
விண்வெளித் துறையில் இந்தியா தொடர்ந்து பல சாதனைகளை நிகழ்த்தி, முன்னேற்றங்களை சந்தித்து வருகிறது. சந்திராயன்-3 வெற்றியின் மூலம் உலகளவில் இந்திய விண்வெளித் துறையின் சக்தி நிரூபணமானது. அதோடு வெளிநாட்டு செயற்கைக் கோள்களையும் அவ்வப்போது இந்தியா விண்ணில் ஏவி வருகிறது. அவ்வகையில், கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா ஏவியிருக்கும் வெளிநாட்டு செயற்கைக் கோள்களின் எண்ணிக்கை எவ்வளவு? இதன்மூலம் கிடைத்த வருவாய் எவ்வளவு என்பதை இந்தப் பதிவில் தெரிந்து கொள்வோம்.
உலகின் முன்னணி விண்வெளி நிறுவனங்கள், மற்ற நாடுகளின் செயற்கைக் கோள்களை விண்ணில் ஏவுவது வழக்கமான ஒன்று தான். இதற்கென சில விதிமுறைகளும் உள்ளன. இந்த வரிசையில் இந்தியாவும் வெளிநாட்டு செயற்கைக் கோள்களை வெற்றிகரமாக விண்ணில் ஏவி வருகிறது. இந்த சேவையின் மூலம் வருமானத்தையும் ஈட்டி வருகிறது இந்திய விண்வெளித் துறை.
இந்தியா கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் வெளிநாட்டைச் சேர்ந்த 393 செயற்கைக் கோள்களை விண்ணில் ஏவியுள்ளது. மேலும் வணிக ரீதியாக 3 செயற்கைக் கோள்களை ஏவியிருக்கிறது. 2015 ஜனவரி மாதம் முதல் 2024 டிசம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தில் தான் இந்தச் சாதனையை நிகழ்த்தி இருக்கிறது இந்திய விண்வெளித் துறை. இதன்மூலம் ரூ.1,243 கோடி வருவாயையும் ஈட்டி இருக்கிறது. இது டாலரின் மதிப்பில் 143 மில்லியன் அமெரிக்க டாலருக்கு சமமாகும்.
PSLV, SSLV மற்றும் LVM3 ஆகிய ஏவுகணை வானங்களின் மூலம், மொத்தம் 34 நாடுகளைச் சேர்ந்த செயற்கைக் கோள்களை இந்தியா ஏவியுள்ளது. இதில் அதிகபட்சமாக முதலிடத்தில் இருப்பது அமெரிக்கா செயற்கைக் கோள்கள்தான். இந்த எண்ணிக்கையில் அமெரிக்கா 232, இங்கிலாந்து 83, சிங்கப்பூர் 19, கனடா 8, கொரியா 5, இத்தாலி 4, லக்சம்பர்க் 4, பெல்ஜியம் 3, பிரான்ஸ் 3, ஜெர்மனி 3, பின்லாந்து 3, ஜப்பான் 2, நெதர்லாந்து 2, இஸ்ரேல் 2, ஸ்விட்சர்லாந்து 2, ஸ்பெயின் 2, ஆஸ்திரியா 1, ஆஸ்திரேலியா 1 மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் 1 என பல நாடுகளின் செயற்கைகோள்கள் இதில் அடங்கும்.
விண்வெளி உலகில் தொடர்ச்சியாக இந்தியா பல்வேறு சாதனைகளைப் புரிந்து வருகிறது. இதனால் தான் மற்ற நாடுகளும் இந்தியாவின் உதவியை எதிர்பார்க்கின்றன. இதன்மூலம் விண்வெளித் துறையில் இந்தியா மிகப்பெரிய சக்தியாக உருவெடுத்துள்ளது. இனி வரும் ஆண்டுகளில் இந்தியா ஏவும் வெளிநாட்டு செயற்கைக் கோள்களின் எண்ணிக்கை கணிசமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது அடுத்தடுத்த இலக்குகளை நோக்கி இந்திய விண்வெளித் துறை பயணித்து வருகிறது. இந்த வரிசையில் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்திற்கு முழுவீச்சில் தயாராகிக் கொண்டிருக்கிறது. விண்வெளியில் ஆய்வு மையத்தை நிறுவி ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் விதமாக ‘பாரதிய அந்தரிக்ஷ நிலையத்தை’ 2035 ஆம் ஆண்டுக்குள் அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விண்வெளிக்கு வீரர்களை அனுப்புவது தவிர்த்து, நிலவுக்கும் மனிதர்களை அனுப்பத் திட்டமிட்டு இந்தியா செயல்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தை 2040 ஆம் ஆண்டுக்குள் முடிக்கவும் இலக்கு நிர்ணயித்துள்ளது இந்திய விண்வெளித் துறையான இஸ்ரோ.