டீப் பேக் மற்றும் சமூக ஊடகங்களால் ஏற்படும் பிரச்சினைகளை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகளை கொண்ட சட்டத்தை உருவாக்க அரசு முடிவு செய்திருக்கிறது.
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் வளர்ச்சிக்கான திட்டம் என்பதை தாண்டி, பல்வேறு வகையான சிக்கல்களையும் உருவாக்கி இருக்கிறது. அதிலும் குறிப்பாக முன்னணி நடிகர், நடிகைகள், பிரபலங்களை குறி வைத்து வரும் டீப் பேக் வீடியோக்கள் மிகப்பெரிய சிக்கலாக உருவெடுத்து இருக்கிறது. இதன் மூலம் தனிநபர் மற்றும் கருத்தியல் ரீதியான தாக்குதல் அதிகரித்திருப்பதாக மத்திய தகவல் தொழில்நுட்ப துறை தேர்வு தெரிவித்து இருக்கிறது.
டீப் பேக் வீடியோக்கள் பெரும்பாலும் சமூக ஊடகங்கள் வழியாகவே மக்களைச் சென்றடைகிறது. எனவே சமூக ஊடகங்கள் மீதான கண்காணிப்பை தீவிர படுத்த மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை முடிவு செய்து இருக்கிறது. இதற்காக தேவைப்படும் பட்சத்தில் சட்ட திருத்தத்தை மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது. தவறான, தடை செய்யப்பட்ட உள்ளடக்கங்கள் பதிவு செய்யப்படும் பொழுது அவற்றை உடனடியாக கண்காணித்து டெலிட் செய்யவும், தேவைப்படும் பட்சத்தில் சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ள ஏதுவாக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லவும் புதிய திருத்தம் வழி செய்யும் என்று சொல்லப்படுகிறது.
மேலும் தொழில்நுட்ப வளர்ச்சியால் பெரிதும் பாதிக்கப்படும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய கடுமையான நடவடிக்கைகளை உள்ளடக்கியதாக இச்சட்டம் உருவாக்கப்பட உள்ளது. மத்திய தகவல் தொழில்நுட்பத் துறையின் இந்த புதிய நடவடிக்கை டீப் பேக் உள்ளிட்ட பல்வேறு வகையான சமூக ஊடக பிரச்சனைகளை கட்டுப்படுத்தும் முயற்சியாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.