மக்கள் தொகை அடிப்படையில் 145 கோடியைத் தாண்டி உலகிலேயே முதலிடம் பிடித்த இந்தியாதான் இரண்டு சக்கர வாகனங்கள் (Two wheeler) அடிப்படையிலும் முதலிடம் வகிக்கிறது. கிட்டத்தட்ட 35 கோடி இரண்டு சக்கர வாகனங்கள் இந்திய சாலைகளில் ஓடிக்கொண்டிருக்கின்றன. இந்தியாவில் கார் வைத்திருப்பவர்களைவிட, பைக், ஸ்கூட்டர் வைத்திருப்பவர்கள் ஐந்து மடங்கு அதிகம்.
நடுத்தர மக்களின் தினசரி பயணத்திற்கான பொதுவான விருப்பமாக மோட்டார் சைக்கிள்கள் (Bikes) மாறி வந்தாலும், இங்கு பைக் வைத்திருக்கும் பலரும் அவற்றை சரியாக பயன்படுத்தும் விதம் குறித்து அறியாமல் உள்ளனர். இதனால் வருடம்தோறும் அதிக அளவு விபத்து ஏற்பட்டு பலர் உயிரிழக்கிறார்கள். அதுவும் கிளட்ச் - பிரேக் விஷயத்தில் மிக அதிகக் குழப்பம் பலருக்கும் உண்டு.
கிளட்ச் - பிரேக் - கியர் பயன்பாடு: பைக்கை ஓரளவுக்கு ஓட்டத் தெரிந்தாலும்கூட, பலருக்கும் கிளட்ச், பிரேக் மற்றும் கியர் ஆகியவற்றை எவ்வாறு சரியாகப் பயன்படுத்துவது என்பது தெரிவதில்லை. சாலை விபத்துகளில் அவர்கள் அடிக்கடி சிக்கிக்கொள்ள இதுதான் முதன்மையான காரணம்!
திடீரென பிரேக் செய்யும் சூழ்நிலை ஏற்பட்டால், கிளட்ச் மற்றும் பிரேக் இரண்டையும் ஒரே நேரத்தில் அழுத்தலாம். பொதுவாக அவசர காலங்களில் கிளட்ச் மற்றும் பிரேக்கை ஒரே நேரத்தில் இயக்குவதே பைக்கின் இயந்திர பாகங்களை சேதப்படுத்தாமல் பிரேக்குகளைப் பயன்படுத்துவதற்கான மிகச் சிறந்த வழியாகும்.
நீங்கள் மிதமான வேகத்தில் பைக்கை ஓட்டும்போது வண்டியை நிறுத்த வேண்டியிருந்தால் பிரேக்கை மட்டும் அழுத்தினால் போதும். அதற்கு கிளட்ச் பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை.
ஒருவேளை பைக் அதிக வேகத்தில் சென்றாலும் முதலில் பிரேக்கை அழுத்துவது நல்லது. பைக்கின் வேகம் மிகக் குறைந்த அளவை அடைந்துவிட்டதாக நீங்கள் உணர்ந்தால் கிளட்சை அழுத்தி சிறிய கியருக்கு மாற்ற வேண்டும்.
நீங்கள் குறைந்த வேகத்தில் பயணிக்கையில் குறிப்பாக, முதல் அல்லது இரண்டாவது கியரில் ஓட்டும்போது, பிரேக் போட வேண்டும் என்றால் முதலில் கிளட்சை அழுத்தி பிரேக்கை அழுத்தவும். அதேசமயம் அதிக வேகத்தில் செல்லும்போது உடனே பைக்கை நிறுத்த விரும்பினால் முதலில் பிரேக்கை மட்டும் அழுத்துவதே சிறந்தது. முதலில் கிளட்சை அழுத்தி, பின்னர் பிரேக்கை அழுத்தினால், பைக் சாலையில் நழுவி விழும் அபாயம் உள்ளது.
எனவே, உங்கள் வாகனத்தை முறையாக இயக்கும் வழிமுறைகளைத் தெள்ளத் தெளிவாக அறிந்துகொள்வதும், சாலை விதிகளை மதிப்பது மட்டுமே உங்களை விபத்திலிருந்து காக்கும் முதல் கவசம் ஆகும்.