இரயில் பயணத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய கவச் தொழில்நுட்பம் உதவுகிறது. இந்தத் தொழில்நுட்பம் எப்படி வேலை செய்யும், எப்போது இந்திய இரயில்களில் முழுவதுமாக பொருத்தப்படும் என்ற தகவல்களை விளக்குகிறது இந்தப் பதிவு.
கவச் என்பதன் அர்த்தமே கவசம் என்பது தான். பெயருக்கு ஏற்றது போல் ஆபத்து காலங்களில் கவசமாக செயல்படுவது தான் இதன் வேலை. ஒரு இரயிலில் கவச் தொழில்நுட்பம் பொருத்தப்பட்டு இருந்தால், எந்த ஒரு ஆபத்தான சூழலிலும், அந்த இரயில் விபத்துக்குள்ளாமால் பாதுகாக்கப்படும். அதாவது, பனி சூழ்ந்திருக்கும் நேரங்களிலும், சிக்னல் கோளாறு ஏற்பட்டிருக்கும் நேரங்களிலும் ஒரே தண்டவாளத்தில் நேர் எதிரே இரயில்கள் வந்தால், இரயிலில் இருக்கும் கவச் தொழில்நுட்பம் தானாகவே பிரேக்கை அழுத்தி இரயிலைப் பாதுகாப்பாக நிறுத்தி விடும்.
கடந்த சில ஆண்டுகளில் இரயில் விபத்துகள் அதிகளவில் ஏற்படுகின்றன. இதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், முன்னெச்சரிக்கை ஏற்பாடாக கவச் தொழில்நுட்பம் பொருத்தப்படாததும் ஒரு முக்கிய காரணம். இரயில் பயணத்தில் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கத்தில் தானியங்கி இரயில் பாதுகாப்பு அமைப்பு (ATP) எனப்படும் கவச் தொழில்நுட்பத்தை கடந்த 2022 ஆம் ஆண்டில் இரயில்வே அமைச்சகம் அறிமுகப்படுத்தியது. ரிசர்ச் டிசைன்ஸ் மற்றும் ஸ்டாண்டர்ட்ஸ் ஆர்கனைசேஷனின் (RDSO) மூலம், 3 இந்திய நிறுவனங்கள் தயாரித்த கவச் தொழில்நுட்பத்தை இரயில்வே நிர்வாகம் பல்வேறு சோதனைகளுக்குப் பிறகு பயன்பாட்டுக்கு கொண்டு வந்தது. இருப்பினும், இது அனைத்து இரயில்களிலும் பொருத்தப்படவில்லை என்பது குறையாகவே இருந்து வருகிறது.
கவச் தொழில்நுட்பத்தின் செயல்பாடு:
ஆபத்து காலங்களில் முதலில் இரயில் ஓட்டுநர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக சிக்னல் பாசிங் அட் டேஞ்சர் (SPAT) என்ற சமிக்ஞையை ஏற்படுத்தும். அதனைக் கண்டு ஓட்டுநர் இரயிலை நிறுத்தி பாதுகாக்க முடியும். ஒருவேளை இரயில் ஓட்டுநர் இந்த எச்சரிக்கையை கவனிக்கத் தவறினால், கவச் தானாகவே பிரேக்கை அழுத்தி ஆபத்திலிருந்து இரயிலைப் பாதுகாக்கும். இதுமட்டுமின்றி, அவசர காலங்களில் இரயிலைக் கட்டுப்படுத்த பாதுகாப்பு அம்சமான SOS பட்டனும் இதில் உள்ளது.
கவச் தொழில்நுட்பத்தை ஏற்கனவே அமெரிக்கா, சுவிட்சர்லாந்து, ஜெர்மனி, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் தங்களது இரயில்களில் பொருத்தியுள்ளன. இந்நிலையில் இந்தியாவில் முதன்முறையாக கவச் தொழில்நுட்பம் 1986 இல் மும்பை புறநகர் இரயில்களிலும், 2006 இல் வடகிழக்கு இரயில்களிலும் பொருத்தி சோதனை செய்யப்பட்டது. தொடர் சோதனைகளுக்குப் பிறகும், தென்மத்திய இரயில்வேயின் லிங்கம்பள்ளி - விகாராபாத் - வாடி மற்றும் விகாராபாத் - பிதார் ஆகிய பிரிவுகளில் சுமார் 250 கிலோமீட்டர் தொலைவு வரை கவச் தொழில்நுட்பம் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இந்த சோதனை வெற்றி அடைந்ததை அடுத்து, நாடு முழுவதும் உள்ள இரயில்களில் இந்தத் தொழில்நுட்பத்தை விரிவுபடுத்த இரயில்வே அமைச்சகம் முடிவு செய்தது. தற்போது 144 இந்திய இரயில்களில் மட்டுமே இந்தத் தொழில்நுட்பம் பொருத்தப்பட்டுள்ளது.
அடுத்ததாக 1,000 இரயில்களில் கவச் தொழில்நுட்பம் பொருத்தப்படும் என இரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் அடுத்த 4 ஆண்டுகளில் இந்தியா முழுவதும் கவச் தொழில்நுட்பம் வந்து விடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. கவச் தொழில்நுட்பம் முழுமையாக வந்துவிட்டால், பிறகு இரயில் விபத்துகளை முற்றிலுமாக குறைத்து விட முடியும்.