
கண், காது, மூக்கு, நாக்கு, தோல் ஆகியவை ஐம்புலன்கள் எனப்படுகின்றன. இதில் செவி எனப்படும் காது நாம் கேட்பதற்கு பயன்படும் ஒரு உறுப்பாக உள்ளது. நமக்கு காது எப்படி கேட்கிறது என்பதை பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.
காதுகள் நமக்கு ஒலிகளைக் கேட்க உதவுவதோடல்லாமல் வேறு வகையிலும் பயன்படுகின்றன. நம்முடைய கண்களைக் கட்டி ஓர் அறையில் விட்டால் நாம் முன்பக்கம் போகிறோமோ, அல்லது பின்பக்கம் போகிறோமோ என்பதை அறிவதும், கண்களை கட்டி நம்மை சுற்றும்போது, மெதுவாகச் சுற்றுகிறார்களா வேகமாகச் சுற்றுகிறார்களா? என அறிவதும் காதின் வேலையே. இதுபோன்ற பல்வேறு செயல்களை நாம் அறிவதும் காதுகளின் வழியாகவே.
காதின் அமைப்பு மூன்று முக்கிய பகுதிகளால் ஆனது. அவை வெளிச்செவி, நடுச்செவி உட்செவி என்பதாகும். இந்த அளவில் காதின் நுட்ப பகுதியை விளக்குவதை நிறுத்தி, அது எவ்வாறு ஒலிகளை உணரப் பயன்படுகிறது என்று கவனிப்போம்.
குளத்தில் ஒரு கல்லைப் போட்டால், நீரில் அலைகள் உண்டாவதுபோல, மணி அடிக்கும் போது வாயு மண்டலத்தில் ஓர் கலக்கம் உண்டாகிச் சில அலைகள் தோன்றுகின்றன. அவை புறச் செவிக்குள் செல்லுகின்றன. புனல் போன்ற செவிமடல் அலைகளைச் சேர்த்து செவியினுள் புகுத்த உதவுகிறது. ஒருவன் பேசும் போது ஒலி தெளிவாகக் கேட்காவிட்டால், உள்ளங்கையைக் காதில் குவித்து வைத்துக் கேட்பதைக் காணலாம். இப்படிச் செவிக்குழலுள் புகும் அலைகள் செவிப்பறையைத் தாக்குகின்றன.
மிருதங்கத்தின் பறையை அதிர்ச்சிக்குத் தகுந்தபடி மிதமாகவோ, தளர்வாகவோ செய்வதுபோல, இந்தப் பறை தசைகளால் மிதமாகவோ, தளர்வாகவோ மாற்றப்படலாம். செவிப்பறையின் மேல் தாக்கும் அலைகள் அதில் அதிர்ச்சியை உண்டாக்க, அந்த அதிர்ச்சிகள் நடுக்காதிலுள்ள சிறு எலும்புகள் மூலம் முட்டை வடிவத்துளையை மூடிக்கொண்டுள்ள சவ்வைத் தாக்குகின்றன.
இந்தச் சவ்வு அதிரும் போது அதைச் சூழ்ந்துள்ள திரவத்தில் அதிர்ச்சி உண்டாகும் என்பது நமக்குத் தெரிந்ததே. இந்த அதிர்ச்சிகள் காக்குலியாவைத் தாக்க, அதனுள்ளே இருக்கும் செவி-உணர்வு செல்களுக்கு ஒலி அலைகள் எட்டுகின்றன. இந்தத் தாக்குதலினால் செவி- உணர்வு செல்களில் உண்டாகும் தூண்டல் மூளைக்கு எட்டுகிறது. அப்போது நாம் ஒலியைக் கேட்கிறோம். மனித இயக்கத்தின் மர்மங்களில் ஒன்றாக இருக்கும் காதுகளை கவனமாக கவனித்துக் கொள்ள வேண்டும்.