AI தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் எதிர்காலத்தில் லட்சக்கணக்கான வேலை இழப்புகள் ஏற்படலாம் என ஏற்கனவே நாம் அச்சத்தில் இருக்கும் நிலையில், டெக் ஜாம்பவானான எலான் மஸ்க் அதை உறுதிப்படுத்தும் விதமாக பேசியது மக்கள் மத்தியில் அச்சத்தை மேலும் அதிகரித்துள்ளது.
நேற்று பாரசீல் நடந்த நிகழ்வில் வீடியோ கான்ஃபரன்ஸ் வழியாக கலந்து கொண்ட எலான் மஸ்க், “AI தொழில்நுட்பத்தால் எல்லா வேலைகளும் அழிக்கப்படும். இது ஒரு கட்டத்திற்கு மேல் நம் அனைவருக்குமே வேலை இல்லாமல் செய்துவிடும். இதை மோசமான மாற்றம் என சொல்ல முடியாது என்றாலும், எதிர்காலத்தில் நீங்கள் கட்டாயம் வேலை பார்த்தாக வேண்டும் என்ற நிலை இருக்காது. நீங்கள் விருப்பப்பட்டால் பார்க்கலாம் அல்லது வாழ்க்கையை நன்றாக அனுபவிக்கலாம். வாழ்க்கை என்பது ஒரு பொழுதுபோக்கு போல மாறிவிடும். உங்களுக்கு பதிலாக எல்லா வேலைகளையும் ரோபோக்கள் பார்த்துக் கொள்ளும். வீட்டில் கூட உங்களுக்குத் தேவையான பொருட்களை அவை கொண்டு வந்து கொடுக்கும் அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்துவிடும்.
ஆனால், எதிர்காலத்தில் மனிதர்கள் எந்த வேலையும் இல்லாமல் எப்படி மனத்திருப்தி அடைவார்கள் என்பது மிகப்பெரிய கேள்விதான். இயந்திரங்களும், கணினிகளும், ரோபோக்களும் நம்முடைய வேலைகளை நம்மை விட சிறப்பாக செய்யும் என்றால், இவ்வுலகில் நம்முடைய பங்கு என்ன? வேலை எதுவும் செய்யாமல் நாம் என்ன செய்யப் போகிறோம்? வாழ்க்கையின் அர்த்தம் என்னவாக இருக்கும்? இருப்பினும் அதுபோன்ற தருணங்களில் மனிதர்களின் பங்களிப்பு சில விஷயங்களில் இருக்கும் என நம்புகிறேன். AI தொழில்நுட்பம் இயங்குவதற்கு நம்முடைய பங்களிப்பு இருக்கும். இந்த நிலை ஏற்பட்டால் மக்களுக்கு ஒரு சராசரி வருவாய் என்ற ஒன்று இருக்க வேண்டும்.” என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
அதாவது, எலான் மஸ்கின் கருத்துப்படி உலகில் உள்ள எல்லா நபர்களுக்கும் Universal Basic income என்பது இருக்க வேண்டும். ஒவ்வொரு நாட்டின் அரசாங்கமும் அந்த நாட்டின் நிலைக்கு ஏற்றார் போல, சராசரியான சம்பளத்தை வழங்க வேண்டும். சமீபகாலமாகவே தொழில்நுட்பத்தின் வளர்ச்சி அசுர வேகத்தில் இருந்து வருவதால், எலான் மஸ்க் சொல்லும் அனைத்தும் நடந்துவிடும் போலதான் தெரிகிறது. இருப்பினும் எதிர்காலத்திற்கு ஏற்ற வகையில் நாம் நம்முடைய திறன்களை வளர்த்துக் கொண்டு, வாழ்வதற்கான மாற்றங்களை செய்துகொள்ள வேண்டும்.