மின்தூக்கி எனப்படும் லிஃப்ட் இன்று பல அடுக்குமாடிக் கட்டடங்களில் பயன்படுத்தப்படும் மின்சாதனமாக மாறிவிட்டது. முதலில் மேனுவல் லிஃப்ட் பயன்பாட்டில் இருந்தது. ஆனால் இப்பொழுது கதவுகள் தானாகத் திறந்து மூடும் சென்ஸார் லிஃப்ட்கள் புழக்கத்தில் உள்ளன. இந்த அதிநவீன லிஃப்ட்கள் இல்லாத அலுவலகங்கள், அடுக்குமாடிக் குடியிருப்புகளே இல்லை எனலாம்.
லிஃப்ட்கள் ஆரம்பத்தில் எடை அதிகமுள்ள பொருட்களை கட்டடத்தின் மேலும் கீழும் எடுத்துச் செல்லவே பயன்படுத்தப்பட்டன. பின்னரே இதில் மனிதர்களும் பயணிக்கலாம் எனக் கண்டறியப்பட்டது.
18 ஆம் நூற்றாண்டில் இப்போது உள்ளதுபோல லிஃப்ட்களில் நின்று பயணிக்க வேண்டியதில்லை. லிஃப்ட்களில் அமர சொகுசு இருக்கைகள் அமைக்கப்பட்டிருந்தன. மத்திய லண்டனில் உள்ள லங்ஹம் பகுதியில் 1865 ஆம் ஆண்டு நட்சத்திர விடுதி ஒன்று திறக்கப்பட்டது. ஐரோப்பாவில் முதல் பிரம்மாண்ட நட்சத்திர விடுதியான இதில் ஹைட்ராலிக் லிஃப்ட் பொருத்தப்பட்டது. இவை 'உயரும் அறைகள்' என்றே முதன்முதலில் அழைக்கப்பட்டன.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நட்சத்திர விடுதிகளிலேயே முதலில் லிஃப்ட் பயன்படுத்தப்பட்டது. குடியிருப்பு மற்றும் வணிக வளாகங்களில் பின்னரே பயன்படுத்தப்பட்டது.
ஜெர்மனியில் லிஃப்ட் ஆபரேட்டர்கள் லிஃப்டை இயக்க மூன்று வருடப் பயிற்சி அளிக்கப்பட்டு அவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இவர்கள் மட்டுமே லிஃப்டை இயக்கத் தகுதியானவர்களாகக் கருதப்பட்டனர். அப்போது லிஃப்டை நிறுத்த கயிறுகளைக் கட்டி இழுக்க வேண்டும். சரியான ஃப்ளோரில் சரியான கயிற்றை இழுத்தால் மட்டுமே லிஃப்ட் நிற்கும். 19 ஆம் நூற்றாண்டில் லிஃப்ட்களில் குறிப்பிட்ட ஃப்ளோருக்குச் செல்ல பட்டன் சிஸ்டம் வரத் துவங்கியபோது லிஃப்ட் ஆபரேட்டர்கள் பலர் வேலை இழந்தனர்.
உலகின் உயரமான கட்டடங்களில் ஒன்றான புர்ஜ் கலீஃபாவின் லிப்ஃட் 504 மீட்டர் உயரம் வரை செல்லும். உலகின் உயரமான லிப்ஃட் இதுவே. இந்த கட்டிடத்தில் 163 ஃப்ளோர்கள் உள்ளன. லிஃப்ட் தொழில்நுட்பத்தில் கட்டுமானப் பொறியாளர்கள் இன்றும் பல்வேறு ஆராய்ச்சிகள், மேம்பாடுகளைச் செய்து வருகின்றனர். எதிர்காலத்தில் லிஃப்ட்கள் கீழிருந்து மேலும் மேலிருந்து கீழும் செல்வது மட்டுமின்றி வலமிருந்து இடமும், இடமிருந்து வலமும் செல்லும். மேலும் அதிக கனம் கொண்ட உலோகக் கயிறுகள் உதவியுடன் 2-3 கி.மீ தூரம்கூட பயணிக்கும் ஆற்றலைப் பெரும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.