உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், Neuralink என்ற நிறுவனம் தொடங்கி மனித மூளையில் சிப் பொருத்தும் ஆய்வை செய்து வருவது நாம் அனைவருக்குமே தெரியும். இந்நிலையில் மனித மூளையில் வெற்றிகரமாக சிப்பை பொருத்தி சாதனை படைத்துள்ளது அந்நிறுவனம்.
கடந்த 2016 இல் மனித மூளையை கணினியில் இணைப்பதை நோக்கமாகக் கொண்டு Neuralink என்ற நிறுவனத்தை எலான் மஸ்க் தொடங்கினார். இதில் மனித மூளையின் ஆற்றல்களைத் தெரிந்து கொண்டு, பார்க்கின்சன் போன்ற நோய்களைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்டு இந்நிறுவனம் தொடங்கப்பட்டதாக சொல்லப்பட்டது. மேலும் கணினியுடன் மனித மூளையை இணைப்பது மூலமாக செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி பல விஷயங்களை கண்டறிய முடியும் என்றும் கூறி வந்தனர்.
அதன்படி “நேற்று வெற்றிகரமாக மனித மூலையில் சிப் பொருத்தினோம். சிப் பொருத்தப்பட்ட நபர் படிப்படியாக குணமடைந்து வருகிறார்” என எலான் மஸ்க் தனது ட்விட்டர் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதைப் பயன்படுத்தி முதலில் Neuron Spike எப்படி இருக்கும் என கண்டறியப்பட்டதாகவும் அவர் கூறினார். கடந்த மே மாதம்தான் மனித மூலையில் சிப் பொருத்தும் ஆய்வுக்காக அமெரிக்கா ஒப்புதல் அளித்தது.
மனித மூளையில் பொருத்தப்பட்ட சிப் நம் தலை முடியின் அடர்த்தியில் 20% மட்டுமே இருக்கும். இதை நியூரலிங்க் நிறுவனம் வெற்றிகரமாக ஒரு நபருக்கு பொருத்தி, அந்த சாதனத்தின் மின் முனைகளை மூளையின் முக்கிய பகுதிக்கு அனுப்பியுள்ளது. இந்த மின்முனைகள் வழியாக மூளைக்கான சிக்னல்கள் அனுப்பப்படுகிறது, மேலும் மூளையிலிருந்து சிக்னல்கள் பெறப்படுகிறது. இந்த சிக்னல்கள் கணினியில் பகுப்பாய்வு செய்யப்பட்டு, நாம் புரிந்து கொள்ளும்படி அல்காரிதம்களாக மாற்றப்படுகிறது.
நியூரலிங்க் நிறுவனத்தின் இந்த சோதனை மிகப் பெரிய விஷயமாகப் பார்க்கப்படுகிறது. ஒருவேளை இது முழு வெற்றியடைந்தால், எந்த கருவிகளும் இல்லாமல் நேரடியாக மூளையைப் பயன்படுத்தி கணினி, கார் போன்றவற்றுடன் நாம் தொடர்பு கொள்ளும் வாய்ப்புள்ளதாக தொழில்நுட்ப வல்லுநர்கள் கூறுகின்றனர்.