
இந்தியப் பசிபிக் கடலோரப் பகுதியில் காணப்படும் ஒருவகை பச்சைப்பசேல் என்றிருக்கும் கடல்பாசியினையே, கடல் திராட்சை (Caulerpa lentillifera) என்கின்றனர். இதன் தாவரவியல் பெயர் 'கவுலெர்ப்பாலெண்டில்லிஃபெரா' என்பதாகும். அதன் மென்மையான, சதைப்பற்றுள்ள அமைப்பு காரணமாக, இந்தக் கடற்பாசி சாப்பிடக்கூடிய கவுலெர்ப்பா வகை இனங்களுள் ஒன்றாகும். இந்த வகைக் கடற்பாசி பிலிப்பைன்ஸ் நாட்டில் பயிரிடப்பட்டு சாப்பிடப்படுவதால் இது இலாட்டோ, குசோ, ஆந்திரோசெப் போன்ற பல்வேறு பெயர்களில் அங்கு பயன்பாட்டிலிருக்கும் உள்ளூர் மொழியில் அறியப்படுகிறது; மலேசிய நாட்டில் உள்ள சபா மாநிலத்தில், ‘இலாட்டோக்' என அழைக்கப்படுகிறது. ஜப்பானிலுள்ள ஒகினாவாவில் "உமி-புடோ", அதாவது "கடல் திராட்சை" என்று அழைக்கப்படுகிறது. இது ஆங்கிலத்தில் பச்சைக் கேவியர் அல்லது கடல் திராட்சை எனப்படுகிறது.
இது வடிகுழல் வகைப் பெரும்பாசியாகும். பெரிய உயிர்க்கலத்தில் இருந்து பல்கரு உருவாகும் பாசியாகும். இது 30 செமீ நீளத்துக்கு வளர்கிறது. இலைகள் மட்டுமன்றி, இதன் குமிழ்ப் பகுதிகள் வாயில் வெடித்து நல்ல உமாமி வகை மணத்தைத் தருகிறது. மரபாக கடல் திராட்சை காட்டுப்பயிரில் இருந்து நேரடியாக அறுவடை செய்யப்படுகிறது.
இது முதலில் வணிகமுறையில் 1950-ம் ஆண்டுகளில் சிபுத் தீவுகளில் தற்செயலாக மீன்குட்டைகளில் அறிமுகமாகி, பயிரிடப்படலானது. இப்போது மத்திய பிலிப்பைன்சு நாட்டில் உள்ள மாக்டான் தீவு, சிபு தீவுகளில், பெரிய குளங்களில் பயிரிடப்பட்டு மிகவும் வெற்றிகரமாக சிபு, மணிலா சந்தைகளில் விற்கப்படுகிறது. சுமார் 400 எக்டேர் அளவுள்ள குளங்களில் பயிரிடப்பட்டு, ஆண்டுக்கு ஓர் எக்டருக்கு 12 முதல் 15 டன் புதிய கடற்பாசி அறுவடை செய்யப்படுகிறது.
இதைத் தொடர்ந்து ஜப்பான், ஒக்கினாவாவில் 1968 ஆம் ஆண்டிலிருந்து வெதுப்பான நீர்த்தொட்டிகளில் வணிக முறையில் பயிரிடப்பட்டது. பிறகு வணிகமுறைப் பயிரிடல், வியட்நாம் தைவான், சீனா, பியுஜித் தீவுகள், கைனான் எனப் பல நாடுகளில் பெரும்பாலும் உள்நாட்டு நுகர்வுக்காகப் பரவியது என்றாலும் ஜப்பானுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
கவுலெர்ப்பா இலெண்டில்லிஃபெரா பொதுவாக வினிகருடன் சேர்த்து பச்சையாக, ஒரு சிற்றுண்டியாக அல்லது ஒரு சாலட்டாகச் சாப்பிடப்படுகிறது.
கடல் திராட்சை தூய நீரில் கழுவப்பட்ட பின்னர், வழக்கமாக ஒரு சாலட்டு போன்று பச்சையாகவேச் சாப்பிடப்படுகிறது. வெங்காயம், புதிய தக்காளி கலந்த கலவை மீது மீன் சாஸ் அல்லது பகூங் எனப்படும் மீன் பசைக்குழைவும், வினிகர் எனும் செயற்கைப் புளிக்காடி ஆகியவற்றால் அழகு பட விரவிச் சாப்பிடப்படுகிறது. மலேசியாவின் சபா மாநிலத்திலும் பச்சையாகக் கலந்து உண்பது மக்கள் வழக்கில் உள்ளது. இங்கு சாமா-பயாவு இனம் புலம் பெயெர்ந்ததால் இம்முறை உணவு வழக்குக்கு வந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இவ்வுணவு இலட்டோகு என இரியாவு த்ஹீவகம் சார்ந்த மலாய் மக்களாலும், சிங்கப்பூரிலும் வழக்கில் வந்து அவர்கள் கடற்கரைப் பகுதியில் இருந்த உள்நாட்டுக்குப் புலம் பெயரும் வரை வழக்கில் இருந்துள்ளது.
இது அயோடின் சத்து நிறைந்தது. மேலும், நீரிழிவுநோய், கொழுப்பு குறைக்கும் திறன் கொண்டுள்ளது என்கின்றனர்.