உங்களுக்கு செல்ஃபி புகைப்படங்கள் எடுப்பது மிகவும் பிடிக்குமா? எங்கு சென்றாலும் உங்கள் கைகளை முகத்திற்கு நேராக வைத்து புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிடுகிறீர்களா? போச்சு! இந்நேரம் உங்களது கைரேகையை சைபர் குற்றவாளிகள் திருடியிருப்பார்கள்.
தற்போது செல்பி புகைப்படங்கள் எடுப்பது மிகவும் பிரபலமாகிவிட்டது. நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் அதை பகிர்ந்து கொள்ளவும், சமூக ஊடகங்களில் பதிவிடவும், நினைவுகளாக சேமிக்கவும் இது பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் நம்மையும் அறியாமல் நமது செல்பி புகைப்படங்களில் மறைந்திருக்கும் ஒரு ஆபத்து உள்ளது. அதுதான் கைரேகை திருட்டு.
கைரேகை திருட்டு என்றால் என்ன?
கைரேகை திருட்டு என்பது ஒரு நபரின் கைரேகையை அவரது அனுமதியின்றி டிஜிட்டல் முறையில் பெறுவதாகும். இன்றைய தொழில்நுட்ப காலத்தில் அவை பல வழிகளில் செய்யப்படலாம். அதாவது நீங்கள் சோசியல் மீடியாவில் உங்களது கையை காட்டி செல்பி புகைப்படங்களை பதிவிடும்போது, அதில் சில புகைப்படங்களில் உங்களது கைரேகைகள் தெளிவாகத் தெரியும். அந்த புகைப்படத்திலிருந்து உங்களது கைரேகையை மட்டும் தனியாக பிரித்தெடுத்து பல்வேறு வகையான குற்ற சம்பவங்களில் ஈடுபடலாம்.
உங்கள் கைரேகை திருடப்பட்டால் என்ன ஆகும் தெரியுமா?
இன்றைய காலத்தில் நமது கைரேகைதான் பல இடங்களில் பயோமெட்ரிக் பாதுகாப்பாக பயன்படுத்தப்படுகிறது. வங்கி கணக்குகள், கிரெடிட் கார்டுகள் மற்றும் பிற நிதிக் கணக்குகளை அணுக சைபர் குற்றவாளிகள் உங்களது கைரேகையை பயன்படுத்தும் வாய்ப்புள்ளது. மேலும்ஒ, உங்கள் பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம் மற்றும் பிற அடையாள ஆவணங்களைத் திருடவும் சைபர் குற்றவாளிகள் உங்கள் கைரேகையை பயன்படுத்தலாம். உங்களது கைரேகையை பொய்யாகப் பயன்படுத்தி சைபர் குற்றவாளிகள் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு அதில் உங்களை சிக்க வைக்கும் வாய்ப்புள்ளது.
கைரேகை திருட்டுலிருந்து எப்படி பாதுகாத்துக் கொள்வது:
இனி சமூக வலைதளங்களில் புகைப்படங்களை பதிவிடும்போது எச்சரிக்கையாக இருக்கவும். உங்களது கைரேகை துல்லியமாகத் தெரியும்படியான புகைப்படங்கள் பதிவிடுவதைத் தவிர்க்கவும்.
உங்கள் கைபேசியில் உள்ள வலுவான பாதுகாப்பு அம்சங்களை பயன்படுத்துங்கள். பாஸ்வேர்டு, பின் நம்பர் மற்றும் ஃபேஸ் லாக் போன்ற பாதுகாப்பு அம்சங்கள் அனைத்தையும் பயன்படுத்தி உங்கள் சாதனத்தை பாதுகாப்பது மிகவும் முக்கியம்.
ஒவ்வொரு முறையும் உங்கள் கைபேசியில் சமீபத்திய சாப்ட்வேர் அப்டேட் வரும்போது, உடனடியாக அதை செய்து விடவும். ஏனெனில் ஒவ்வொரு அப்டேட்டிலும் செக்யூரிட்டி அம்சம் வலுப்படுத்தப்படும் என்பதால், சைபர் குற்றங்களைத் தவிர்க்க இதை செய்ய வேண்டியது அவசியம்.
இந்த வழிமுறைகளைப் பின்பற்றி, உங்களது கைரேகை திருடப்படுவதில் இருந்து நீங்கள் பாதுகாப்புடன் இருக்க முடியும். இனி ஒவ்வொரு முறை செல்ஃபி புகைப்படம் எடுக்கும்போதும் இந்த பதிவு உங்கள் ஞாபகத்திற்கு வர வேண்டும்.