

செயற்கை நுண்ணறிவு என்ற மாய வலைக்குள் நாம் அனைவரும் ரொம்பவே ஆழமாக சிக்கிவிட்டோம். வீட்டுப்பாடம் செய்வதில் ஆரம்பித்து பெரிய சாப்ட்வேர் எழுதுவது வரை எல்லாவற்றுக்கும் நாம் ஏஐ தொழில்நுட்பத்தைதான் நம்பி இருக்கிறோம். ஆனால் இது எந்த அளவுக்கு பாதுகாப்பானது என்பது மிகப்பெரிய விவாதமாக மாறியுள்ளது.
குறிப்பாக குழந்தைகள் மற்றும் மனநலம் பாதிக்கப் பட்டவர்களை ChatGPT போன்ற ஏஐ செயலிகளிடம் இருந்து மிக தூரமாக தள்ளிவைக்க வேண்டும் என பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் ஒரு மிக பெரிய குண்டை தூக்கி போட்டுள்ளார். அவர் ஏன் திடீரென இப்படி ஒரு கடுமையான எச்சரிக்கையை கொடுத்தார் என்பதை பற்றி இப்போது பார்க்கலாம்.
கனடாவில் நடந்த கொடூரம்!
சமீபத்தில் கனடா நாட்டில் உள்ள ஒரு சிறிய நகரத்தில் உள்ள பள்ளிக்கூடத்தில் ஒரு பயங்கரமான துப்பாக்கிச் சூடு சம்பவம் அரங்கேறியது. இந்த தாக்குதலை நடத்திய நபர், அதற்கு முந்தைய சில நாட்களாக சாட்ஜிபிடி செயலியிடம் இது குறித்து மிக தீவிரமாக உரையாடி இருக்கிறார். வன்முறையை எப்படி அரங்கேற்றுவது என்பது தொடர்பான பல விஷயங்களை அவர் அந்த செயலியிடம் கேட்டுள்ளார்.
இதில் மிகப்பெரிய சோகம் என்னவென்றால், அந்த நபரின் விசித்திரமான உரையாடல்களை ஓபன் ஏஐ நிறுவனத்தின் தானியங்கி பாதுகாப்பு சிஸ்டம் முன்கூட்டியே கண்டுபிடித்து எச்சரிக்கை செய்துள்ளது. ஆனால், இதனை காவல்துறையிடம் தெரிவிக்க வேண்டுமா என அந்த நிறுவனத்தின் ஊழியர்கள் தங்களுக்குள்ளேயே விவாதித்துவிட்டு, கடைசியில் இது சட்டப்படி அதிகாரிகளிடம் சொல்ல வேண்டிய அளவுக்கு பெரிய ஆபத்து இல்லை என அதை அப்படியே அலட்சியமாக விட்டுவிட்டனர். தாக்குதல் நடந்த பிறகுதான் அந்த நபரின் கணக்கை நிறுவனம் முடக்கியது.
நீதிமன்ற படியேறிய விவகாரம்!
இந்த அதிர்ச்சியான தகவல் வெளியே வந்ததும் பெரிய பூகம்பமே வெடித்துவிட்டது. துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த ஒரு மாணவனின் தாய், அந்த தாக்குதலை திட்டமிட சாட் ஜிபிடி தான் முழுமையாக வழிகாட்டி உதவி செய்தது என குற்றம் சாட்டி, கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா உச்ச நீதிமன்றத்தில் ஓபன் ஏஐ நிறுவனம் மீது ஒரு மாபெரும் வழக்கை தொடர்ந்துள்ளார்.
நிலைமை கைமீறி போவதை உணர்ந்த ஓபன் ஏஐ நிறுவனம், இந்த சம்பவம் ஒரு விவரிக்க முடியாத மாபெரும் துயரம் என அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும், நிஜ உலக அச்சுறுத்தல்களை ஏஐ மூலம் கண்டுபிடித்து தடுப்பதற்கான பாதுகாப்பு அம்சங்களை நிபுணர்களுடன் இணைந்து தீவிரமாக மேம்படுத்தி வருவதாகவும் அந்த நிறுவனம் ஒரு விளக்கத்தை கொடுத்துள்ளது.
எலான் மஸ்க் Vs சாம் ஆல்ட்மேன்!
இந்த ஒரு சம்பவத்தை கையில் வைத்துக்கொண்டு எலான் மஸ்க் சும்மா இருக்கவில்லை. தனது எக்ஸ் தளத்தில் ஓபன் ஏஐ நிறுவனத்தை மிக கடுமையாக விமர்சித்து வருகிறார். சாட்ஜிபிடி தான் பல மரணங்களுக்கு காரணம் என்றும், உங்களின் அன்புக்குரியவர்களை அதனிடம் இருந்து தள்ளி வையுங்கள் என்றும் அவர் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். இதற்கு தகுந்த பதிலடி கொடுக்கும் விதமாக ஓபன் ஏஐ நிறுவனத்தின் சிஇஓ சாம் ஆல்ட்மேன் களத்தில் குதித்தார்.
எலான் மஸ்க்கின் டெஸ்லா கார் ஆட்டோபைலட் மோடில் விபத்துகளை ஏற்படுத்துவதையும், மஸ்க் உருவாக்கிய க்ரோக் ஏஐ செயலியின் பாதுகாப்பு குறைபாடுகளையும் சுட்டிக்காட்டி இருவருக்கும் இடையே ஒரு மிகப்பெரிய ஆன்லைன் போரே நடந்து வருகிறது.
ஒரு காலத்தில் ஏஐ தொழில்நுட்பத்தின் பாதுகாப்பிற்காக ஒன்றாக குரல் கொடுத்த இவர்கள் இருவரும், இப்போது ஒருவரை ஒருவர் பொதுவெளியில் மிக மோசமாக தாக்கி பேசுவது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.