இந்த ஆண்டு வெளிவரவருக்கும் ஆண்ட்ராய்டு 15 OS-ல், தொலைந்த ஸ்மார்ட்போன்கள் சுவிட்ச் ஆப் ஆகி இருந்தாலோ அல்லது நெட்வொர்க் இல்லாத இடத்தில் இருந்தாலோ கண்டுபிடிக்கும் புதிய அம்சம் வெளிவரவுள்ளது.
வரும் மே 14ஆம் தேதி மக்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் google நிறுவனத்தின் IO 2024 கிரியேட்டர் மாநாடை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதில் ஆண்ட்ராய்டு சாதனங்களின் பாதுகாப்பு குறித்த அப்டேட்கள் வெளியிடப்படவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த மாநாட்டில், ஆண்ட்ராய்டு 15 அப்டேட்டில் உள்ள பாதுகாப்பு அம்சங்கள் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுவரை, காணாமல் போன மொபைல் போன்கள் அவை, ஸ்விட்ச் ஆஃப் செய்யாமல் இருக்கப்படும் போதுதான் கண்டுபிடிக்கப்படும் என்ற நிலையில் இருந்தது. இந்த அம்சத்தை ஆண்ட்ராய்டு 15 அப்டேட்டில் முற்றிலும் மாற்றியமைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த அம்சம் ஆப்பிள் சாதனங்களில் உள்ள பைண்ட் பை நெட்வொர்க் போலவே செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதனால் பயனர்கள் இன்டர்நெட் அல்லது நெட்வொர்க் இல்லாமலேயே தங்களின் காணாமல் போன மொபைல் ஃபோன்களைக் கண்டறியலாம். 2023 இல் நடந்த google மாநாட்டில், ஆஃப்லைன் ட்ராக்கிங் மற்றும் மூன்றாம் தரப்பு டிராக்கர்களை உள்ளடக்கிய கூகுளின் பைண்ட் மை நெட்வொர்க் எக்ஸ்டென்ஷன் செயல்படுத்தப்படும் என்று சொல்லப்பட்டது. ஆனால் இன்றுவரை அது செயல்படுத்தப்படவில்லை.
ஏனெனில் இந்த அம்சத்தால் தனியுரிமை பிரச்சனைகள் இருப்பதால் அதை மேம்படுத்த பல முயற்சிகளை google நிறுவனம் மேற்கொண்டு வந்தது. மேலும் இதற்கு மூன்றாம் தரப்பு டிராகர்களின் உதவி தேவைப்பட்டதால் தாமதமான நிலையில், இப்போது அந்த குறைகள் அனைத்தையும் நிவர்த்தி செய்து புது அப்டேட்டை ஆண்ட்ராய்டு 15-இல் கூகுள் நிறுவனம் வெளியிட உள்ளது.
இந்த அம்சத்தைப் பயன்படுத்தி பல இக்கட்டான சூழ்நிலைகளில் ஆண்ட்ராய்டு பயனர்கள் தங்களின் சாதனங்களைக் கண்டறியலாம். இந்த அம்சம் முதலில் கூகுள் பிக்சல் 9 ஃபோன்களில் அறிமுகமாகலாம் என சொல்லப்படுகிறது. இந்த அம்சத்தை பயன்படுத்துவதற்கு ஸ்மார்ட் ஃபோனின் ஹார்டுவேரில் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்பதால், இது எப்படி வேலை செய்யும் என்பதை அறிய 2024 google மாநாடு எதிர்பார்ப்பு மிக்க ஒன்றாக மாறியுள்ளது.