
மனிதர்களை விண்ணிற்கு அனுப்பும் இஸ்ரோவின் திட்டம் தான் ககன்யான். இதற்கான சோதனை ஓட்டம் கடந்த 2023 அக்டோபர் மாதத்தில் வெற்றிகரமாக நிறைவு பெற்றது. இதனையடுத்து மனிதர்களை விண்ணிற்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்றன. இருப்பினும் இதில் விண்வெளி வீரர்களின் பாதுகாப்புக்குத் தான் முதல் முன்னுரிமை என்பதால், முதலில் பழ ஈக்களை அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இதற்கு அறிவியல் பூர்வமான காரணமும் உண்டு.
விண்வெளி ஆராய்ச்சியில் உலக நாடுகளுக்கு சற்றும் சளைக்காத வகையில் இஸ்ரோ செயல்பட்டு வருகிறது. இதற்கு உதாரணமாக பல வெற்றித் திட்டங்களைக் கூறலாம். இருப்பினும் சந்திராயன்-3 வெற்றியே இன்னும் பல ஆண்டுகளுக்கு பேசப்படும் அளவிற்கு இஸ்ரோ விஞ்ஞானிகள் சாதித்துள்ளனர். சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல்-1 விண்கலம் கடந்த 2023 இல் ஏவப்பட்டது. அடுத்ததாக மனிதர்களை விண்ணிற்கு அனுப்பும் ககன்யான் திட்டத்திலும் இஸ்ரோ விஞ்ஞானிகள் சாதனை படைக்க காத்திருக்கின்றனர்.
ககன்யான் திட்டத்தின் சோதனை ஓட்டம் ஏற்கனவே வெற்றிபெற்ற நிலையில், மீண்டும் 2 ஆளில்லா ராக்கெட்டுகளை ஏவி சோதனை செய்யவுள்ளது இஸ்ரோ. இதில் முதல்முறை செய்யப்படும் சோதனையில் பழ ஈக்களை விண்ணிற்கு அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இருமுறை சோதனைகள் வெற்றியடைந்த பின், 3வது ராக்கெட்டில் 3 விண்வெளி வீரர்கள் விண்ணிற்கு அனுப்பப்படுவார்கள். இதற்காகவே ஒரு விண்கலம் விசேஷமாக வடிவமைக்கப்பட உள்ளது. பூமியின் தாழ்வான சுற்றுவட்டப் பாதையில் விண்வெளி வீரர்களை தரையிறக்கி, மீண்டும் பாதுகாப்பாக பூமிக்கு கொண்டு வருவதே இந்த விண்கலத்தின் முக்கிய நோக்கம்.
இஸ்ரோவின் முதல் ஆளில்லா ராக்கெட் சோதனையில் பழ ஈக்களைத் தேர்வு செய்ததற்கு 2 முக்கிய காரணங்கள் உள்ளன. முதல் காரணம் இவற்றின் வாழ்நாள் 5 முதல் 60 நாட்கள். ஆளில்லா ராக்கெட் 5 முதல் 7 நாட்கள் வரையிலான சோதனைக்கு உட்படுத்தப்படும். ஆகையால் பழ ஈக்களின் வாழ்நாட்கள் இந்தச் சோதனைக்கு ஏற்றதாக இருக்கும்.
இரண்டாவது காரணம், பழ ஈக்கள் மனிதர்களுக்கான மரபணுவை 75% வரை பகிர்ந்து கொள்கின்றன. இதன்மூலம், விண்வெளி பயணத்தின் போது இவை எம்மாதிரியான உயிரியல் தாக்கங்களை எதிர்கொள்கின்றன என்பதை எளிதாக மதிப்பிட முடியும். மேலும் பழ ஈக்களின் உயிரியல் நிகழ்வுகளையும் விஞ்ஞானிகளால் அறிந்து கொள்ள முடியும்.
விண்வெளிக்கு செல்லும் பழ ஈக்கள் 2 குழுக்களாக பிரிக்கப்பட்டு பாட்டில்களில் அடைக்கப்படும். இதில் ஒரு பாட்டிலில் உள்ள ஈக்கள் விண்வெளியில் செலுத்தப்படும். மற்றொரு பாட்டிலில் உள்ள ஈக்கள், விண்வெளி மற்றும் ஏற்கனவே விடப்பட்ட ஈக்களுக்கும் இடையே உள்ள பகுதிகளில் ஏற்படும் மாற்றங்களை கண்காணிக்கப் பயன்படுத்தப்படும். இஸ்ரோ விஞ்ஞானிகள், அனைத்து பழ ஈக்களையும் தொடர்ந்து கண்காணித்து வருவார்கள்.
ககன்யான்-1 ராக்கெட்டின் முதல் ஆளில்லா சோதனை வெற்றியடையும் பட்சத்தில், இரண்டாவது சோதனையும் சிறிது கால இடைவெளியில் நடத்தப்படும். அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகள் மனிதர்களை விண்ணிற்கு அனுப்பியுள்ள நிலையில், இந்தப் பட்டியலில் விரைவில் இந்தியாவின் பெயரும் இடம்பெறும் என்பதில் ஐயமில்லை.