
அவசரத் தேவைகளுக்காகக் கடன் வாங்குவது என்பது பலரின் வாழ்வில் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. ஒரு காலத்தில் கந்துவட்டி கொடுமைகள் பெரும் அச்சுறுத்தலாக இருந்தன. இன்று, அரசாங்கத்தின் முயற்சிகளால் அவை ஓரளவுக்குக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், 'கடன் செயலி' என்ற பெயரில் புதிய வடிவிலான ஒரு பெரும் ஆபத்து நம்மைச் சூழ்ந்துள்ளது. இந்த செயலிகள் மூலம் கடன் வாங்குவோர், மிரட்டல்கள், மன உளைச்சல், மற்றும் தனிப்பட்ட தகவல்கள் கசியும் அபாயம் போன்ற பல கொடுமைகளுக்கு ஆளாகின்றனர். பலர் இந்த உளவியல் தாக்குதல்களைத் தாங்க முடியாமல், சத்தமில்லாமல் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்ட சோகங்களும் ஏராளம். இத்தகைய ஆபத்தான சூழலில் சிக்கித் தவிக்காமல் இருக்க, இந்த கடன் செயலிகள் பற்றி நாம் முழுமையாக அறிந்து கொள்வது அவசியம்.
உடனடிப் பணத் தேவை ஏற்படும்போது, 'முன்பின் தெரியாத ஒரு செயலி எப்படி நமக்குக் கடன் கொடுக்கும்?' என்ற கேள்வி பலருக்கும் தோன்றுவதில்லை. மிக அதிக வட்டி என்றாலும், 'யாரோ தருகிறார்கள், திருப்பிச் செலுத்தவில்லை என்றால் என்ன செய்துவிட முடியும்?' என்ற எண்ணத்தில் பலர் இந்த வலையில் விழுகின்றனர். ஆனால், இது ஒரு பெரும் மாயை. வாங்கிய தொகையை விடப் பல மடங்கு வட்டி கட்டினாலும், மேலும் கடன் இருப்பதாக மிரட்டல் அழைப்புகள் வந்துகொண்டே இருக்கும்.
இந்த செயலிகள் உங்கள் தனிப்பட்ட தகவல்களை எவ்வாறு பெறுகின்றன என்று நீங்கள் சிந்தித்ததுண்டா? ஒரு கடன் செயலியைப் பதிவிறக்கம் செய்யும்போது, உங்கள் மொபைல் எண், அடையாள அட்டை, புகைப்படம், கேமரா, கேலரி, தொடர்பு எண்கள், ரெக்கார்டர், இருப்பிடம், வங்கிக் கணக்கு விவரங்கள் என அனைத்தையும் அணுகவும், பயன்படுத்தவும் நீங்கள் தான் அனுமதி வழங்குகிறீர்கள்.
இந்த அனுமதிகளைப் பயன்படுத்தியே, உங்கள் மொபைலில் உள்ள தகவல்கள் அனைத்தும் அவர்களுக்குத் தெரிய வருகின்றன. நீங்கள் கடனை முழுமையாகச் செலுத்தி, செயலியை நீக்கினாலும், உங்கள் தகவல்கள் அவர்களால் சேமித்து வைக்கப்படும். உங்கள் புகைப்படங்கள், பெயர், நண்பர்கள் மற்றும் உறவினர்களின் எண்கள் போதும்; இதை வைத்து அவர்கள் உங்கள் நண்பர்களுக்கு என்ன வேண்டுமானாலும் அனுப்ப முடியும். இதுவே அவர்களின் மூலதனம்.
'குறைந்த வட்டியில் உடனடிக் கடன் வேண்டுமா?' என்று விளம்பர நிறுவனங்கள் மூலம் குறுஞ்செய்திகள் அனுப்பி, பணத் தேவை உள்ளவர்களை இந்த செயலிகள் தங்கள் வலையில் விழவைக்கின்றன. பணத் தேவை எப்போதும் இருக்கும் என்பதால், மொபைல் செயலிகள் மூலம் கடன் வாங்குவதைத் தவிர்ப்பதே சிறந்த வழி. அப்படியே பணத் தேவை இருந்தால், இந்திய ரிசர்வ் வங்கியால் அங்கீகரிக்கப்பட்ட 'வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள்' (Non-Banking Financial Company - NBFC) சான்றிதழ் பெற்ற மொபைல் செயலிகள் மூலம் மட்டுமே கடன் வாங்கலாம்.
இந்த நிறுவனங்கள் இந்திய அரசு நிர்ணயித்த வட்டி சதவீதத்தை மட்டுமே வசூலிப்பார்கள். ஒருவேளை, நீங்கள் கடன் வாங்கி, அதைத் திரும்பக் கேட்கும்போது ஆபாசமாகப் பேசினாலோ, புகைப்படங்களை மற்றவர்களுக்கு அனுப்பினாலோ, உடனடியாகக் காவல்துறையில் புகார் அளியுங்கள். நாம் கடன் தான் வாங்கினோம், நம் தன்மானத்தை அடகு வைக்கவில்லை என்பதை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்.
கடன் செயலிகளின் வலையில் விழாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
முடிந்தவரை கடன் செயலிகளில் கடன் வாங்குவதைத் தவிர்க்கவும்.
அவசியம் எனில், நீங்கள் பதிவிறக்கம் செய்யும் செயலி ரிசர்வ் வங்கி அங்கீகாரம் பெற்றதா, NBFC சான்றிதழ் உள்ளதா என சரிபார்க்கவும்.
உங்கள் கேமரா, புகைப்பட சேமிப்பகம், தொடர்பு எண்கள், ஆவணங்கள், இருப்பிடம், ரெக்கார்டர் போன்ற தேவையற்ற தரவுகளுக்கு அந்த செயலி அனுமதி கேட்கக் கூடாது; நீங்களும் அனுமதி கொடுக்கக் கூடாது.
இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றி, கடன் செயலிகளின் ஆபத்துகளில் இருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.