'ஸ்டெதாஸ்கோப்' உருவான கதையும் பெயர் காரணமும் தெரியுமா?

Stethoscope
Stethoscope

உடல்நிலை சரியில்லாமல் போனால் மருத்துவரை நாடுகிறோம். அவர் முதலில் நமது நாடியைப் பிடித்து பரிசோதனை செய்வார். பின்னர் ஸ்டெதாஸ்கோப் என்ற கருவியின் மூலம் இதயத்துடிப்பை ஆராய்வார். இவை இரண்டையும் வைத்து நமது உடலில் உள்ள பிரச்சினை என்ன என்பதை மருத்துவர் சுலபமாய் கண்டுபிடிப்பார்.   

இன்றைய மருத்துவத்துறையில் மிகவும் இன்றியமையாத ஒரு சாதனம் ஸ்டெதாஸ்கோப். இந்த கருவியைக் கண்டுபிடித்தவர் இரெனே லென்னெக். தொடக்கத்தில் இந்த கண்டுபிடிப்பு அவ்வளவாக பலரால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. ஆனால் நாளடைவில் அனைவரும் இதன் அருமையை உணர்ந்து பயன்படுத்தத் தொடங்கிவிட்டார்கள். 

தொடக்கத்தில் மருத்துவத் துறையில் ஆர்வமின்றி இருந்த லென்னெக், பின்னர் அத்துறையின் மகத்துவத்தைப் புரிந்து கொண்டு ஆர்வமாக மருத்துவப் படிப்பை முடித்து மருத்துவரானார். சிலகாலம் மருத்துவராய் பணியாற்றிய பின்னர் மருத்துவ மேற்படிப்பு படிக்க வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது. இதனால்  பாரீஸ் சென்ற லென்னெக் அங்கு ஒரு புகழ்பெற்ற மருத்துவப் பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பில் சேர்ந்தார்.

லென்னெக் மருத்துவத் துறையில் பலவிதமான ஆராய்ச்சிகளை மேற்கொண்டார்.   கிரேக்க மருத்துவ மேதை ஹிக்போகிரேட்டஸ் தம்மிடம் வரும் நோயாளிகளின் மார்பின்மீது காதை வைத்து அதில் கேட்கும் ஒலியின் தன்மைக்கேற்ப சிகிச்சை செய்வார். லென்னெக் இதைப் பின்பற்றித் தனது ஆய்வுகளைத் தொடர்ந்தவாறு இருந்தார். தடிமனான உடல் உடையவர்களை இந்த முறையில் ஆராயும் போது ஒலி சரியாக கேட்காத சிக்கல் இருந்தது.  

லென்னெக் இதற்கு மாற்றாக ஒரு சிறந்த கருவியைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று சிந்தித்தவாறே இருந்தார். ஒருநாள் பூங்காவில் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருப்பதை வேடிக்கை பார்த்தபடி நின்று கொண்டிருந்தார். அந்த பூங்காவில் இருந்த சீசா என்ற மரத்தாலான விளையாட்டுக் கருவி இருந்தது. ஒரு சிறுவன் அந்த விளையாட்டுக் கருவியின் ஒரு முனையில் ஊசியால் கீற அதை மற்றொரு முனையில் இருந்த சிறுவன் தனது காதை வைத்துக் கேட்டுக் கொண்டிருந்தான். ஒரு முனையில் ஊசியால் கீறும் சத்தம் மற்றொரு முனையில் காதை வைத்துக் கேட்கும்போது தெளிவாகக் கேட்டது. இதை விளையாட்டாக சில சிறுவர்கள் செய்து கொண்டிருந்தார்கள். இதை கூர்ந்து கவனித்த லென்னெக் மரம் போன்ற திடப்பொருட்களுக்கு ஒலியைப் பெருக்கும் ஆற்றல் உண்டு என்பதை அச்சிறுவர்களுக்கு விளக்கினார். அப்போதுதான் அவருடைய மனதில் ஒரு பொறி தட்டியது. இந்த தத்துவத்தைக் கொண்டு இதயத்துடிப்பைத் துல்லியமாகக் கண்டுபிடிக்க முடியுமா என்று யோசித்தார்.    

இதையும் படியுங்கள்:
மைக்ரோவேவ் அடுப்பு கண்டுபிடிக்கப்பட்ட கதை!
Stethoscope

யோசித்தவாறே மருத்துவமனைக்குச் சென்ற லென்னெக் ஒரு காகிதத்தை எடுத்து உருளை வடிவத்தில் சுற்றி அதை நோயாளியின் மார்பில் வைத்து அதன் மறுமுனையில் தன் காதை வைத்துக் கேட்டார். நோயாளியின் இதயத் துடிப்பானது மிகத்துல்லியமாக லென்னெக்கிற்குக் கேட்டது. லென்னெக் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. நோயின் தன்மைக்கு ஏற்ப இதயஒலியானது வேறுபடும். எனவே நோயாளிகளின் இதயத்துடிப்பை வைத்து நோயை மிகச் சுலபமாய்  கண்டுபிடிக்கலாம் என்று முடிவு செய்தார்.   

தொடர்ந்து லென்னெக் தனது ஆராய்ச்சிகளைச் செய்தவாறே இருந்தார்.  மரத்தினால் ஆன உருளை, ஒலியை நன்கு கேட்கச்செய்யும் என்று முடிவு செய்து, மரத்தைக் கொண்டு உருளை வடிவில் ஒரு கருவியை வடிவமைத்தார். இந்த புதிய கருவியைக் கொண்டு நோயாளிகளை பரிசோதித்தபோது இதயத் துடிப்பானது முன்பைவிடத் துல்லியமாகக் கேட்டது. ஆம் லென்னெக் தொடார்ந்து முயற்சி செய்து ஒரு அற்புதமான மருத்துவக் கருவியை கண்டுபிடித்துவிட்டார். இதற்கு ஸ்டெதாஸ்கோப் என்று பெயரும் சூட்டி மகிழ்ந்தார். 

கிரேக்கமொழியில் 'ஸ்டெதாஸ்' என்றால் மார்பு; 'ஸ்கோபின்' என்றால் சோதனை செய்தல் என்று பொருள். எனவே, தான் கண்டுபிடித்த கருவிக்கு 'ஸ்டெதாஸ்கோப்' என்று பெயரிட்டார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com