நம்மில் பலருக்கும் மதிய உணவு சாப்பிட்ட பிறகு நன்றாக தூக்கம் வரும். காலை உணவுக்கு பிறகு சுறுசுறுப்பாக உணரும் நாம், மதிய உணவுக்கு பிறகு ஏன் சோர்வாக உணருகிறோம் என நினைத்துள்ளீர்களா? நாம் இந்த பதிவில் மதிய உணவிற்கு பிறகு ஏன் தூக்கம் வருகிறது? அதற்கான காரணம் என்ன என்பதை பற்றி பார்க்கலாம்.
Food Coma:
மதிய உணவிற்குப் பிறகு தூக்கம் வருவதை டிப் அல்லது ஃபுட் கோமா என்று கூறுவார்கள். மருத்துவ ரீதியாக இதற்கு Postprandial somnolence என்று பெயர்.
பெரும்பாலும் மதிய உணவிற்கு பிறகு தூக்கம் வருவதற்கு முக்கிய காரணம் ஒருவர் எடுத்துக் கொள்ளும் உணவுதான். உணவில் கார்போஹைட்ரேட் மற்றும் புரதம் அதிக அளவு இருந்தால் தூக்கம் வரும்.
டிரிப்டோபான் (Tryptophan) எனப்படும் அமினோ அமிலம் புரதம் நிறைந்த உணவில் உள்ளது. இது உடலில் செரோட்டனின் எனும் வேதிப்பொருளை உற்பத்தி செய்கிறது. இந்த செரோட்டனின் ஒருவரின் மனநிலை மற்றும் தூக்க நிலையை ஒழுங்குபடுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
எனவே உணவில் அதிக அளவு கார்போஹைட்ரேட் மற்றும் புரதம் நிறைந்திருந்தால் ஒருவருக்கு மந்தமாக இருக்கும், தூக்கமும் ஏற்படும்.
தூக்கத்தை ஏற்படுத்தும் மெலடோனின் என்னும் ஹார்மோனை மூளை உற்பத்தி செய்கிறது. சோளம், பார்லி, காளான், கோதுமை போன்ற உணவுப் பொருள் மெலடோனின் உற்பத்தியை ஊக்குவிக்கிறது.
மதியம் அதிக அளவு உணவு எடுத்துக்கொண்டால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும். இதனால் மந்தநிலை ஏற்படும். மேலும் அதிக அளவு சாப்பிடும் போது உணவை செரிமானம் செய்ய அதிக ஆற்றல் தேவைப்படுகிறது. இதனால் மூளைக்குச் செல்ல வேண்டிய ரத்த ஓட்டம் குறைந்து, இரைப்பைக்கு சென்று செரிமான வேலையை ஆரம்பிப்பதால் மூளை மந்தமாகி தூக்கம் ஏற்படுகிறது.
தடுப்பதற்கான வழி:
சரிவிகித உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். காலை உணவு உட்கொள்ளமால் நேரடியாக மதிய உணவு சாப்பிடும் போது அதிகமாக உணவு எடுத்துக்கொள்வோம். எனவே காலை உணவு கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரே நேரத்தில் அதிகமாக சாப்பிடாமல் குறிப்பிட்ட இடைவெளியில் மதிய உணவு உட்கொள்ளலாம். இயலாதவர்கள் மதிய உணவை குறைத்து பழங்கள், நட்ஸ் அவ்வப்போது சாப்பிடலாம்.
மதியம் சாப்பிட்ட பிறகு தூக்கம் வராமல் இருக்க ஒரே இடத்தில் உட்காராமல் சிறிது நேரம் நடந்தால் தூக்கம் வராமல் இருக்கும்.
மதிய உணவிற்கு முன் காபி, கிரீன் டீ குடிப்பதை தவிர்க்கவும். ஏனெனில் இதில் உள்ள காஃபின் உணவிற்கு பின் தூக்கத்தை ஏற்படுத்தும். இதற்கு பதிலாக நீர் அருந்தலாம்.
அடிக்கடி மது அருந்துதல் அல்லது உணவிற்கு பிறகு மது அருந்துவதால் தூக்க சுழற்சியில் மாறுதல் ஏற்பட்டு மதிய உணவிற்கு பிறகு சோர்வும், தூக்கமும் ஏற்படும்.