தூக்கம் ஏன் ஏற்படுகிறது தெரியுமா?

Sleep
Sleep
Published on

தூக்கம் என்பது தினசரி நமது உடலால் மேற்கொள்ளப்படும் மிக முக்கியமான உடலியல் செயல்பாடுகளில் ஒன்றாகும். தூக்கம் ஏன் ஏற்படுகிறது என்று பல விஞ்ஞானிகள் பல ஆய்வுகள் நடத்தி, தங்கள் கண்டறிந்த உண்மைகளை வெளியிட்டிருக்கிறார்கள். நம் உடலில் உள்ள உறுப்புகள் அனைத்தையும் அடக்கி ஆள்வது மூளை. நரம்பு மண்டலத்தில் முக்கியமான உறுப்பும் மூளையே. நம் உடலின் உள்ளும், புறமும் ஏற்படும் உணர்ச்சிகள் அனைத்தும் நரம்புகளின் வழியே மூளைக்கு செல்கின்றன.

நமது உடலின் தூக்கத்தைக் கட்டுப்படுத்தும் பகுதி இருப்பதாக ஒரு சில விஞ்ஞானிகள் கூறுகின்றனர். வேறு சிலரோ நரம்புக் கூட்டுப் பகுதிகளில் எதிர்ப்பு ஏற்பட்டு , தகவல்கள் விரைவாக செல்வதற்குத் தடை ஏற்படுவதால் தூக்கம் வருகிறது என்கின்றனர். இன்னும் சில விஞ்ஞானிகள், நாம் தினமும் செய்யும் வேலையின் திறனால் சேகரிக்கப்படும் கழிவுப் பொருட்களாகிய லேக்டிக் அமிலம் போன்ற உணர்ச்சியூட்டும் பொருட்கள் வெளியேற்றப்படுவதற்கு ஏற்பட்டுள்ள பழக்கம் தான் தூக்கமாகும் என்கிறார்கள். இதையே நாம், களைப்பினால் தூங்கினோம் என்கிறோம்.

நரம்பு மண்டலத்தில் உள்ள நரம்புகளின் இடையே உள்ள இணைப்புகள் தடைப்படுவதால் தூக்கம் வருகிறது என்று ஒரு சில விஞ்ஞானிகள் கூறுகின்றனர். மூளையின் 'ஹைப்போதலாமஸ்' பகுதியே தூக்கத்தைக் கட்டுப் படுத்துகிறது. எனவே இது தூக்கத்தைக் உண்டாக்கும் ஓர் இயந்திரம் என்று ஒரு சிலர் கூறுகின்றனர்.

தூக்கம் மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் அவசியமானது என்பதை நிரூபிக்க விஸ்கான்சின் மருத்துவ பல்கலைக்கழகம் முதலில் விலங்குகள் மீது சோதனை நடத்தியது. அச் சோதனையில் தெரியவந்த உண்மை, தொடர்ந்து தூக்கம் இல்லாவிடில் விலங்குகள் இறந்து விடும். விலங்குகளால் தூங்காமல் அதிகபட்சமாக 7 முதல் 30 நாட்கள் வரை தான் உயிர் வாழ முடியும். மனிதர்களுக்கும் தூக்கம் மிக அவசியம், இல்லாவிட்டால் நோய்வாய்ப்பட்டு இறக்க நேரிடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். மனிதன் அன்றாடம் 8 மணி நேரமாவது நன்றாக தூங்க வேண்டும் என்று கண்டுபிடித்துக் கூறப்பட்டுள்ளது.

குழந்தைகள் உடல் வளர்ச்சிக்கும், செல்கள் புதுப்பிக்கப் படுவதற்கும் அதிக நேரம் தூங்க வேண்டும். மூளைக்கு வேலை கொடுப்பவர்கள், உடலுக்கு வேலை கொடுப்பவர்களை விட சற்றுக் குறைவாகத் தூங்க வேண்டும் என்பது விஞ்ஞானிகள் கருத்து.

இதையும் படியுங்கள்:
இரவில் தூக்கம் வரவில்லையா? இந்த உடற்பயிற்சிகளை ட்ரை பண்ணிப் பாருங்களேன்! 
Sleep

மூளைப் பகுதியில் 'உறக்க மையம்' என்ற ஒன்று உள்ளது. இந்த உறக்க மையத்தை ரத்தத்தில் உள்ள கால்சியம் கட்டுப்படுத்துகிறது. உறக்க மையத்தில் வேண்டிய அளவு கால்சியம் சேர்ந்தவுடன் உறக்கம் வருகிறது. அப்படியானால், தூக்கமின்மை நோயால் தவிக்கும் மனிதர்களுக்கு உறக்கம் வருவதற்காக கால்சியத்தை உறக்க மையத்தில் செலுத்தினால் தூக்கம் வருமா என்றால்... 'வரும்' என்கிறார்கள். சில விலங்குகள் மீது இத்தகைய சோதனையைச் செய்து விஞ்ஞானிகள் நிரூபித்திருக்கிறார்கள்.

நாம் உறங்கும்போது உறக்க மையம் இரண்டு விதமாகச் செயல்படுகிறது. முதலில் இதன் இயக்கத்தால் மற்ற உறுப்புகளிலிருந்து மூளையின் தொடர்பு அற்றுப் போகிறது. இரண்டாவது, உடலின் மற்ற உறுப்புகளையும் இது தடுத்துச் செயலாற்ற வைக்கிறது. உறக்கத்தில் நமது மன ஆற்றலும், உணர்ச்சியும் தற்காலிகமாக நிலைத்துப் போகின்றன.

தூக்கத்தில் உடலானது பலவிதமான அசைவுக்கு உள்ளாகிறது. நாம் இரவுத் தூக்கத்தில் சராசரியாக 20 முதல் 40 தடவை புரண்டு படுக்கிறோம். ரத்த ஓட்டம் தொடர்ந்து நடைபெறுகிறது. இதயத் துடிப்பு சற்று குறைகிறது. ஜீரண உறுப்புகள் சரியாக இயங்குகின்றன. ஈரலும், சிறுநீரகமும் தொடர்ந்து செயலாற்றுகின்றன. உறக்கத்தில் உடல் வெப்பம் ஒரு சென்டி கிரேடு குறைகிறது. உடலில் சேர்ந்த கழிவுகளை வெளியேற்றும் வேலை தூக்கத்தின்போது விரைவில் நடக்கின்றது.

இதையும் படியுங்கள்:
மதியம் சாப்பிட்ட பிறகு தூக்கம் வருகிறதா? அச்சச்சோ, இது நல்லதில்லையே!
Sleep

தூக்கத்தின் அறிகுறியாக 'கொட்டாவி' யை சொல்வர். உடலில் நடைபெறும் ஒரு விதமான அனிச்சை செயல் தான் கொட்டாவி. அதாவது, மூளைக்கு தேவைப்படும் ஆக்ஸிஜன் அளவு குறையும் போது மூளை செயல்கள் களைப்படைகின்றன. இதனை தவிர்க்க நுரையீரலின் செயலியலைத் துரிதப்படுத்தவே கொட்டாவி என்ற நிகழ்வு ஏற்படுகிறது. ஒருவர் கொட்டாவி விடுவதைப் பார்த்தால் மற்றவர்களுக்கும் கொட்டாவி வரும் என்பது பொதுவான கருத்து. ஆனால் அது உண்மையில்லை.

ஒரு குறிப்பிட்ட வேலையில் ஒரு குழுவினர் ஈடுபட்டிருக்கும் போது, அவர்கள் அனைவருக்கும் புறச்சூழல் மற்றும் பணிச்சுமை ஒரே மாதிரி இருக்கும். எனவே களைப்பு மற்றும் சோர்வும் அனைவருக்கும் ஒரே மாதிரி ஏற்பட வாய்ப்பு உண்டு. அந்தச் சூழலில் அனைவருக்கும் கொட்டாவி வரலாம். மற்ற படி ஒருவரைப் பார்த்து மற்றவர்களுக்கும் கொட்டாவி வரும் என்பதெல்லாம் உண்மை இல்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com