விமான விபத்துகளுக்கு எண்டு கார்டு! இந்திய விஞ்ஞானி கண்டுபிடித்த மாயக்கண்ணாடி ‘திருஷ்டி’!

இறக்குமதித் தேவையை மூன்றில் ஒரு பங்கு விலையாகக் குறைத்த உள்நாட்டுத் தொழில்நுட்பத்தின் பிரமிக்க வைக்கும் வரலாறு.
சுபா ஐயங்கார் - Make in India Science
சுபா ஐயங்கார் - Make in India Science

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on: 

2026 -ம் ஆண்டு பத்ம ஸ்ரீ விருது பெற்ற சிஎஸ்ஐஆர் (CSIR)ரை சேர்ந்த விஞ்ஞானி டாக்டர் சுபா ஐயங்காரின் பணி தேவையான வெளிச்சத்தைப் பெறத் தவறிவிட்டதோ என்று தோன்றுகிறது. விமானப் பாதுகாப்பு, வானிலை கண்காணிப்பு தொழில்நுட்பங்கள் மற்றும் மேம்பட்ட விண்வெளி உந்துவிசை அமைப்புகள் (aerospace propulsion systems) ஆகியவற்றில் அவர் ஆற்றிய பங்களிப்பு களுக்காக, அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.

'திருஷ்டி' (Drishti-Visibility Measuring System) என்று அழைக்கப்படும் விமான நிலைய வானிலை மற்றும் ஓடுபாதை பார்வைத் திறனை அளவிடும் அமைப்பை அவர் உருவாக்கினார்.இந்தத் தொழில்நுட்பம், விமானிகள் மற்றும் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர் களுக்கு நிகழ்நேர ஓடுபாதை காட்சி வரம்பு (RVR) தரவுகளை வழங்குகிறது. இது குறைந்த பார்வை நிலைகளில் விமானம் புறப்படும்போதும் தரையிறங்கும்போதும் முடிவெடுப்பதற்கு உதவுகிறது.

சுபா ஐயங்கார் - Make in India Science
shubha venkatesha iyengar - Make in India Science

இந்தத் தொழில்நுட்பம் 25 மீட்டருக்கும் குறைவான தூரம் முதல் 2,000 மீட்டருக்கும் அதிகமான தூரம் வரையிலான பார்வைத்திறனை அளவிடுகிறது. குறிப்பாக வட இந்தியாவில் குளிர்காலப் பனிமூட்டச் சூழ்நிலைகளின் போது, பார்வைத்திறன் குறைவாக இருக்கும் காலங்களில் விமானத் தாமதங்களையும், விமான வழி மாற்றங் களையும் குறைப்பதே இதன் நோக்கமாகும்.

டாக்டர் ஐயங்காரின் 'திருஷ்டி' அமைப்பு முதலில் புது தில்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது இந்திய விமான நிலையங்களிலும் விமானப்படையாலும் கட்டாயமாக்கப்பட்டு சுமார் 141 இடங்களில் செயல்படுகிறது.

திருஷ்டி அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பு, இந்திய விமான நிலையங்கள் இதுபோன்ற அளவீடுகளுக்காகப் பெருமளவில் இறக்குமதி செய்யப்பட்ட டிரான்ஸ்மிட்டர்களையே சார்ந்திருந்தன. இறக்குமதி செய்யப்படும் மாற்றுக்கருவிகளின் விலையில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு விலையில் இது இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்படுகிறது என்பதே இதன் தனிச்சிறப்பு.

டாக்டர் ஐயங்காரின் பணிகள் இந்தியாவின் பாதுகாப்புத் திறனை மேம்படுத்தவும் பங்களித்துள்ளன.ஏவுகணை அமைப்புகள் மற்றும் விண்வெளித் திட்டங்களுக்கான முக்கிய உள்நாட்டுக் கூறுகளை அவர் உருவாக்கினார். ராம்ஜெட் இயந்திரங்கள், வாகனத்தின் முன்னோக்கிய இயக்கத்தைப் பயன்படுத்தி உள்வரும் காற்றைச் சுருக்குவதால், அவை அதிவேகப் பயன்பாடுகளுக்கு ஏற்றவையாக இருக்கின்றன.

அதே சமயம், ஸ்க்ராம்ஜெட் இயந்திரங்கள் எரிதலின் போது மீயொலி வேகத்தில் இயங்குகின்றன. இதற்கு உதவியாக 3000K வெப்பநிலை மற்றும் 'மேக் 5' (Mach 5) வேகத்தைத் தாங்கக்கூடிய உள்நாட்டுத் தொழில் நுட்பத்திலான உதிரிப்பாகங்களை அவர் உருவாக்கினார். ஏவுகணை அமைப்புகள் மற்றும் ராம்ஜெட்-ஸ்க்ராம்ஜெட் (ramjet-scramjet) என்ஜின்களுக்குத் தேவையான இந்த உதிரிப்பாகங்கள், இந்தியாவின் 'அக்னி' ஏவுகணை முயற்சிகளுக்கும் உறுதுணையாக இருந்துள்ளன.

இந்தியாவின் தொழில்நுட்பத் தன்னிறைவுக்கு அவர் ஆற்றிய பங்களிப்புகளுக்காகச் சர்வதேசப் பாராட்டுகளையும் எண்ணற்ற விருதுகளையும் பெற்றார். அவரது ஆய்வுக் கட்டுரைகள் நாசா (NASA) அமைப்பால் அதிகாரப்பூர்வ அறிக்கைகளாக வெளியிடப்பட்டு, சர்வதேசக் கவனத்தைப் பெற்றுள்ளன.

சுபா ஐயங்கார் - Make in India Science
சுபா ஐயங்கார் - Make in India Science

இவர் 212 ஆராய்ச்சிக் கட்டுரைகள் 6 காப்பீடு உரிமைகள் , 30 பதிப்பு வணிக முத்திரைகள் ஆகியவற்றுக்குச் சொந்தக்காரர். தமது பணி வாழ்க்கையில், டாக்டர் ஐயங்கார் தனது பங்களிப்புகளுக்காக 43 விருதுகளைப் பெற்றுள்ளார். இதில், உள்நாட்டுத் தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் தன்னிறைவை ஊக்குவித்ததற்காக 2015-ஆம் ஆண்டு வழங்கப்பட்ட, தேசிய அளவிலான முதல் 'மேக் இன் இந்தியா' (Make in India) விருதும் அடங்கும்.

ஐயங்கார், தேசிய விண்வெளி ஆய்வகங்களில் (NAL) சிறப்பு விஞ்ஞானியாகப் பணியாற்றியதுடன், விமான நிலையக் கருவியாக்கப் பிரிவின் தலைவராகவும் பணிபுரிந்துள்ளார்.

பெங்களூரு சென்ட்ரல் கல்லூரியில் தனது இயற்பியல் இளங்கலை (கௌரவ) மற்றும் முதுகலை பட்டப் படிப்புகளில் (1980) மைசூர் பலகழை கழகத்தில் முதல் இடத்தைப் பிடித்ததுடன், இயற்பியலில் பல தங்கப் பதக்கங்களையும் பெற்றுள்ளார். இவரது கல்வியின் சிறப்பைப் பார்த்து நேர்முக எழுத்துத் தேர்வோ இல்லாமல் நேரடியாக இவரை 1982ல் CSIR வேலைக்கு எடுத்துக் கொண்டது.

ஒன்பது உடன்பிறப்புகளில் இளையவரான டாக்டர் சுபா, தொழில்நுட்ப ஆராய்ச்சித் துறைகளில் மிகச் சில பெண்களே நுழைந்த ஒரு காலகட்டத்தில் துணிச்சலாக இறங்கி உள்நாட்டு அறிவியல் கண்டுபிடிப்புகள் மூலம் நடைமுறைச் சவால்களுக்குத் தீர்வு காண்பதில் முன்னோடியாகவும் விளங்குகிறார்.

ஓய்வு பெற்ற பின்னரும், பொதுச் சேவைக்கான தனது வாழ்நாள் அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கும் வகையில், இந்த 70 வயதிலும், அழைக்கப்படும் போதெல்லாம் நிறுவனங்களுக்கு அவர் தொடர்ந்து ஆலோசனைகள் வழங்கி வருகிறார்.

நீண்டகால பொது ஆராய்ச்சி எவ்வாறு நாட்டின் அன்றாட வாழ்க்கையை அமைதியாக வடிவமைக்கிறது என்பதற்கு டாக்டர் சுபாவின் வாழ்க்கை எடுத்துக்கட்டாகத் திகழ்கிறது.

இதையும் படியுங்கள்:
ஒருமுறை சார்ஜ் போட்டா 142 கி.மீ ஓடுமா? பெட்ரோல் பங்கிற்கு குட்பை சொல்லுங்க மக்களே!
சுபா ஐயங்கார் - Make in India Science
logo
Kalki Online
kalkionline.com