Technology - காதில் இருக்கும் எதிரி… வயர்லெஸ் இயர்பட்ஸ் மூலம் கசியும் ரகசியங்கள்!

ear buds
ear buds
Published on

இன்றைய நவீன யுகத்தில், இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் காதுகளிலும் ஒரு சிறிய வெள்ளை நிறக் கருவி இருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது. பாட்டு கேட்பது, அலுவலக மீட்டிங்கில் பேசுவது, பயணம் செய்யும்போது படம் பார்ப்பது என எல்லாவற்றிற்கும் இந்த வயர்லெஸ் இயர்பட்ஸ் ஒரு அத்தியாவசியப் பொருளாக மாறிவிட்டது. 

வயர் சிக்கல் இல்லாத சுதந்திரத்தை இது தருவதால், மக்கள் இதை விரும்பிப் பயன்படுத்துகிறார்கள். ஆனால், இந்தச் சுதந்திரத்திற்குப் பின்னால் ஒரு மிகப்பெரிய ஆபத்து ஒளிந்திருக்கிறது. நாம் பாதுகாப்பானது என்று நினைத்துப் பயன்படுத்தும் இந்தக் கருவிகள், நம் தனிப்பட்ட வாழ்க்கையை வேவு பார்க்கும் கருவிகளாக மாறக்கூடும் என்று சமீபத்திய ஆய்வுகள் எச்சரிக்கின்றன.

நாம் அனைவரும் தொழில்நுட்பம் வேகமாகச் செயல்பட வேண்டும் என்று விரும்புகிறோம். இயர்பட்களைக் காதில் வைத்த உடனே அது போனுடன் இணைய வேண்டும் என்பதற்காக நிறுவனங்கள் Fast Pair என்ற வசதியை அறிமுகப்படுத்தின. இந்த வசதிதான் இப்போது ஹேக்கர்களுக்குக் கிடைத்திருக்கும் ஒரு வாசல் கதவு. 

பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த இணையப் பாதுகாப்பு வல்லுநர்கள் நடத்திய ஆய்வில், இந்தத் தொழில்நுட்பத்தில் உள்ள ஓட்டையைப் பயன்படுத்தித் திருடர்கள் நம் சாதனத்திற்குள் நுழைய முடியும் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கு அவர்கள் Whisper Pair என்று பெயரிட்டுள்ளனர்.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: திருடனுக்கு திருடன்..!
ear buds

கண்ணுக்குத் தெரியாத திருடன்!

பொதுவாக ஒரு சாதனத்தை ஹேக் செய்ய வேண்டும் என்றால், அதற்கான அனுமதி தேவைப்படும் அல்லது ஏதாவது ஒரு லிங்க் மூலம் வைரஸ் அனுப்பப்படும். ஆனால் இந்த முறையில் ஹேக்கர்கள் உங்கள் அனுமதி இல்லாமலே, சுமார் 50 அடி தூரத்தில் இருந்தே உங்கள் இயர்பட்ஸுடன் இணைப்பை ஏற்படுத்தி விடுவார்கள். இதில் மிகவும் ஆபத்தான விஷயம் என்னவென்றால், உங்கள் போனில் எந்தவிதமான எச்சரிக்கை மணியோ அல்லது அறிவிப்போ வராது. உங்களுக்குத் தெரியாமலேயே உங்கள் சாதனம் வேறொருவரின் கட்டுப்பாட்டிற்குச் சென்றுவிடும்.

ஒட்டுக்கேட்கப்படும் ரகசியங்கள்!

ஒருமுறை ஹேக்கர்கள் உங்கள் சாதனத்துடன் இணைந்துவிட்டால், பிறகு நீங்கள் பேசுவது எதுவும் ரகசியம் இல்லை. நீங்கள் உங்கள் நண்பரிடம் பேசும் கிசுகிசுக்கள், வங்கி அதிகாரியிடம் பேசும் கணக்கு விவரங்கள் அல்லது அலுவலக ரகசியங்கள் என அனைத்தையும் அவர்களால் துல்லியமாகக் கேட்க முடியும். 

அதுமட்டுமல்லாமல், அவர்கள் நினைத்தால் உங்கள் அழைப்பைத் துண்டிக்கலாம் அல்லது பாடல்களை மாற்றலாம். இன்னும் ஒரு படி மேலே போய், நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்ற இருப்பிடத்தைக் கூட அவர்களால் கண்டுபிடிக்க முடியும். நாம் பாட்டு கேட்டுக்கொண்டு நிம்மதியாக இருக்கிறோம் என்று நினைப்போம், ஆனால் மூன்றாவதாக ஒரு நபர் நம்மை வேவு பார்த்துக்கொண்டிருப்பார்.

இதையும் படியுங்கள்:
ஆறாம் அறிவு பெற்ற இயந்திரங்கள்... ஆபத்தை உணர்ந்து தப்பிக் கொள்ளும் புதிய தொழில்நுட்பம்!
ear buds

தற்காத்துக்கொள்வது எப்படி?

தொழில்நுட்பம் வளர வளர ஆபத்துகளும் வளர்ந்துகொண்டே தான் இருக்கும். இதிலிருந்து தப்பிக்க விழிப்புணர்வு மட்டுமே ஒரே ஆயுதம். தேவை இல்லாத நேரங்களில் ப்ளூடூத் வசதியை அணைத்து வைப்பது மிகச் சிறந்த பழக்கம். மென்பொருள் அப்டேட்களைத் தள்ளிப்போடாமல் உடனுக்குடன் செய்துவிட வேண்டும். மக்கள் கூட்டம் அதிகம் உள்ள பொது இடங்களில் மிகவும் முக்கியமான அல்லது ரகசியமான அழைப்புகளைப் பேசுவதைத் தவிர்ப்பது நல்லது. அவ்வப்போது உங்கள் போனுடன் எந்தெந்தச் சாதனங்கள் இணைக்கப்பட்டிருக்கின்றன என்பதைச் சரிபார்ப்பது உங்களைப் பாதுகாக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com