

பிரபல அறிவியல் இதழான லைவ் ஸயின்ஸ் பத்திரிகைக்கு பல வானவியல் ஆய்வு நிபுணர்களும் தங்கள் கருத்தை மின்னஞ்சல் வாயிலாகத் தெரிவித்துள்ளனர். சுவையான கருத்துக்களில் சிலவற்றை இங்கே பார்ப்போம்.
சூரியனுக்கு அருகில் உள்ள கிரகம் புதன் என்பதை நாம் நன்கு அறிவோம். புதன் சுமார் 290 லட்சம் மைல்களில் சூரியனுக்கு அருகில் இருப்பதே அதன் அண்மை நிலை ஆகும்.
ஆனால் புதனைவிட சூரியனுக்கு அருகில் சென்ற ஆஸ்ட்ராய்ட் எனப்படும் சிறுகோள்கள் காமட் எனப்படும் வால்மீன்கள், விண்கலங்கள் எவை?
சூரியனுக்கு அண்மையில் இருக்கும் நிலை பெரிஹெலியன் (Perihelion) என அழைக்கப்படுகிறது. வாஷிங்டனில் உள்ள கார்னீகி ஸயின்ஸ் நிறுவனத்தில் வானியல் ஆய்வு நடத்தும் ஸ்காட் ஷெப்பர்ட் என்பவர், புதனையும் கடந்து செல்லும் சிறுகோள்கள் உண்டு என்கிறார். இதில் 2024 YL3 என்ற சிறுகோளே இப்போது சாதனை படைத்துள்ளது. 463 அடி நீளமுள்ள இந்தப் பாறையானது 64 லட்சம் மைல் தூரத்தில் சூரியனிலிருந்து இருக்கிறது. இன்னும் சில பொருள்களையும் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இவற்றின் பெயர் வல்கனாய்ட் (Vulcanoids) என்று அழைக்கப்படுகிறது. வல்கன் (Vulcan) என்ற கொள்கை ரீதியிலான கிரகம் ஒன்று இந்தப் பகுதியில் இருப்பதாக அனுமானிக்கப்பட்ட நிலையில் இதற்கு வல்கன் என்று பெயரிடப்பட்டது. அதிலிருந்து தோன்றிய வார்த்தைதான் வல்கனாய்ட். கனடாவில் உள்ள ரெஜினா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர் மார்டின் பீச் என்பவர் 55.8 லட்சம் மைல்களிலிருந்து 232 லட்சம் மைல்கள் வரை சூரியனின் மையப்புள்ளியிலிருந்து பல வல்கனாய்ட்ஸ் உள்ளதாகக் குறிப்பிடுகிறார். ஆனால் இவை இருக்கிறதா என்ற கேள்விக்கு பதிலே இல்லை. 2013ல் நடத்தப்பட்ட ஆய்வின்படி இவைகள் இப்போது இல்லை.
ஆனால் சில விண்கலங்கள் சூரியனுக்கு மிக அருகில் சென்றுள்ளன. எடுத்துக்காட்டாகச் சொல்வதென்றால் நாஸா அனுப்பிய பார்கர் ஸோலார் ப்ரோப் என்ற கலம் 2018ம் ஆண்டு சூரிய மண்டலத்தின் புறச் சூழ்நிலையை ஆராய்வதற்காக அனுப்பப்பட்டது. 45 லட்சம் மைல் தூரத்தில் இது சூரியனிடமிருந்து இருந்தது.
கொரானா என்று சொல்லப்படும் பகுதியில் சுற்றிய இதை ஒரு கார்பன் உறை அதிக உஷ்ணத்தைத் தாக்குப் பிடிக்குமாறு செய்தது.
சன் க்ரேஸிங் (SunGrazers or Sun Divers) எனப்படும் இந்த ‘சூரியன்படு வால்விண்மீன்கள்’ சூரியனின் மையப்புள்ளியிலிருந்து 14. 9 லட்சம் மைல்களில் சுற்றின.
ஷாங்காய் அஸ்ட்ரானமிகல் ஆப்ஸர்வேடரியைச் சேர்ந்த ஆய்வாளரான மேன் தோ ஹுயி (Man To Hui) சன் க்ரேஸர்களில் பல மிகமிகச் சிறியவை என்கிறார். 30 அடி அகலமே உள்ள இவை சூரியனின் வலிமை வாய்ந்த ஈர்ப்பு விசையால் உள்ளே இழுக்கப்படுகின்றனவாம். சில பெரிய சன் க்ரேஸர்கள் இந்த ஈர்ப்பு விசையிலிருந்து தப்பித்து ஓடுகின்றனவாம். இவற்றில் ஒன்றின் பெயர் க்ரேட் சதர்ன் காமட் ஆஃப் 1887 (Great Southern Comet of 1887).
இது சூரியனிலிருந்து 4,46,187 மைல் தூரத்தில் இருந்தது. இதில் முக்கியமாகச் சொல்லப்படும் (வெற்றியடைந்த) குறுங்கோள் ஒன்று 4,32,244 மைல் தூரத்தில் இருந்தது. ஆனால் சூரியனின் எல்லயற்ற உஷ்ணத்தால் இது அழிக்கப்பட்டது.
சூரியனைச் சுற்றி உள்ள புற மண்டலத்தை ஆராய வெவ்வேறு சோதனைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
சூரியனை நெருங்கும்போது என்னவெல்லாம் அபாயங்கள் ஏற்படலாம், சூரியனுக்கு அருகில் உள்ள மிக விசித்திரமான பொருள்கள் எவை, சூரியனின் வாயுமண்டலத்தில் உள்ள வாயுக்கள் எவை, அவற்றின் இரசாயனக் கலவை எப்படி உள்ளது, சூரிய மண்டலத்தின் மர்மங்கள் என்னென்ன போன்றவற்றைக் கண்டு பிடிப்பதற்காகவே தொடர்ந்து இவை நடைபெற்று வருகின்றன.
சூரியன் தோன்றி 460 கோடி ஆண்டுகள் ஆகி விட்டன. இன்னும் 500 கோடி ஆண்டுகள் அது நமக்கு ஒளியைத் தரும். ஆனால் அதற்குள் பூமியே இருக்காது!
என்றாலும் நீடித்த ஆயுள் கொண்ட சூரியனை ஆராயும் முயற்சி நிற்கவே நிற்காது!