பார்கோடுகள்...
பார்கோடுகள்...

கோடுகள் தகவல்கள் சொல்லுமா? சொல்லுமே!

பெரிய மால்களில் விற்கப்படும் பொருள்கள் மீது ஒரு லேபிளில் சிறிய கோடுகள் உள்ளனவே. அவற்றில் என்ன உள்ளது?

சூப்பர் மார்க்கெட் போன்றவற்றில் விற்கப்படும் பொருள்கள் அடங்கிய பாக்கெட்களின் மீது ஒரு லேபிள் ஒட்டப்பட்டிருக்கும். இதில் சிறிய கோடுகள் பல நெடுக்குவாக்கில் காணப்படும். ஒவ்வொரு கோட்டின் அகலமும் மாறுபடும். இவற்றை பார் கோடு (bar code) என்பார்கள். இது பலவிதங்களில் நமக்கு வசதி. அந்தப் பொருளைத் தயாரிக்கும் நிறுவனம் எது, அது எந்த வகையான பொருள், அதன் விலை போன்ற பல விவரங்கள் இந்தப் பார்கோடு லேபிள்களில் உள்ளன.

இது வாடிக்கையாளர்களுக்குப் பெரும் நன்மையை அளிக்கிறது. நமக்கு முன்னே இருப்பவர் பன்னிரண்டு வகையான பொருட்களை வாங்கினால் அவை ஒவ்வொன்றின் பெயரையும் அதன் விலையையும் கணினியில் உள்ளிட வேண்டி இருக்கும். இதற்கு கணிசமாக நேரம் பிடிக்கும். ஆனால், வாங்கும் பொருளில் உள்ள பார்கோடு பகுதியை கணக்காளரிடம் உள்ள ஸ்கேனிங் கருவியின் மீது ஒத்திஎடுத்தாலே போதும் நமக்கான ‘பில்’லில் வேண்டிய தகவல்கள் வந்துவிடும். இதனால் வரிசையில் நிற்க வேண்டிய நேரம் மிகவும் குறைகிறது.

இந்தப் பார்கோடுகளைப் பயன்படுத்தும்போது குறிப்பிட்ட பொருள்கள் வாங்கப்பட்ட பிறகு அதன் ஸ்டாக் எவ்வளவு இருக்கிறது என்பது தானாகத் தெரிந்துவிடுவதால் எப்போது அவற்றை அடுத்ததாக வாங்கி நிரப்பி வைக்க வேண்டும் என்பதும் கடைக்காரருக்குத் தெளிவாகி விடுகிறது.

இந்த பார்கோடுகள் அதற்கான சாப்ட்வேர் எனப்படும் மென்பொருள்களைக் கொண்டு உருவாக்கப்படுகின்றன. அதில் என்னென்ன விவரங்கள் இடம் பெற வேண்டும் என்பதை சம்பந்தப்பட்ட சூப்பர்மார்க்கெட் நிறுவனம்தான் தீர்மானிக்கும்.

இதற்கான மென்பொருள் ஸ்கேனிங் கருவியால் ‘படித்து உணரக்கூடிய வகையில்’ இந்தத் தகவல்களைப் பார்க் கோடாக உள்ளிடும்.

பார் கோடுகளின் எண்ணிக்கை அதிகமாக ஆக உள்ளிடும் தகவல்கள் அதிகமாகின்றன என்று பொருள். இவற்றை உருவாக்கும் நிறுவனம் அந்த எண்ணிக்கைக்குத் தகுந்தாற்போல் கட்டணம் வசூலிக்கும்.

பார்கோடுகள்
பார்கோடுகள்

ஒரே பிராண்டு மற்றும் ஒரே பேட்ச் ஆகியவற்றிலுள்ள அனைத்து பொருள்களுக்கும் ஒரே மாதிரி பார் கோடுதான் கொடுக்கப்படும்’.

ஒருமுறை பயன்படுத்தப்பட்ட பார்கோடுகள் லேபிள்கள் மீண்டும் பயன்படுத்தப்படுவதில்லை. புதிய பொருட்களுக்கான விவரங்களைக் கொஞ்சமாவது மாறிவிட்டிருக்குமே!.

முதல்முறையாக பார் கோடுகள் ஸ்கேன் செய்யப்பட்டது என்பது ஜூன் 1974ல் நடைபெற்றது. அமெரிக்காவில் உள்ள ஒஹையோ பகுதியில் உள்ள மார்ஷ் சூப்பர்மார்க்கெட் என்பதில் பத்து பாக்கெட்டுகள் அடங்கிய ரிக்லீஸ் சூயிங்கம் என்பதற்குதான் முதன்முதலில் ஸ்கேனிங் நடைபெற்றது. ஆனால், பரவலாக பிரபலக் கடைக்காரர்கள் இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த மேலும் சுமார் பத்து வருடங்கள் ஆயின.

இன்று, பார்கோடுகள் பலவிதங்களில் பயன்படுத்தப்படுகின்றன. கிடங்குகளில் சரக்குகளை நிர்வகிக்கவும், ஷிப்பிங் செயல்முறைகளை நெறிப்படுத்தவும் பார்கோடுகள் பயன் படுத்தப்படுகின்றன.

உற்பத்தித் தொடரில், மூலப்பொருட்கள், உற்பத்திச் செயல்பாட்டில் உள்ள பொருட்கள் மற்றும் உற்பத்தி முழுமையடைந்த பொருட்களைப் பிரித்து அடையாளம் காணவும் கண்காணிக்கவும் இவை பயன் படுத்தப்படுகின்றன.

ஹெல்த்கேர் துறையில் பார்கோடுகள் நோயாளியை அடையாளம் காணவும், மருத்துவ உபகரணங்களைக் கண்காணிப்பதற்கும்,  மருந்துகளை நிர்வகிப்பதற்கும் பயன்படுத்தப்படுகின்றன. பார்கோடு செய்யப்பட்ட மணிக்கட்டுப் பட்டைகள் நோயாளியின் துல்லியமான அடையாளத்தை உறுதிப்படுத்த உதவுகின்றன.

நூலகங்களில் ஒவ்வொரு புத்தகத்திற்கும் ஒரு தனிப்பட்ட பார்கோடு ஒதுக்கப்படும்போது அது  புத்தகங்களைச் சரிபார்ப்பதை எளிதாக்குகிறது.

இதையும் படியுங்கள்:
எளிதாக செய்யலாம் அரிசிம்பருப்பு சோறு!
பார்கோடுகள்...

விரைவான மற்றும் துல்லியமான தரவு உள்ளீட்டிற்காக, ஓட்டுநர் உரிமங்கள் மற்றும் பாஸ்போர்ட்கள் போன்ற அரசாங்கத்தால் வழங்கப்பட்ட அடையாள ஆவணங்களில் பார்கோடுகள் பயன்படுத்தப்படுகின்றன.

அமெரிக்காவில் உள்ள சியாட்டில் பகுதியில் இப்போதெல்லாம் இறந்தவர்களின் கல்லறைகளில்கூட பார்கோடுகள் இணைக்கப்படுகின்றன. அதைக்கொண்டு இறந்தவர்கள் தொடர்பான தகவல்களைப் பெறமுடியும் என்பது ஆச்சர்யமான விஷயம்!

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com