்டினா குக் - Christina Koch
கிறிஸ்டினா குக் - Christina Koch

ஆக, முதன்முதலாக பூமியின் கீழ் சுற்றுப்பாதைக்கும் (Low earth Orbit) மேலாகச் சென்ற பெண்மணி என்ற பெயரைப் பெற்றார். 6400 மைல்கள் பயணப்பட்டு சந்திரனின் மறுபுறம் இருந்த பக்கத்தையும் தாண்டிப் பறந்து 2026 ஏப்ரல் பத்தாம் தேதி பூமிக்குத் திரும்பினார்.

இந்த ஆர்டெமிஸ் பயணம் பலவகையில் முக்கியத்துவம் பெற்றதாகிவிட்டது. முதன்முதலாக அதிக காலம் ஒரு பெண்மணி பறந்த விண்வெளிப் பயணம் என்பதோடு 1970ல் பறந்த அபல்லோ 13ன் சாதனையை முறியடித்து 2,52,756 மைல்கள் பூமியிலிருந்து இது பயணப்பட்டிருக்கிறது.

இதையும் படியுங்கள்:
நம்பி ஏமாந்த கஸ்டமர்ஸ்... பாதுகாப்புனு வாய் கிழிஞ்ச கம்பெனியோட மொத்த சீக்ரெட்டும் சந்தி சிரிக்குது!
கிறிஸ்டினா குக் - Christina Koch

சந்திரனைச் சுற்றி பூமிக்கு வந்தபோது இதன் மொத்தப் பயண தூரம் 6,94,481 மைல்களாகும். எதிர்காலப் பயணங்களுக்கான பல சோதனைகளையும் இந்தப் பயணம் முடித்துள்ளது. சந்திரனின் பரப்பைத் துல்லியமாகக் காட்டும் 7000 போட்டோக்களை இது பிடித்துள்ளது. பூமியில் சாண்டியாகோவில் இது இறங்கிய போது 2800 சென்டிகிரேட் என்ற அதிகபட்ச உஷ்ணநிலையைத் தாக்குப் பிடித்திருக்கிறது.

அவரது முக்கியமான சில பொன்மொழிகள் இவை:

விடாமுயற்சியே வாழ்க்கையில் எந்தத் தடையையும் மீறி வருவதற்கான முக்கிய வழியாகும்.

உங்கள் கனவுகளை நிறைவேற்ற நீங்கள் போராடுவது மிகச் சிறந்தது. ஒருபோதும் இதயம் நினைத்ததை நிறைவேற்றுவதை நிறுத்திவிடாதீர்கள்.

சில சமயம் வாழ்க்கையில் சரியான திசையை நோக்கி நாம் எடுத்து வைக்கும் ஒரு சின்ன அடியே வாழ்க்கையின் மிகப் பெரிய வெற்றிகரமான அடியாக அமையும்.

உங்கள் வழி சற்று நீண்ட வழியாக இருந்தாலும் கூட, உங்கள் ஆசை நிறைவேற்றப்பட வேண்டும் என்பதையே பின்பற்றுங்கள்.

கிறிஸ்டினா ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார். 2026 ஆகஸ்ட் மாதம் 28ம் தேதியன்று அவர் ‘காங்கிரஷனல் ஸ்பேஸ் மெடல் ஆஃப் ஹானர்’ என்ற மிக உயரிய விருதை தன் ஆர்டிமெஸ் பயண சகாக்களுடன் பெற்றார்.

பிரபல பத்திரிகையான டைம், 2020ம் ஆண்டில் உலகின் செல்வாக்கான நூறு நபர்களின் பட்டியலில் அவரையும் சேர்த்திருந்தது.

பெண்களுக்கு தன்னம்பிக்கையையும், உயரிய சாதனைகளில் உத்வேகம் ஊட்டுவதையும் வாழ்நாள் குறிக்கோளாகக் கொண்டுள்ள அவர் பல நிகழ்ச்சிகளில் இப்போது பங்கு பெற்று வருகிறார்.

அவருக்கு வருகின்ற மெயில்களைப் படிப்பதற்கான நேரம் கூட அவருக்கு இல்லையாம்.

சந்திரப் பெண்மணியை வாழ்த்துவோம்.

இந்த ஆழமான கட்டுரையைப் படிப்பதன் மூலம், தடைகளைத்தாண்டி விண்வெளித்துறையில் சிகரம் தொட்ட ஒரு பெண்ணின் கதையிலிருந்து இணையற்ற தன்னம்பிக்கையையும், உத்வேகத்தையும் பெற்று, உங்கள் சொந்தக் கனவுகளை அடைவதற்கான புதிய மனஉறுதியை அடைவீர்கள்.

இதையும் படியுங்கள்:
ஏலியன் பூமிக்கு வந்தால் பரோட்டா சாப்பிடாது... சயின்ஸ் சொல்வது இதுதான்!
கிறிஸ்டினா குக் - Christina Koch
logo
Kalki Online
kalkionline.com