

விண்கலங்களின் வேலை என்ன? அது எப்படி செயல்படுகிறது? டிஸ்கவரி விண்கலத்தின் சிறப்பு என்ன? என்பதை இப்பதிப்பில் காண்போம்.
நாஸா இதுவரை நான்கு விண்கலங்களை(Space shuttle) உருவாக்கி உள்ளது. அவை டிஸ்கவரி, கொலம்பியா, எண்டெவர், அட்லாண்டிஸ். இவற்றில் கொலம்பியா விபத்துக்குள்ளாகி அழிந்து விட்டது.
டிஸ்கவரி என்ற பெயரில் இருந்த இரண்டு கப்பல்களின் நினைவாக இந்த விண்கலத்துக்கு இப்பெயர் சூட்டப்பட்டது. 2005 ல் நாசாவின் டிஸ்கவரி விண்கலம் விண்வெளிக்குச் சென்று அங்குள்ள சர்வதேச விண்வெளி மையத்திற்கு தேவையான பொருட்களை கொடுத்து விட்டு பாதுகாப்பாக பூமிக்குத் திரும்பியது.
செயற்கைக்கோள் விண்வெளிக்குச் சென்றதும் அவை எதற்காக அனுப்பப்பட்டதோ அந்த வேலையைச் செய்யும். அந்த வேலை முடிந்ததும் பூமியின் கடற்பகுதியிலோ அல்லது விண்வெளியிலோ அழிந்து விடும். ஆனால், விண்கலங்கள் என்பவை விமானங்கள் போல, விண் வெளிக்கு ஆராய்ச்சிக்குச் செல்லும்.
பூமியில் இருந்து விண்வெளி வீரர்களையும் ஆராய்ச்சிக்குத் தேவைப்படும் பொருட்களையும் ஏற்றிக் கொண்டும் செல்லும். இந்த விண்கலங்களால் குறைந்தபட்சம் 100 முறையாவது விண்வெளிக்குச் சென்று வர முடியும் என்று கூறப்படுகிறது. இதுபோல முப்பது முறைகளுக்கு மேல் விண்வெளிக்குச் சென்று வந்துவிட்டது டிஸ்கவரி.
இவை விண்வெளிக்குச் செல்லும் ஒவ்வொரு முறையும் மனிதர்கள், விலங்குகள், தாவரங்கள், ரசாயன பொருட்கள் ஆகியவற்றின் தன்மையைப் பற்றிய தகவல்களைச் சேகரித்துத் தருகின்றன. விண்வெளியில் அமைக்கப்பட்டிருக்கும் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கும் (அமெரிக்கா) மிர் விண்வெளி நிலையத்துக்கு (ரஷ்யா) சென்று வந்திருக்கின்றன.
இதைத்தவிர ஹப்பில் தொலைநோக்கி மற்றும் சனி, வியாழன், வெள்ளி கிரகங்களை ஆராய அனுப்பப்பட்டிருக்கும் செயற்கை கோள்களையும் சந்தித்து வந்திருக்கின்றன இந்த விண்கலங்கள்.
இவை விண்ணுக்குச் செல்லும் போது வழக்கமான ஏவுகணை போலவே ஏவப்படுகின்றன. விண்ணுக்குச் சென்றதும் கப்பல் போல் சுற்றி வருகிறது. இறங்கும்போது விமானம் போல தரையிறங்குகிறது. இறங்கும்போது சமநிலைக்காக பாராசூட் ஒன்றும் இதில் உண்டு. 3 எஞ்சின்களுடன் கூடிய ஆர்பிட்டர், இரண்டு ராக்கெட்டு பூஸ்டர்கள் மற்றும் ஒரு வெளிப்புற டேங்க் ஆகியவை விண்கலங்களின் முக்கிய பகுதிகள்.