

சிறு குழந்தைகளில் சிலர் வெடி வெடிக்கும் சத்தத்தை கேட்டு பயப்படுவர். வெடி சத்தம் வந்தாலே அம்மாவிடம் வந்து மறைந்துகொள்ளும் குழந்தைகளை பார்க்க முடியும். அதன் காரணம் பயத்தை போக்கிக் கொள்வதற்காகத்தான். அதை ஒரு தற்காப்பு உணர்வாக குழந்தைகள் எண்ணுகின்றனர்.
அப்படி அவர்கள் பயப்படுவதன் காரணம் வெடிக்கும் பட்டாசுகளின் (டெசிபல்) அதிர்வலைகள் அதிகமாக இருப்பதால் அவர்களின் செவித்திறனை அது பாதிக்கிறது என்பதுதான். சிலருக்கு இரைச்சலாக பேசினாலே பிடிக்காது மற்றும் சிலருக்கு இரைச்சலாக பேசினால் தான் காதிலேயே விழும். இரைச்சல் 130 டெசிபலை எட்டினால் நமது காதுகள் தாங்காது. பொத்திக் கொள்வோம். அப்படி இரைச்சலால் ஏற்படும் பிரச்சனைகள் என்ன என்பதை இப்பதிவில் காண்போம்.
டெசிபல் என்பது சப்தத்தின் வீரியத்தை அளக்க பயன்படும் ஒரு அளவு முறை. சப்த அலைகளின் பலத்தை குறிப்பதும் டெசிபலே. காற்றில் இருக்கும் மில்லியன் கணக்கான மாலிக்யூல்கள் ஒன்றோடு ஒன்று உரசி மோதிக்கொள்ளுவதால் சப்தம் எழுகிறது.
டெலிபோனை கண்டுபிடித்த அலெக்சாண்டர் கிரகாம்பெல் அவர்களை பெருமைப்படுத்துவதற்காக விஞ்ஞானிகள் உருவாக்கிய பெயர் தான் டெசிபல் என்பது. சப்த அலைகளில் அவர் கொண்ட ஆர்வம் தான் டெலிபோனை கண்டுபிடிக்கக் காரணமாக இருந்தது.
நம் அன்றாட வாழ்வில் நிகழும் சிலவற்றின் டெசிபல்கள் எவ்வளவு என்றால் மரத்தின் இலைகள் காற்றில் லேசாக அலைந்து ஒருவித சப்தத்தை உண்டாக்குகின்றன. அதன் அளவு பத்து டெசிபல்கள். மிக அமைதியாக இருப்பது ஜீரோ டெசிபல். சாதாரண உரையாடலின் ஒலி 60 டெசிபல். நீண்ட நேரம் 85 டெசிபல் ஒலியை கேட்பது காது கேளாமைக்கு வழிவகுக்கும் என்று கூறுகின்றனர்.
130 டெசிபல் என்பது வலியின் வரம்பை எட்டும் ஒலி. 140 டெசிபல் என்பது உரத்த ஒலி அது செவித்திறனை சேதப்படுத்தும் என்று கூறப்படுகிறது. சில அடிகளுக்கு அப்பாலில் இருந்து ஒருவர் ரகசியக் குரலில் பேசினால் அது 20 டெசிபல் என்று கணக்கிட்டுள்ளனர்.
டெலிவிஷனை போட்டுவிட்டு ஒரு வீட்டின் சப்த அலைகளை கணக்கிட்டால் 50 டெசிபல். ஒரு கார் தொழிற்சாலையின் சந்தடி 95 டெசிபல். வாகனங்களின் ஹாரன் ஒலி 100 டெசிபல். ஒரு நிமிடத்திற்கு 16 ஆயிரம் தடவை சுழலும் ஏரோபிளேனின் புரொபெல்லர்கள் ஏற்படுத்துவது 120 டெசிபல்கள் என்று கணக்கிட்டுள்ளனர்.
இதனால் தான் இரைச்சலான இடத்தை சிலர் ஒதுக்குவதும், காது கேளாதவர்கள் இரைச்சலாக பேசி கேட்பதும் நடைபெறுகிறது.